நீதி கிடைக்க மாசாணியம்மன் கோயில் மிளகாய் பரிகாரம்!

94

நீதி கிடைக்க மாசாணியம்மன் கோயில் மிளகாய் பரிகாரம்!

மற்றவர்களால் ஏமாற்றப்பட்டவர்கள், வஞ்சிக்கப்பட்டவர்கள் அம்மனிடம் வேண்டிக் கொண்டு மிளகாய் அரைத்து பூசினால், அவர்களுக்கு தண்டனை கிடைப்பதோடு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும் வழங்குகிறாள் ஆனைமலை மாசாணியம்மன்.

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலைப் பகுதியில் அமைந்துள்ளது மாசாணியம்மன் கோயில். இந்தக் கோயிலில் உள்ள மற்ற சன்னதிகள் நீதிக்கல் மற்றும் மகா முனியப்பன். மாசாணியம்மனை சுற்றி வலம் வர தீராத நோய்களும் தீரும். மயான மண்ணில் கோயில் அமைந்திருப்பதாலும், அம்மனும் மயான மண்ணில் குடி கொண்டிருப்பதால், இங்குள்ள அம்மன் மாசாணியம்மன் என்று பெயர் பெற்றாள்.

ராமபிரான், இலங்கையை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஆனைமலைக்கு வந்து சென்றாக சொல்லப்படுகிறது. நன்னன் என்ற குறுநில மன்னன் இந்தப் பகுதியை ஆட்சி செய்து வந்தான். அப்போது அவனுக்கு சொந்தமான மாந்தோப்பிலிருந்து ஒரு கனி கனிந்து ஆற்றில் விழுந்து மிதந்து சென்றதாம். அதை கரையிலிருந்த பெண் ஒருத்தி எடுத்து தின்ன முற்பட்டுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த மன்னன் அவளை வாளால் வெட்டி தண்டித்து விட்டான். எந்த தவறும் செய்யாத பெண்ணை அவன் இப்படி தண்டித்துவிட்டானே என்று உரியவர்கள் எடுத்து கூறியுள்ளார்கள். எனினும், இறந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை. இதனால், எந்த தவறும் செய்யாத தன்னை தண்டித்த மன்னனை தண்டிக்கும் பொருட்டு அந்த இடத்திலே இப்படி மாசாணியம்மனாக உருவெடுத்தாக புராணக் கதை ஒன்று சொல்லப்படுகிறது.

துக்க நிவாரணி:

மாசாணியம்மனின் இந்தக் கோயிலில் வழிபாடு செய்பவர்களுக்கு பில்லி சூனியம், மாந்திரீகம் ஏவல் ஆகியவைகளால் பாதிப்புகள் ஏற்பட்டாலும் அவற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

மிளகாய் பூசும் நீதிக் கல்:

முனியப்பரின் தெற்குப்பகுதியில் லிங்க வடிவத்திலான கல் ஒன்று உள்ளது, அந்தக் கல்லின் மீது மிளகாய் அரைத்துத் துவையலாகப் பூசப்படுகிறது. வஞ்சிக்கப்பட்டவர்களும், சொத்துக்களை பறிகொடுத்தவர்களும் திருட்டு போன்ற ஏமாற்றங்களுக்கு உள்ளானவர்களும் இங்கு வந்து அம்மனிடம் முறையிட்டு விட்டு கோயிலின் தென் மேற்கு பகுதியில் உள்ள ஆட்டுக்கல்லில் மிளகாயைத் துவையலாக அரைத்தெடுத்து வந்து லிங்க வடிவில் ஆன கல் மீது பூசிவிட்டுச் செல்வதை வழக்கத்தில் கொண்டுள்ளனர்.

இதன் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.