நோய், நொடி நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

97

நோய், நொடி நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!

திருப்பூர் மாவட்டம் கருவலூர் என்ற ஊரில் உள்ள கோயில் கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் கோயில். இந்தக் கோயிலில் கருணாகர வெங்கட ரமணப் பெருமாள் மூலவராக காட்சி தருகிறார். ஸ்ரீ தேவி – பூதேவி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடைபெறும். மாத ஏகாதசி நாட்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுகிறது.

மார்கழி மாதம் முழுவதும் பெருமாளுக்கு காலை 5 மணிக்கு சிறப்பு, அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெறுகிறது. வைகுண்ட ஏகாதசி அன்று அதிகாலையில் பரமபத வாசல் திறக்கப்பட்டு அதன் வழியாக உற்சவர் புறப்படுவது கண்கொள்ளாக் காட்சியாகும். மாதத்தில் பல நாட்கள் காலை 6.30 மணியிலிருந்து 6.50 மணிக்குள்ளாக பெருமாள் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்தக் காட்சியை தரிசிப்பது மிகழும் சிறப்பு.

அர்த்த மண்டபத்தில் மகா விஷ்ணு, ராமானுஜர், கோதண்டராமர் ஆகியோர் அருள் பாலிக்கின்றனர். கருவறைக்கு வெளியே ஜெயன், விஜயன் துவார பாலகராக வீற்றிருக்க உள்ளே மூல மூர்த்தியாக ஸ்ரீ தேவி பூதேவி சமேத கருணாகர வெங்கட ரமண பெருமாள் நின்ற கோலத்தில் 8 அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு பெருமாள் தனது இடது கையை இடுப்பில் வைத்தும், வலது கையை அபய முத்திரையில் வைத்துள்ளதும் சிறப்பு.

நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இந்தக் கோயிலில் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து தங்களது நிவர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

நவபாஷாணங்களால் உருவான இவர்களை வழிபடுபவர்களுக்கு நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும். பெருமாளுக்கு பாலபிஷேகம் நடக்கும் போது வெள்ளை நிற பால் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது. பெருமாளுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அருந்தினால் நோய், நொடி நீங்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள கருடன் மற்றும் ஆஞ்சநேயரின் சிற்பம் சோழர் கால சிற்பிகளின் கலைத்திறனுக்குச் சான்றாக விளங்குகின்றன. நவபாஷாணத்தால் உருவான பெருமாளும், தேவியரும் சேவை சாதிக்கும் தலம் தான் கருவலூர். அவிநாசி திருத்தலத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளி முதலை உண்ட பாலகனை மீட்க வறண்ட தாமரைக் குளத்தில் நீர் நிரப்புமாறு இறைவனிடம் பிரார்த்திக்கிறார்.

கருமேகம் சூழ மகாதேவன், மகாவிஷ்ணு, பிரம்மா என்று மும்மூர்த்திகளும் எழுந்தருளியுள்ளனர். தலையில் கங்கையுடன் பார்வதி சமேதராக கங்காதரன் எழுந்தருளி கங்கையை இறக்கிவிட்டார். அந்த வெள்ளம், நள்ளாற்றில் பெருகிச் சென்று தாமரைக் குளத்தை அடைந்தது. நீர்ப்பெருக்கில் தோன்றிய முதலை பின்னர் பாலகனை உமிழ்ந்தது.

இந்நிகழ்ச்சி நடப்பதற்காக கருவிலிருந்து மழை பொழிந்த காரணத்தால், இந்த ஊர் கருவலூர் என்று பெயர் பெற்றது. இங்குள்ள நள்ளாற்றில் நீராடி, கங்காதேஸ்வரரை வழிபட்ட காமதேனு, இறைவன் அருளால் கருவைச் சுமந்து கன்றை ஈன்றதால், கருவலூர் என்று அழைக்கப்படுவதாகவும், சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் எழுந்தருளிய இத்தலத்தின் மகிமை அறிந்த வீர ராஜேந்திர சோழன் கிபி 1226 ஆம் ஆண்டில் சோழர் மற்றும் விஜயநகர நாயக்கர் கால கட்டடக் கலையுடன் இணைத்து இங்கு பெருமாளுக்கு கோயில் கட்டினான்.

கல்வெட்டுகளில் வீர ராஜேந்திர விண்ணகரம் என்ற ஊரின் பெயர் குறிப்பிடப்படுகிறது. ஒரு காலகட்டத்தில் நவபாஷாணத்திற்காக கயவர்கள் தாயாரது பாதங்களைச் சுரண்டி எடுத்துள்ளனர். அப்போது பெருமாள் சிறு திருவிளையாடலாக தாயாரது காலில் ரத்தம் வர வைத்ததாகவும் அதைக் கண்டு பயந்து போன கயவர்கள், தங்களின் தவறுக்காக வருந்தி பெருமாளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.