பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர செய்ய வேண்டிய பரிகாரம்!

124

பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர செய்ய வேண்டிய பரிகாரம்!

திருச்சி மாவட்டம் உறையூரில் உள்ளது வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் கோயில். இந்தக் கோயிலில் சுப்பிரமணியர் மூலவராக காட்சி தருகிறார். இந்த ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்திருக்கிறது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் விசாலமான மகா மண்டபம். மயிலும் பலிபீடமும் கருவறைக்கு எதிரே இருக்கின்றன. அர்த்த மண்டப நுழைவு வாசலில் இடதுபுறம் பிள்ளையாரும், வலதுபுறம் வீரவாகுவின் திருமேனியும் காணப்படுகின்றன.

அடுத்துள்ள கருவறையில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியராக, முருகப்பெருமான் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தல முருகப்பெருமானுக்கு நான்கு திருக்கரங்கள். மேல் வலது கரத்தில் வஜ்ர வேலும், இடது கரத்தில் திரிசூலமும் தாங்கியுள்ள இவர், கீழ் இரு கரங்களில் அபய, வரத ஹஸ்த முத்திரைகளுடன் சிரித்த முகத்தினராய் தோற்றமளிக்கிறார். முருகப்பெருமானின் வாகனமான மயிலின் முகம் தென்திசை நோக்கி இருப்பது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது.

பிரிந்து வாழும் தம்பதியரில் கணவனோ அல்லது மனைவியோ தொடர்ந்து 7 வாரங்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த ஆலயம் வந்து, இங்குள்ள முருகப்பெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்தால், கணவன்-மனைவி பிணக்கு தீர்ந்து, இருவரும் இணைவார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அப்படி ஒன்றிணைந்தவர்கள், தம்பதியராக இணைந்து வந்து இத்தல முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம் செய்து தங்களது நன்றிக்கடனை செலுத்துகின்றனர்.

ஆலய பிரகாரத்தின் மேற்கு திசையில் நாகர்களும், வடகிழக்கில் நவக்கிரக நாயகர்களும் அருள்பாலிக்கின்றனர். மகா மண்டபத்தில் நின்று கொண்டு கருவறை இறைவனை நாம் தரிசித்த பின், சற்றே தலையை உயர்த்திப் பார்த்தால் நம் கண்கள் வியப்பில் விரியும். ஆம்… மண்டபத்தின் உச்சியில் ஆதிலட்சுமி, தான்ய லட்சுமி, தைரிய லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜயலட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி என அஷ்டலட்சுமிகளின் திருவுருவங்கள் கருங்கல்லில் செதுக்கப்பட்டு, சதுரவடிவில் பொரிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களைக் காணும் போது நாம் மனம் லயித்து மெய் மறந்து நிற்பது நிஜம்.

லட்சுமி தேவிக்கு வடநாட்டில் பதினாறு வகையான திருக்கோலங்களைத் தருவார்கள். நம் தென்நாட்டில் லட்சுமி தேவிக்கு எட்டு வகையான திருக்கோலங்கள் தருவதுண்டு. அனைத்து வளங்களையும் தருபவள் ஆதிலட்சுமி. பசுமையும் பயிர்களும் செழிக்க வைப்பவள் தான்ய லட்சுமி, துணிவையும் தைரியத்தையும் தருபவள் தைரிய லட்சுமி. புகழையும் பெயரையும் அளிப்பவள் கஜலட்சுமி. குழந்தை பாக்கியம் தருபவள் சந்தான லட்சுமி, வெற்றியை அள்ளித் தருபவள் விஜய லட்சுமி, கல்வித் தருபவள் வித்யா லட்சுமி, இருக்கும் செல்வத்தை நிலைக்கச்செய்து, மேலும் பொருள் சேர அருள்பவள் தனலட்சுமி. மகாலட்சுமியின் வடிவங்களான இந்த அஷ்டலட்சுமிகளையும் நாம் ஒரே நேரத்தில் இந்த ஆலயத்தில் தரிசிக்க இயலும் போது, நம் மனம் மகிழ்ச்சியில் நிறைந்து நிம்மதி பெறுவது உண்மையே.

இங்கு முதலில் வீரவாகுவுக்கு தீபாரதனை செய்த பின்னரே, முருகப்பெருமானுக்கு தீபாரதனை காட்டுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆலயத்தில் மாதந்தோறும் திருவிழா நடைபெறும். சித்திரை முதல் நாள், வைகாசி விசாகம், ஆனி, ஆடி, ஆவணி கிருத்திகை, புரட்டாசி நவமி, ஐப்பசி சஷ்டி, கார்த்திகை சோமவாரம், மார்கழி 30 நாட்கள் வழிபாடு, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்ற நாட்களில் முருகப்பெருமானுக்கும், அவரோடு இருக்கும் வள்ளி, தெய்வானைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன.

ஐப்பசி கந்த சஷ்டியின் போது ஆலயம் விழாக்கோலம் பூண்டிருக்கும். ஆறு நாட்கள் நடைபெறும் திருவிழாவைத் தொடர்ந்து ஏழாம் நாள் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொள்வார்கள். மாத சஷ்டி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தின் போது இறைவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகின்றன. கார்த்திகை மாத கார்த்திகையின் போது சொக்கப்பனை உற்சவமும் சிறப்பாக நடைபெறுகிறது. நாகதோஷம் உள்ளவர்கள் இங்குள்ள நாகர்களுக்கு அபிஷேகம் செய்து ஆராதனை செய்தால், தோஷத்தின் கடுமை வெகுவாகக் குறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியருக்கு இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமான், ஆபத்பாந்தவனாக இருக்கிறார். தம்பதி சமேதராய் இங்கு அருள்பாலிக்கும் முருகன், பிரிந்த தம்பதிகளை இணைத்து வைப்பது வியப்பில்லை அல்லவா?

சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கும் இந்த ஆலயத்தில் தினமும் ஒரு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் உள்ள இறைவனை தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.

அமைவிடம்:

திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள உறையூர் பாளையம் பஜாரில் இந்த முருகன் ஆலயம் அமைந்திருக்கிறது.