பிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்

129

சின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் எளிய பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

பிரிந்த உறவுகளை இணைக்கும் எளிய பரிகாரம்ஒருவர் வளரும் சூழலே அவரது முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எப்படி எல்லாம் வளர்ந்தோமோ அப்படி எல்லாம் நம் பிள்ளைகள் வளர முடியவில்லையே என்ற ஆதங்கம் எல்லோருக்குள்ளும் இருக்கிறது. நாம் வளர்ந்த சூழலே கூட்டு குடும்ப சூழல். ஆனால் இன்று கணவனும் மனைவியும் இணைந்து வாழ்ந்தாலே கூட்டு குடும்பம் என்று சொல்லும் அளவுக்கு நம் பாரம்பரியமான கூட்டு குடும்ப அமைப்பை இழந்து இருக்கிறோம்.

இன்றைய காலசூழலில் பல குடும்பங்களில் நிம்மதி இல்லாமல் போக காரணம் உறவுகளுக்குள் ஏற்படும் சிக்கல்கள் தான். சின்ன சின்ன மனக்கசப்புகள் கூட மிகப்பெரிய பிளவுகளை உண்டாக்கி விடுகிறது. அப்படி பிரிந்துபோன உறவுகளை ஆன்மீகம் மூலம் மீண்டும் சேர்க்க முடியும். ஆன்மீகம் என்பதே அன்பை அடிப்படையாக கொண்டது தான். அந்த ஆன்மீகத்துக்கு அன்பை உணர்த்தி உறவுகளை இணைக்கும் வலிமை உண்டு.

பிரிந்த உறவுகளை ஆன்மீகம் மூலம் இணைப்பது பற்றி இந்த வாரம் பார்க்கலாம். பிரிந்த உறவுகளை சின்ன சின்ன பரிகாரங்கள் மூலமாகவே மீண்டும் சேர்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் அதிகமாக கணவன் – மனைவி உறவில் தான் பிளவு ஏற்படுகிறது. கணவன் மனைவி தாம்பத்யம் என்பது தான் குடும்பத்துக்கு அடிப்படை. மற்ற எந்த உறவுகளாக இருந்தாலும் விட்டுவிட்டு வாழ்ந்து விடலாம். ஆனால் இணையாகவும் துணையாகவும் இருக்க வேண்டிய தம்பதிகளே பிரிந்தால் இருவருக்குமே அது இழப்பு தான்.

மனதுக்குள் பாசமும் பிரியமும் இருந்தாலும் சில சமயங்களில் சூழ்நிலையால் கூட நமது உறவுகளை பிரிந்து இருக்கிறோம். அவர்களுடன் மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று ஏங்குகிறோம். பிரிந்த உறவுகளில் யாராவது ஒருவராவது மீண்டும் சேர்ந்து விட மாட்டோமா என்று நினைப்பார்கள். இன்னொருவர் ஒருவேளை பகைமை பாராட்டலாம். இல்லை சேரும் எண்ணம் இருந்தாலும் தயக்கம் தடுக்கலாம். ரத்த பந்தங்களுக்குள் இருக்க கூடிய பாசப்பிரிவினைகள் யாராவது மூன்றாவது நபரால் தான் ஏற்பட்டு இருக்கும்.

அந்த மூன்றாவது நபருக்கு இவர்களது ஒற்றுமை கண்களை உறுத்தி இருக்கலாம். ஏதோ ஒரு காரணத்தால் திட்டமிட்டு பிரித்து இருக்கலாம். சிலர் இதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்கள். இன்று நிறைய குடும்பங்கள் சிதறி கிடக்கின்றன. தாய் – தந்தை, தாய் – மகன், தாய் – மகள், சம்பந்தி, மாமியார் – மருமகள், மாமனார் – மருமகன், அண்ணன் – தம்பி, அக்கா – தங்கை உள்பட அனைத்து உறவுகளிலுமே பிரிவுகள் ஏற்படுகின்றன. இதற்கான காரணத்தை பொறுமையாக யோசித்து பார்த்தால் மிக சிறிய காரணமாக தான் இருக்கும்.

அந்த காலத்தில் குடும்பங்களில் இருக்கும் பெரியவர்கள் இப்படி பிரிந்த உறவுகளை சேர்த்து வைக்கும் பணியை மேற்கொள்வார்கள். குடும்பத்தில் பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதோடு அவர்களது சொல்லுக்கு மதிப்பு கொடுத்து கட்டுப்பட்ட காலம் அது. இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான குடும்பங்களில் பெரியவர்கள் இருப்பது இல்லை. தனி குடும்பமாக தான் வசிக்கிறோம்.

அப்படியே ஒன்று இரண்டு குடும்பங்களில் பெரியவர்கள் இருந்தாலும் அவர்களது பேச்சுக்கு நாம் செவி கொடுப்பது இல்லை. நமக்குள் ஏற்படும் சின்ன சின்ன மனக்கசப்புகளை தீர்க்க பெரியவர்கள் முயற்சித்தாலும் மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோ குணம் மீண்டும் இணைவதை தடுத்துவிடுகிறது. பழைய விஷயங்களை கிளறி பார்த்து பகைமையை வளர்த்துக் கொள்கிறார்கள்.

மனித வாழ்க்கை என்பது அந்த காலத்தில் 100, 120 ஆண்டுகள் கூட வாழ்ந்து இருக்கிறார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மனிதனின் அதிகபட்ச ஆயுளே 70 ஆண்டுகளுக்குள் தான். 70 வயது தொடுவதையே ஆச்சர்யமாக பார்க்கிறோம். மிக சிலரே 80,90 வயது வரை வாழ்கிறார்கள். இந்த யதார்த்தத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை என்பது குறுகிக்கொண்டே செல்கிறது.

இந்த சின்ன வாழ்க்கையை அன்புடன் வாழ்வதை விட்டு ஏன் பகையை வளர்க்கிறோம்? இந்த வாழ்க்கையை முடித்து விட்டு செல்லும்போது எதையுமே எடுத்து செல்வது கிடையாது. அப்படி இருக்கும்போது ஏன் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமல், புரிந்துகொள்ள வாய்ப்பு தராமல் சுயநலமாக வாழ வேண்டும்? இதை சில நிமிடங்கள் யோசித்தாலே போதும். சில இடங்களில் திருமணம் வரை இருக்கும் ஒற்றுமை திருமணத்துக்கு பின்னர் இருப்பது இல்லை. இப்படி நெருங்கிய உறவுகளில் ஏற்படும் ஏதாவது ஒரு உறவையாவது நிச்சயம் பாதிக்கும். மன நிம்மதியை குலைக்கும்

பரிகாரம்

சின்ன சின்ன மனக்கசப்புகளால் பிரியும் உறவுகளை மீண்டும் சேர்ப்பதற்கான பரிகாரத்தை பார்க்கலாம். இந்த பரிகாரம் குறிப்பிட்ட உறவுக்கு தான் என்று கிடையாது. கணவன் – மனைவி முதல் அனைத்து வித உறவுகளுக்குமே செய்யலாம். இது மிகவும் எளிய பரிகாரம்.

ஏழு கிராம்புகளை எடுத்துக்கொள்ளவும். அந்த கிராம்புகள் சிதைக்கப்பட்டு இருக்கவோ, உடைக்கப்பட்டு இருக்கவோ கூடாது. கிராம்புகள் முழுதாக பூவுடன் இருக்க வேண்டும். ஞாயிறு அன்று இந்த பரிகாரத்தை தொடங்கவேண்டும். ஒரு முழு கிராம்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு சுவாமி அறையில் ஒரு ஆசனம் விரித்து அமர்ந்துகொள்ளவும். கிராம்பை கையில் வைத்துக்கொண்டு எந்த உறவு மீண்டும் இணைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அந்த உறவின் பெயரை சொல்லவும். விளக்கை ஏற்றி வைத்து பூஜை செய்யவும். உறவின் பெயரை 21 முறை சொல்லவும். அவர்கள் மீண்டும் பழையபடி சேரவேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.

அடுத்து அந்த கிராம்பை அடுப்பில் காட்டியோ அல்லது சாம்பிராணி போடும் தூவகாலில் வைத்தோ சுட்டுவிட வேண்டும். நன்றாக எரியவிட வேண்டும். இது முதல் ஞாயிறு அன்று செய்ய வேண்டியது. அடுத்த ஞாயிறு அன்று இன்னொரு கிராம்பை எடுத்து இதேபோல் செய்யவும். தொடர்ந்து 7 வாரங்கள் இதை செய்யவேண்டும். இதை செய்யும்போது பெண்களுக்கு மாதவிடாய் போன்ற இயற்கை இடர்பாடுகள் ஏற்பட்டால் அந்த ஒரு வாரம் மட்டும் நிறுத்தி வைத்துவிட்டு அடுத்த வாரம் முதல் தொடர்ந்து செய்யலாம். கணக்கு விடுபட்டதாக கருதவேண்டாம்.

கிராம்புக்கு உறவுகளை சேர்த்து வைக்கும் வலிமை உண்டு. பழங்குடி மக்கள் இந்த பரிகார முறையை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். வட நாட்டிலும் இந்த பரிகார முறை வழக்கத்தில் இருக்கிறது. பழங்குடி மக்கள் என்பவர்களே நம் முன்னோர்கள் தானே… சில மாநிலங்களில் இந்த கிராம்பு பரிகாரத்தை அனுமனுக்கான பூஜையாக செய்கிறார்கள். இது நம் பெரியோர்கள் கண்கூடாக கண்ட உண்மை. நம்பிக்கை தான் வாழ்க்கை. நம்பிக்கை தான் ஆன்மீகம். எனவே விரைவிலேயே உங்களது பிரிந்த உறவுகள் மீண்டும் சேர்வார்கள்.