போகர் பரிகாரம்: நாக தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்!
நாக தோஷம் நீங்க போகர் சித்தர் அருளிய போகர் 1200 என்ற நூலில் விரிவாக விளக்கியுள்ளார். இந்த பரிகாரம் செய்வதால் அந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், அவரது சந்ததியினரும் தங்களை நாக தோஷத்திலிருந்து காத்துக் கொள்ள முடியும்.
ஜோதிடத்தின்படி நாக தோஷம் என்பது திருமண ஸ்தானமான 7ஆம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்திருப்பதால் திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதோடு, 2, 8 ஆகிய இடங்களில் ராகு, கேது பார்வை இருந்தாலும் தோஷம் ஏற்படக் கூடும்.
இந்த பரிகாரத்தை நாக சதுர்த்தி நாளில் செய்வது நல்லது. ஆடி அல்லது ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை கருட பஞ்சமிக்கு முந்தைய நாள் சதுர்த்தியை நாக சதுர்த்தி என்கின்றனர். இந்த நாக சதுர்த்தி நாளில் விரதமிருந்து நாக பிரதிகளுக்கு பூஜை செய்து வழிபாடு செய்வதை நாக சதுர்த்தி விரதம், நாக சதிர்த்து திதி என்கின்றனர்.
இந்த நாளில் அரசமரத்திற்கு அடியில் நாக சிலை பிரதிஷ்டை செய்ய வேண்டும். அந்த நாக சிலையானது, எந்த பீடத்தின் மீது இருப்பது போன்றும், அந்த நாகங்கள் மேல் சிவலிங்கத்தினை ஏந்திய வண்ணம் இருப்பது போன்று உள்ள நாகத்தின் கருங்கல் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர் மட்டுமின்றி, சந்ததியினரும் நாக தோஷத்திலிருந்து முற்றிலுமாக விடுபட முடியும் என்று போகர் குறிப்பிட்டுள்ளார்.
நாக சிலை செய்யும் முறை குறித்து போகர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது நாக சிலை இரண்டரை அடிக்கும் குறைவான உயரம் (பீடத்தை சேர்த்து), பாம்புகள் இரண்டு அல்லது ஐந்து சுற்றுக்கள் பிண்ணிக் கொண்டிருப்பது போல இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
பிரதிஷ்டை செய்யும் தினத்தில் முழு விரதம் இருக்கலாம். அல்லது பாலும், பழமும் மட்டுமே உணவாக எடுத்துக் கொண்டு பய பக்தியுடன் விரதமிருந்து செய்ய வேண்டும்.
இப்படி நாக தோஷம் உள்ளவர்கள் போகரின் குறிப்புகளின் படி நாக சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தால், அவர்களுக்கு இருக்கும் நாக தோஷம் நிரந்தரமாக விட்டு நல்வாழ்வு வாழலாம்.