மன நிம்மதிக்கு செய்ய வேண்டிய பரிகாரம்!

148

மன நிம்மதிக்கு செய்ய வேண்டிய பரிகாரம்!

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு என்ற ஊரில் உள்ள கோயில் ஐயாறப்பன் திருக்கோயில். இந்தக் கோயிலில் ஐயாறப்பன், பஞ்ச நதீஸ்வரர் மூலவராக காட்சி தருகிறார். தரும சம்வர்த்தினி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். கோயிலில் வில்வம் மரம் தல விருட்சமாக திகழ்கிறது.

ஐயாறப்பன் கோயிலில் சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்தக் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்று கொண்டு ஐயாறப்பா என்று உரக்க குரல் கொடுத்தால் 7 முறை திருப்பிக் கேட்கிறது. பொதுவாக கோயிலுக்கு சென்றாலே கோயிலைச் சுற்றி வலம் வர வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தக் கோயிலில் மூலவரான ஐயாறப்பனை சுற்றி வலம் வரக் கூடாது என்கிறார்கள்.

ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றுவது போன்று இந்தக் கோயிலில் சிவபெருமானுக்கு வடைமாலை சாற்றுகிறார்கள். இத்தலத்தில் தெற்கு கோபுர வாசலில் வீற்றிருக்கும் ஆட்கொண்டேஸ்வரருக்கு வடைமாலை சாற்றும் பழக்கம் உள்ளது. சில நேரங்களில் லட்சம் வடைகளைக் கொண்டு வடைமாலைகள் கூட சாற்றப்படுவது உண்டு என்று சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலில் உள்ள தியான மண்டபமானது கருப்பட்டி மற்றும் சுண்ணாம்பு கலந்து கட்டப்பட்டுள்ளது. இந்தப் பொருட்களை சேகரித்து வைக்க மிகப்பெரிய குழிகள் தோண்டப்பட்டிருந்தன. இதைக் கட்டியவர்களுக்கு தங்கமும், வெள்ளியும் கூலியாக கொடுக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

திருமணத் தடை நீங்கவும், குழந்தைப் பாக்கியம் கிடைக்கவும், கல்வியில் சிறந்து விளங்கவும் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்யப்படுகிறது. பிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள், சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும் வஸ்திரம் சாற்றியும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

இங்கு அம்பாள் அறம் வளர்த்த நாயகி எனப்படுகிறாள். ஆண்கள் தவம் செய்வதை விட குடும்பத்திலுள்ள பெண்கள் தர்மம் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். அதன் அடிப்படையில் உலகத்தில் உள்ள உயிர்களுக்கு எல்லாம் படியளக்கும் நாயகியாக பெண்களுக்கு தர்மத்தின் அவசியத்தை எடுத்துக்காட்டும் விதத்தில் தருமசம்வர்த்தினி என்ற பெயரில் அம்பாள் இங்கே எழுந்தருளி உள்ளாள். எல்லா நாட்களும் நல்ல நாட்களே என்பதை வலியுறுத்தும் வகையில் அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

இந்த ஊரில் உள்ள இறைவனுக்கு அர்ச்சகர் ஒருவர் பூஜை செய்து வந்தார். ஒருநாள் காசிக்கு சென்றதால் அவரால் பூஜைக்குரிய நேரத்திற்கு வரமுடியவில்லை. இந்த தகவல் அந்த ஊரில் உள்ள அரசனுக்கு சென்றது. இதையடுத்து அரசன் உடனடியாக கோயிலுக்கு சென்று பார்த்தபோது அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார். ஆனால், காசிக்கு சென்ற அர்ச்சகரோ மறுநாள் தான் வீடு திரும்பினார். அந்த அர்ச்சகரை ஊர்க்காரர்களும், அரசனும் ஆச்சரியமாக பார்த்தனர்.

இறைவன் அர்ச்சகர் மீது கொண்ட அன்பால் அர்ச்சகரின் வடிவில் வந்து, தனக்குத்தானே அபிஷேகம் செய்து கொண்டது தெரிய வந்தது. தன்னை வணங்குபவர்களிடம் அன்பு காட்டுபவர் ஐயாறப்பர். அப்பர் பெருமான் இத்தலத்தில் வழிபட்டு கைலாய காட்சியை பெற்றார். எனவே இத்தலத்தில் வணங்கினால் கைலாயத்திற்கே சென்றதாக ஐதீகம்.

மானசரோவர் ஏரியில் மூழ்கிய அப்பர் பெருமான் இந்த திருத்தலத்தில் உள்ள குளத்தில் மூழ்கி எழுந்தார். சூரிய புஷ்கரணி தீர்த்தம் எனப்படும் இந்த குளம் மிகவும் விசேஷமானது. இங்கே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். எனவே திருவையாறு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது.

இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். அவரது ஜாடமுடி கருவறையின் பின்பக்கமும் பரந்து விரிந்து கிடப்பதாக ஐதீகம். சிவபெருமானின் ஜடாமுடியை மிதிக்க கூடாது என்பதற்காக கோயிலை சுற்றி வலம் வருவதற்கு இந்தக் கோயிலில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தெட்சிணாமூர்த்தி மிகவும் விசேஷமானவர். இவரை பெருமாள் வழிபட்டிருக்கிறார். பெருமாள் வழிபட்ட குரு தமிழகத்திலேயே இந்தக் கோயிலில் மட்டும் தான் இருக்கிறது. ஆகையால் இவருக்கு ஹரி உரு சிவயோக தெட்சிணாமூர்த்தி என்று பெயர். இவர் முயலகனுக்குப் பதிலாக ஆமையை காலால் மிதித்த வண்ணம் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கிறார்.

நவக்கிரகங்களில் இது சூரிய ஸ்தலமாகும். சூரிய பகவான் இந்தக் கோயிலில் பூஜித்துள்ளார். சூரியன் இந்தக் கோயிலில் மேற்கு திசை நோக்கி காட்சி தருகிறார். இந்தக் கோயிலானது 5 பிரகாரங்களைக் கொண்டுள்ளது. இந்தக் கோயிலில் உள்ள முக்தி மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்தால் மன நிம்மதி கிடைக்கின்றது.

நந்தீஸ்வர்ருக்கும், நந்திகேசவருக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நந்தீஸ்வரர் சிவபெருமான் முன் காளை வடிவில் இருப்பார். நந்தி கேசவர் திருக்கைலாய பரம்பரையை உருவாக்கியவர். தருமபுரம் ஆதினம், திருவாவடுதுறை ஆதினம் ஆகியவை திருக்கைலாய பரம்பரையைச் சேர்ந்தவை. சிலாது மகரிஷியின் மகனாக அவதரித்தவர் நந்தி கேசவர்.

பிறக்கும் போது இந்தக் குழந்தைக்கு 4 கைகள் இருந்தன. அவர், இந்தக் குழந்தையை ஒரு பெட்டியில் வைத்துவிட்டு மூடி திறந்தார். அப்போது அந்தக் குழந்தைக்கு இருந்த 4 கைகளில் 2 கைகள் நீங்கி அழகாக தெரிந்தது. குழந்தையை திருவையாறு தலத்தில் விட்டுச் சென்றார். பரமேஸ்வரன் அந்தக் குழந்தைக்கு அம்பிகையின் பால், நந்தி வாய் நுரை நீர், சைவ தீர்த்தம், அமிர்தம், சூரிய புஷ்கரணி தீர்த்தம் ஆகிய 5 வகையான அபிஷேகம் செய்தார்.

இதன் காரணமாக இத்தல இறைவன் ஐயாறப்பர் என்று அழைக்கப்படுகிறார். வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு, காவிரி ஆறு, குடமுருட்டி ஆறு என்று 5 ஆறுகள் ஓடுவதால் இந்த ஊருக்கு ஐயாறு என்று பெயர். சிவபெருமான் இந்த ஊரில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பதால் இத்தல இறைவன் ஐயாறப்பன் என்று அழைக்கப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.