மன நிம்மதி கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

124

மன நிம்மதி கிடைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

கோயம்புத்தூர் மாவட்டம் திருமூர்த்தி மலை என்ற ஊரில் உள்ள கோயில் அமணலிங்கேஸ்வரர் கோயில். இந்தக் கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒரே மூர்த்தியாக சுயம்புவாக தோன்றிய காட்சி தருகின்றனர்.

ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே

திகம்பராய தீமஹி

தந்நோ தத்த பிரசோதயாத்’

இந்த தத்தாத்ரேய காயத்திரி மந்திரத்தை தினசரி ஜெபித்து வழிபட,  நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து வளமுடன் காணப்படும்  என்கிறார் யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

மும்மூர்த்திகளின் மனைவியர்களான பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகியோருக்கு தாங்களே உலகில் சிறந்த பதிவிரதைகள் என்ற கர்வம் உண்டானது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள ஈரேழு பதினான்கு    லோகங்களிலும் சஞ்சாரம் செய்யும் நாரதரிடம் முப்பெரும் தேவியர்  கேட்டார்கள்.

நாரதர் முப்பெரும் தேவியரிடம், அத்ரி மகரிஷியின் மனைவி அனுசுயா தேவிதான் சிறந்த கற்புக்கு அரசி என்று சொன்னதை கேட்டு அனுசுயா தேவி மீது பொறாமை கொண்டனர் .

முப்பெரும் தேவியரும் தங்கள் கணவர்களிடம் அனுசுயாவின் கற்பை சோதனை செய்யும்படி கூறியதால் சிவன், விஷ்ணு, பிரம்மா மூவரும், முனிவர் வேடம் பூண்டு, மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில்  உடுமலை திருமூர்த்திமலையிலுள்ள அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர்.

முனிவர்களுக்கு உணவளிப்பதற்காக பலகாரங்களை தயார் செய்த அனுசுயாதேவி. உணவு பரிமாற போகும்போது, முனிவர் வேடத்தில் இருந்த முப்பெரும்தேவர்களும், நாங்கள் நிர்வாண நிலையில்தான் உணவருந்துவோம் என்றனர்.

தனது கணவர் அத்திரி மகரிஷியை மனதுக்குள் வேண்டி   வந்திருப்பது யார் என்பதை தெரிந்து கொண்ட அனுசுயாதேவி,  உணவருந்தும் முன்பு மூன்று முனிவர்களுக்கும் பாத பூஜை செய்ய       கமண்டலத்தில் இருந்து தண்ணீர் எடுத்து அவர்களின் பாதங்களில் தெளித்து மூன்று  முனிவர்களையும் மூன்று பச்சிளம் குழந்தைகளாக  மாற்றினாள்.

தவளவும் ஆரம்பிக்காத அந்த மூன்று பச்சிளம் குழந்தைகளை பார்த்தவுடன், தாய்மை உணர்வு தோன்றி, தனக்கு சுரந்த   தாய்ப்பாலை அந்த குழந்தைகளுக்கு கொடுத்து பசியாற்றினாள். பின்பு தொட்டிலில் இட்டு தூங்க செய்தாள். உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள்.

அனுசுயாதேவி மட்டும் மூம்முர்த்திகளுக்கும் தாயாக இருக்கும் மாபெரும் பேற்றினைப் பெற்றாள் என்று புராணம் கூறுகிறது. அனுசுயாவின் கற்பை பரிசோதிக்கச் சென்ற தங்கள் கணவன்மார்கள், பலகாலம் ஆகியும் இருப்பிடம் திரும்பாததை எண்ணி மனம் கலங்கிய முப்பெரும் தேவியர்கள், அனுசுயாவின் குடிலுக்கு வந்தனர்.

அங்கு மும்மூர்த்திகளும் குழந்தை வடிவில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்ட முப்பெரும் தேவியர் அனுசுயாவின் கற்பை எண்ணி மலைத்தனர். இதையடுத்து அனுசுயாவிடம் சென்ற அவர்கள், தாயே! கற்பில் சிறந்த உன்னை சோதிக்க எண்ணிய தவறை உணர்ந்து கொண்டோம். எங்கள் கணவர்களை, பழைய படியே உருமாற்றி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர்.

அனுசுயாதேவி, மும்மூர்த்திகளையும் பழைய உருவத்திற்கு மாற்றினார். பின்னர் மும்மூர்த்திகளும் அனுசுயா அத்ரி தம்பதியருக்கு ஆசி வழங்கி, என்ன வரம் வேண்டும்? என்று கேட்டனர்.

அதற்கு அனுசுயா அத்ரி தம்பதி,  “இறைவா! தாங்கள் மூவரும் எங்களுக்கு குழந்தையாக வேண்டும் அத்துடன் தாங்கள் மூவரும்  இணைந்து ஒரே தெய்வமாக இங்கு கோயில் கொண்டு பக்தர்களுக்கு  அருள வேண்டும்” என்ற வரங்களை வேண்டினர். வரம் அளித்த  மும்மூர்த்திகளும் அவர்கள் அம்சத்துடன் மூன்று குழந்தைகளை  உருவாக்கி அந்த குழந்தைகளை அனைத்து மூன்று முகங்கள், ஆறு  கைகள் கொண்ட ஒரே குழந்தையாக்கி அத்ரி மகரிசி அனுசுயா தம்பதியருக்கு தந்தனர்.

அந்த குழந்தை தத்தாத்ரேயன் என்று பெயர் சூட்டப்பட்டு அத்திரி மகரிஷி – அனுசுயாதேவி தம்பதியரால் வளர்க்கப்பட்டார். மார்கழி மாதம் பௌர்ணமி தினத்தில் தத்தாத்ரேயர் அவதார தினம் தமிழ்நாடு  தவிர நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வைகாசி மாதம் தேய்பிறை தசமி திதியில் தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன், மார்க்கண்டேயர் போலவே,   மும்மூர்த்தியரின் அம்சமான தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர்.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும். தத்தாத்ரேயர் உருவம் வித்தியாசமானது மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். காளையும் அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன

ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம்.

மும்மூர்த்தியர் அம்சமான தத்தாத்ரேயர் இன்றும் சிரஞ்சீவியாக   பூமியில் நம் இடையே சற்று வித்தியாசமான செயல்பாடுகளுடன்   மனித ரூபத்தில் சர்வ சாதாரண நடமாடிக்கொண்டிருக்கிறார்.  அவரை அடையாளம் காண்பது கடினம். அலங்காரங்கள் ஏதும்  இருக்காது. பக்தர்களுக்கு ஏதாவது  பெரிய பிரச்சனை ஏற்படப்போகும்  சமயத்தில் அங்கு வருவார்.  பிரச்சனையின் கடுமைக்காரணமாக சற்று ஆக்ரோஷமாக தெரிவார். யாரிடமும் பேசுவதில்லை. உறுமல்  சப்தம் மட்டும் வெளியிடுவார்.

அந்த பக்தனிடம் இருக்கும் ஏதாவது ஒரு  பொருளை பலவந்தமாக  பிடுங்கி வேறுபக்கம் எறிந்துவிடுவார். பின்பு  அந்த இடத்தை விட்டு  சென்று விடுவார். பக்தனுக்கு அவனுக்கு நேர இருந்த ஆபத்து பற்றியும்  தெரியாது; ஆபத்தை பிடுங்கி எறிந்ததும் தெரியாது. மற்ற  நேரங்களில் சாந்தமாகவும், அரூபமாகவும் இருந்து பக்தர்களின்  வேண்டுதல்களை நிறைவேற்றுகிறார். தத்தாத்ரேயரை வழிபட்டால் பித்ரு தோஷங்கள் நீங்கும்.

குருவுக்கு குருவான தத்தாத்ரேயர் பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கி வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார். இவர் நம்மை  சுற்றியுள்ள பூச்சி, பறவை, மனிதர்கள் போன்றவற்றின்  செயல்பாடுகளை ஆராய்ந்து அவற்றை குருவாக மதித்து   வழிகாட்டியாக கொண்டு வாழ 24 குருக்களை அடையாளம்  காட்டுகிறார்.

அத்துடன் மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் உடுமலை   திருமூர்த்திமலையில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒன்றாக சேர்ந்து ஸ்ரீ அமணலிங்கேஸ்வரர் என்ற பெயரில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த  கோயிலில் விநாயகர், சுப்பிரமணியர், சப்தகன்னிமார், கோயிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது.

இந்த அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் மூலம்  நீர்வரத்து பெறுகிறது. அதில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

அமாவாசை மற்றும் பௌர்ணமி முடிவதற்கு ஒரு மணி நேரம் முன்பும், முடிந்து ஒரு மணி நேரமும் ஆக சேர்ந்து 2 மணி நேரம் சோடசக்கலை நேரத்தில் மும்மூர்த்திகளை வணங்க தியானம் செய்யலாம். அல்லது மும்மூர்த்திகள் இணைந்த ஸ்ரீ அமணலிங்கேஸ்வரரை வணங்கி தியானம் செய்யலாம். அல்லது மும்மூர்த்திகள் இணைந்த அம்சம் கொண்ட ஸ்ரீ தத்தாத்ரேயரை வணங்கி  தியானம் செய்யலாம்.

இத்தலத்தில் இறைவன் குழந்தை வடிவில் அருள்பாலிப்பதால் பக்தர்கள் கேட்டதெல்லாம் கிடைக்கும். இது ஒரு குடைவரைக் கோயிலாகும். காலை 6.30 மணியிலிருந்து மாலை 6.30 வரை தொடர்ச்சியாக கோயில் திறந்திருக்கும்.