மாங்கல்ய பாக்கியம் நிலைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

63

மாங்கல்ய பாக்கியம் நிலைக்க செய்ய வேண்டிய பரிகாரம்!

பறவைகளின் அரசனாக விளங்கும் கருடன், மங்கள வடிவமாக கருதப்படுகிறார். திருமாலின் வாகனமாக இருக்கும் இவர், காசிபர்-கத்ரு தம்பதியினருக்கு மகனாவார். அமிர்தத்தை தேவலோகத்தில் இருந்து பூமிக்கு எடுத்து வந்த பெருமை இவரை சாரும்.

விஷ்ணுவின் வாகனமாவதால் இவரை பெரிய திருவடி என்றும் அழைப்பதுண்டு. வாசுகி என்னும் பாம்பை பூணூலாகவும், கார்கோடகன் என்னும் பாம்பை மாலையாகவும், ஆதிசேசனை இடது கால் நகத்திலும், பதுமம் மற்றும் மகாபதுமம் எனும் நாகர்களை காதணிகளாகவும், குளிகனை கழுத்தின் பின்புறத்திலும் அணிந்திருப்பவர் கருடன். ஒருவரை பாம்பு தீண்டி விஷம் ஏறினால் கருட வித்தியா மந்திரங்களை செபிப்பதன் மூலம் விஷ முறிவு ஏற்படும் என்று  கூறப்படுகிறது.

பெருமாள் கோவில்களுக்கு செல்வோர் கருடனை வழிபட்ட பின்னரே மூலவரை வழிபட வேண்டும் என்பது வைணவ ஆகமத்தின் நியதியாகும். கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கையில் கருடன் வந்து வட்டமிட்டால் மட்டுமே அந்த கும்பாபிஷேகம் பூர்த்தியடைகிறது. வானத்தில் கருடனைப் பார்ப்பதும் அவன் குரலைக் கேட்பதும் நல்ல சகுனமாகும். சில்பாமிருதம் என்ற நூலில் கோயில்களில் நடக்கும் கும்பாபிஷேக சமயத்தில்  இரட்டைக் கருடன் மேலே வட்டமிடுவது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. இவ்வளவு பெருமைகளையுடைய கருடனை தரிசிப்பதும் கருட பஞ்சமி  விரதத்தைக் கடைப்பிடிப்பதும் சகல பலன்களையும் தரும்.

கருட பஞ்சமி விரதம்:

கருட பஞ்சமி நாளில் பெண்கள் விரதமிருந்து கருடனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். மகப்பேறு கிடைக்கும். செல்வம் பெருகும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். நாக தோஷங்கள் விலகி வாழ்வில் வளம் பெறலாம். பாம்பென்றால் படையும் நடுங்கும் அதே போல பாம்பு கிரகங்களான ராகு கேது தோஷத்தினால் பலவித தடைகளும் ஏற்படுகின்றன.

திருமண தடை, புத்திரபாக்கிய தடை ஏற்படுகிறது. இந்த தடைகள் நீங்க ஆடி மாதம் வளர்பிறை சுக்ல பஞ்சமி திதியன்று கருட பஞ்சமி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. கருட பஞ்சமி நாளில் விரதமிருந்து கருடனை வழிபட தோஷம் விலகி திருமணம் கைகூடும், கணவன் ஆயுள் அதிகரிக்கும், புத்திர பாக்கியம் கிடைக்கும், தடைபட்ட காரியம் தடையில்லாமல் நிறைவேறும். எதிர்பார்த்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்து சமயத்தில் பாம்புவுக்கும், கருடருக்கும் முக்கிய பங்கு கொடுக்கப்படுகிறது. நாக சதுர்த்திக்கு அடுத்த நாள் வருவது கருட பஞ்சமி விரதம். கருடன் என்று போற்றப்படும் பறவையை பட்சி ராஜா அதாவது பறவைகளின் தலைவன் என்று சொல்வார்கள். சாஸ்திர சம்பிரதாயங்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஒரு விசேஷமான பறவை.

பெரிய திருவடி என போற்றப்படும் கருடாழ்வாரின் மகத்துவம் சொல்லில் அடங்காது. அவருக்கென்றே ‘கருடபஞ்சமி’ என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆர்வம் நிறைந்த ஆழ்ந்த பக்தியுடன் கருடனை வழிபட்டால், வழிபாட்டின் முடிவில் கருட தரிசனம் கிடைப்பது உறுதியாகும்.