மாந்தி தோஷம் நீக்கும் மாந்தீஸ்வரர் வழிபாடு!

84

மாந்தி தோஷம் நீக்கும் மாந்தீஸ்வரர் வழிபாடு!

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு என்ற ஊரில் உள்ள கோயில் தான் வடாரண்யேஸ்வரர். சென்னை – அரக்கோணம் ரயில் பாதையிலுள்ள திருவாலங்காடு என்ற ரயில் நிலையத்திலிருந்து 4 கிமீ தொலைவில் தான் இந்த கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலவர் வடாரண்யேஸ்வரர். அம்பிகை வண்டார் குழலி. இத்தல சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள் புரிகிறார்.

தல சிறப்பு:

நடராஜ பெருமானின் 5 சபைகளில் ரத்தின சபையாக இந்த கோயில் திகழ்கிறது. காரைக்கால் அம்மையாருக்கு நடராஜர் காட்சி அளித்த தலம். இந்த கோயிலில் வடாரண்யேஸ்வரரின் காலடியில் இன்றும் காரைக்கால் அம்மையார் வாழ்கிறார் என்பது ஐதீகம். இந்த தலத்தில் உள்ள நடராஜ தாண்டவம் ஊர்த்துவ தாண்டவம் என்று சொல்லப்படுகிறது.

திருவாலங்காடு நடராஜர் மற்ற ஊர்த்துவ தாண்டவங்களைப் போல் தனது பாதத்தை செங்குத்தாக உடலை ஒட்டி தூக்கி நின்று ஆடவில்லை. மாறாக முகத்திற்கு நேராக பாதத்தை தூக்கியிருக்கிறார். எட்டு கைகளுடன், 4 அடி உயரமும் கொண்டுள்ளார் இந்த தல நடராஜர். ஒரு முறை ஆலங்காட்டிற்கு தலைவியான காளி, சிவனை தன்னுடன் நடனம் ஆட வேண்டும். தன்னை வென்றுவிட்டால் இந்த ஆலங்காட்டை ஆளலாம் என்றாள். சிவனும் காளியுடன் ஊர்த்துவ தாண்டவம் ஆடினார்.

அப்போது, சிவபெருமான், தனது காதிலிருந்த மணியை கீழே விழ வைத்தார். அதன் பின், விழுந்த மணியை தனது இடைக்கால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தனது காதில் பொருத்தினார். இதைக்கண்டு ஆச்சரியப்பட்ட காளி, தன்னால், இது போன்ற தாண்டவம் ஆட இயலாது என்று தனது தோல்வியை ஒப்புக் கொண்டாள். அப்போது, காளியின் முன் தோன்றிய இறைவன், என்னையின்றி உனக்கு சமமானவர் வேறு யாரும் இல்லை.

ஆகையால் இந்த கோயிலில் என்னை வழிபடும் பக்தர்கள் முதலில் உன்னை வழிபாடு செய்த பின் என்னை வழிபட்டால் தான் முழு பலன் கிடைக்கும் என்று வரம் அளித்தார். அன்று முதல் காளி தனி கோயில் கொண்டு பக்தர்களுகு அருள் புரிந்து வருகிறாள். நடராஜர் சன்னதிக்கு எதிரில் தான் காளி சன்னதி அமைந்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வரும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரரை ஐப்பசி மாத நாளில் தரிசனம் செய்தால் வாழ்வில் எல்லா வகையான இன்பங்களும் கிடைக்கப் பெற்று இன்புற்று வாழலாம் என்பது ஐதீகம்.

தல அமைப்பு:

கிழக்கில் இருக்கும் 5 நிலை ராஜகோபுரம் அழகான காட்சி தருகிறது. கோயிலின் நுழைவாயிலுக்கு இடது புறம் சன்னதியில் வல்லப கணபதி காட்சி தருகிறார். வலது புற சன்னதியில் முருகன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி புரிகிறார். கோயிலுக்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் நூற்றுக்கால் மண்டபம் இருக்கிறது. இதில், நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. நுழைவு வாயிலைக் கடந்து சென்றால் எதிரில் பலிபீடம், கொடி மரம் மற்றும் நந்தி மண்டபம் ஆகியவை உள்ளது.

இதையடுத்து 3 நிலைகளை கொண்ட 2ஆவது கோபுரம் உள்ளது. கோபுர மதிற்சுவரின் மேல் இடது பக்கம் காரைக்கால் அம்மையார் வரலாறு, வலது பக்கம் மீனாட்சி திருக்கல்யாண வைபம் ஆகியவை காட்சி தருகின்றன. தொடர்ந்து உள்ளே சென்றால், வலது பக்கத்தில் வண்டார் குழலி அம்மை தெற்கு நோக்கி அமைந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். கருவறையில் வடாரண்யேஸ்வரர் சுயம்பு லிங்கமாக அருள் புரிகிறார்.

இந்த கோயில் தலைக்கு உரிய கோயிலாக கருதப்படுகிறது. ஏனென்றால், இந்த கோயில் இறைவியின் பெயர் வண்டார் குழலில் – வண்டுகள் அதிகம் மொய்க்கும் அதிக வாசம் கொண்ட கூந்தலை கொண்ட அன்னை. ஆகையால், இந்த கோயில் தலைக்குரிய திருமுடி தலமாக கூறப்படுகிறது.

மாந்தீஸ்வரர்:

வடாரண்யேஸ்வரர் கோயிலின் வெளிப் பிரகாரத்தில் உள்ள சன்னதியில் மாந்தீஸ்வரர் காட்சி தருகிறார். ஒரு முறை மாந்தி தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்க திருவாலங்காடு வந்து சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து 48 நாட்கள் ஒரு மண்டலம் சிவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றார். மாந்தி வழிபட்ட சிவலிங்கம் என்பதால், மாந்தீஸ்வரர் என்றழைக்கப்படுகிறது.

ஒருவரது ஜாதகத்தில் கிரக நிலைகளின்படி 1, 2, 4, 8 மற்றும் 12 ஆகிய இடங்களில் மாந்தி இருந்தால் அது தோஷமாக கருதப்படுகிறது. மாந்தீஸ்வர்ருக்கு பரிகார பூஜைகள் செய்வதன் மூலமாக ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டு அஷ்டம சனி (8ல் சனி), அர்த்தாஷ்டம சனி (4ல் சனி), ஜென்ம சனி ஆகியவற்றால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும். மேலும், திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமும் நடக்கும். கடன் தொல்லைகளும் நீங்கும்.