குரு பெயர்ச்சியில் மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஏழாம் வீட்டிற்கு குரு வந்துள்ளார். இதனால் மிதுனம் ராசிக்காரர்களின் கல்யாண கனவுகள் இந்த கால கட்டத்தில் நிச்சயம் நிறைவேறும்.
மிதுனம்குரு பெயர்ச்சியில் மிதுனம் ராசிக் காரர்களுக்கு ஏழாம் வீட்டிற்கு குரு வந்துள்ளார். ஏழாம் இடம் என்பது களத்திர ஸ்தானம் ஆகும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு ஏழு மற்றும் பத்தாம் இடங்களுக்கு குரு அதிபதி ஆவார். தற்போதைய குரு பெயர்ச்சியின் படி குருவின் பார்வை ஜென்ம ராசியிலேயே பதிகிறது. இதனால் மிதுனம் ராசிக்காரர்களின் கல்யாண கனவுகள் இந்த கால கட்டத்தில் நிச்சயம் நிறைவேறும்.
ஏழாம் வீட்டில் குரு அமர்ந்தால் பண வரவு அதிகமாகும். அதிலும் இந்த தடவை குரு பகவான் மிதுனம் ராசியை நேருக்கு நேர் பார்ப்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு வெற்றி மேல் வெற்றி உண்டாகும். இதுவரை தாமதம் ஆகி வந்த சுபகாரியங்கள் அனைத்தும் கைகூடி வரும். அந்த சுபகாரியங்கள் எந்தவித இடையூறும் இன்றி மிக சிறப்பாக நடைபெறும்.
மிதுனம் ராசியில் மூன்றாம் வீட்டு பார்வையால் புதிய பதவிகள் தேடிவரும் நிலை உள்ளது. தற்போது நடுத்தர நிலையில் உள்ள நீங்கள் மேல்நிலைக்கு உயர வாய்ப்பு உள்ளது. இதற்கு ஏகாதசி திதி தினத்தன்று அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபட வேண்டும். குறிப்பாக மதுரை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள கொந்தகை என்ற ஊரில் இருக்கும் ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீதெய்வநாயக பெருமாளை வழிபட வேண்டும். முடிந்தால் ஏழை-எளியவர்களுக்கு ஆடை தானம் செய்வது நல்லது.
இந்த பரிகாரத்தால் இதுவரை தள்ளிக் கொண்டே சென்ற இளம்பெண்களின் திருமணம் உடனே நடைபெறும். அதிலும் மனதுக்கு பிடித்த வரன் அமையும். ஆனால் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது உடல்நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். சஷ்டி நாட்களில் திருச்செந்தூர் முருகனை நினைத்து போற்றி பாடல்களை பாராயணம் செய்வது கிரக தோஷங்களை நீக்க செய்யும்.
குரு பெயர்ச்சிக்கு ஏற்ப மிதுனம் ராசிக்காரர்கள் தங்களது வழிபாடுகளை அமைத்து கொண்டால் குடும்ப அந்தஸ்து மேம்படும். குறிப்பாக பெருமாள் வழிபாட்டை சனிக்கிழமை தோறும் செய்யுங்கள். ஏழை மாணவ-மாணவிகளின் கல்வி செலவுக்கு உதவுங்கள். இந்த வழிபாடு பிரிந்து இருக்கும் கணவன்-மனைவியை நிச்சயம் ஒன்று சேர்க்கும்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை இடைபட்ட காலத்தில் சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்ல உள்ளார். அந்த சமயத்தில் மிதுனம் ராசிக்காரர்கள் பரிகார பூஜைகள் செய்தால் நிச்சயம் நல்ல வரன் அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஏகாதசி திதியில் காஞ்சீபுரம் மாவட்டம் திருமலை வையாவூரில் அலர்மேலுமங்கை சமேத பிரசன்ன வெங்கடேசரை வழிபட்டால் மிகவும் நல்லது.
மயிலாடுதுறை அருகில் உள்ள தேரழுந்தர் கோவிலில் வழிபட்டால் குரு பார்வையால் ராகு தோஷம் குறையும். சுந்தர காண்டம் படித்து வருவது பலனை முந்தி தர செய்யும். ஞாயிற்றுக் கிழமைகளில் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) சரபேஸ்வரரை வழிபடலாம். சென்னை மாடம்பாக்கம் தேனு புரீஸ்வரர் ஆலயத்தில் உள்ள சரபேஸ்வரரை வழிபடுவது நல்லது.
அதுபோல நெல்லை அருகே உள்ள கிருஷ்ணாபுரம் அபயகஸ்த ஜெயவீர ஆஞ்சநேயரையும் வழிபடலாம். பிறந்த தினத்தன்று அர்ச்சனை செய்து வழிபடுவது நல்ல பலன்களை தரும். சனிக்கிழமை தோறும் பெருமாளை தரிசிப்பதும், வெள்ளிக்கிழமை தோறும் துர்க்கைக்கு எலுமிச்சை தீபம் ஏற்றி வருவதும், தேய்பிறை அஷ்டமி தினத்தன்று பைரவர் வழிபாட்டை மேற்கொள்வதும் மிதுனம் ராசிக்காரர்களுக்கு சுபயோக சுப பலன்களை தேடித்தர செய்யும்.
மிதுனம் ராசிக்காரர்களின் அதிபதி புதன் என்பதால் மதுரை மீனாட்சியை வழிபடுவதும் கைநிறைய பலன்களை அள்ளித்தரும். அதுபோல சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் உள்ள தட்சிணா மூர்த்தியையும் வழிபட்டு வருவது நன்மை தரும். புதன் தோறும் அனுமன் வழிபாடு செய்வது நல்லது. மிதுனம் ராசியில் மிருகசீரிடம் (3, 4-ம் பாதம்), திருவாதிரை, புனர்பூசம் (1, 2, 3-பாதங்கள்) ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பரிக்கல்லில் உள்ள லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.
திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த வர்கள் ராமானுஜரை வழிபடுவது நல்லது. குறிப்பாக ஸ்ரீரங்கம் ஆலயத்திற்கு சென்று ராமானுஜர் சன்னதியில் வழிபாடுகள் செய்தால் திருமண யோகம் தேடி வரும். சென்னையில் உள்ளவர்கள் ராமானுஜர் ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் அவதார தலத்தில் வழிபட்டால் எவ்வளவு பெரிய கிரக தோஷங்கள் இருந்தாலும் அத்தனையும் அடித்து நொறுக்கப்பட்டு தவிடு பொடியாகி விடும். எனவே திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ராமானுஜரை தவறாமல் வழிபட வேண்டும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட வேண் டும். மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சியில் கை கொடுக்கும் தலமாக மதுரை மீனாட்சி அம்மன் தலம் உள்ளது. மதுரையில் மீன் கொடியை கொண்ட பாண்டிய மன்னர் பரம் பரையின் அரசியாக இருப்பதாலும், மீன் எப்படி எந்நேரமும் விழித்திருக்கிறதோ, அப்படி எந்நேரமும் தனது பக்தர்களை துன்பங்களில் இருந்து காத்து, அவர்களுக்கு அருள் புரிவதாலும் இங்கு வீற்றிருக்கும் அன்னை பார்வதி தேவி, மதுரை மீனாட்சி என அழைக்கப்படுகிறாள்.
அழகிய சிற்பங்கள், வானுயர்ந்த கோபுரங்கள் கொண்ட இக்கோவில் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு தேவியான மீனாட்சியம்மனுக்கே முதலில் பூஜைகள் செய்யப்படுகின்றன. இங்கிருக்கும் மீனாட்சி அம்மன் பச்சை பட்டு உடுத்தி கையில் கிளியுடன் காட்சி தருகிறாள். சிவபெருமான் இந்த மதுரை நகரில் 64 திருவிளையாடல்களை புரிந்துள்ளார். சிவபெருமானின் ஐந்து சபைகளில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் வெள்ளி சபையாக இருக்கிறது.
இத்தலத்தில் சிவபெருமான் நடராஜராக பாண்டிய மன்னன் ஒருவருக்கு நடன தரிசனத்தை தந்த போது, அம்மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க தனது கால் மாற்றி சந்தியா தாண்டவம் எனும் நடனத்தை ஆடிக்காண்பித்தார். நவக்கிரகங்களில் “புதன்” பகவானுக்குரிய சிறந்த பரிகாரத்தலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவில் இருக்கிறது. சிவபெருமானே “சுந்தரானந்த சித்தர்” என்கிற பெயரில் மதுரையில் வாழ்ந்து, பிறகு கோவிலில் ஐக்கியமாகி பக்தர்களின் அனைத்து குறைகளையும் தீர்ப்பதாக கூறப்படுகிறது.
எல்லா வகையான கோரிக்கைகள் மற்றும் வேண்டுதல்களோடு இங்கு வந்து வழிபடும் பக்தர்கள், கோரிக்கை நிறைவேறிய உடன் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரருக்கு வஸ்திரம் சாற்றியும், அன்னதானம் செய்தும் தங்களின் நேர்த்தி கடனை செலுத்துகின்றனர். இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி அருள்பாலிக்கும் தட்சிணா மூர்த்தியின் ஒரே தலம் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பட்டமங்கலம் மட்டுமே.
தற்போதைய குரு பெயர்ச்சியில் மிதுனம் ராசிக்காரர்கள் இந்த தலத்தில் வழிபடுவது நல்லது. இந்த ஆலயத்தை 3 முறை பிரதட்சணம் செய்தால் விரும்பிய காரியம் நடக்கும். 5 முறை செய்தால் மங்கள காரியங்களில் வெற்றி கிடைக்கும். 7 முறை செய்தால் நல்ல குணம், எண்ணம், வாழ்க்கையில் அமைதி ஏற்படும். 9 முறை செய் தால் குழந்தை பேறு கிடைக்கும். 11 முறை செய்தால் ஆயுள் விருத்தி ஏற்படும். 15 முறை செய்தால் செல்வம் பெருகும்.
108 முறை செய்தால் தாம் விரும்பிய பெண்ணை மனைவியாக அடையலாம் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத் தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும். விரும்பிய காரியம், வாழ்க்கையில் அமைதி, குழந்தை பேறு, ஆயுள் விருத்தி அடைய, செல்வம் பெருக இங்கு வந்து பிரதட்சணம் செய்தால் இறைவன் அருளால் அடையலாம் என்பது ஐதீகம்.
ஏகாதசியில் வழிபட்டால் திருமண யோகம்
ஏகாதசி நாளில், காலையில் எழுந்தது முதல் சாப்பிடாமல் விரதம் இருப்பார்கள். வயதானவர்கள் திரவ உணவு எடுத்துக்கொள்ளலாம். ஏகாதசி நாளில், பெருமாளின் சகஸ்ரநாமங்களைச் சொல்லிப் பாராயணம் செய்வது ரொம்பவே விசேஷம், விஷ்ணுவின் திருநாமங்களைச் சொல்லிக் கொண்டே இருப்பதும் அவரையே நினைத்து பிரார்த்தனை செய்வதும் திருமண யோகத்தை தரவல்லது.
ஏகாதசி திதியில், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று மனதார வழிபடுங்கள். தடைப்பட்ட எல்லா மங்கல காரியங்களையும் திருமால் நடத்தித் தந்தருள்வார் பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடலாம். பெருமாளுக்கு உகந்த புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் செய்து வழிபடலாம்.