ராகு, கேது தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

219

ராகு, கேது தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

ஆந்திரபிரதேசம் மாநிலம் சித்தூர் மாவட்டம் காளஹஸ்தி என்ற ஊரில் உள்ள கோயில் காளத்தியப்பர். இந்தக் கோயிலில் காளத்தியப்பர், காளத்தீசுவரர் ஆகியோர் மூலவர்களாக காட்சி தருகின்றனர். தாயார், ஞானசுந்தரி, ஞானாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானப்பிரசுனாம்பிகை ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் மாசி திருநாள், திருக்கார்த்திகை ஆகிய நாட்களில் விழா நடக்கிறது. மேலும், வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10 நாட்கள் உற்சவம். சிவராத்திரி இரவு நந்தி சேவை சிறப்பாக நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இந்தக் கோயில் வாயு (காற்று) தலம் என்பதால், மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக் கொண்டே இருக்கும். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். இறைவனுக்கு சாற்றியுள்ள தங்க கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும் போது லிங்கத்தின் அடிப்பாகத்தில், சிலந்தி வடிவத்தையும், நடுவில் யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் உச்சியில் 5 தலை நாக பாம்பு படம் எடுத்த வடிவத்தையும், கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடிவத்தையும் காணலாம்.

கோயில் கருவறையை அடுத்து கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவருக்கு எதிரில் வெள்ளிக்கல் நந்தியும், பித்தளை நந்தியும் என்று இரு நந்திகள் உள்ளன. கோஷ்டத்தில் கணபதி, லிங்கோத்பர், பிரம்மா, துர்க்கை, தட்சிணாமூர்த்தி சிலைகள் உள்ளன. கோயில் நுழைவுவாயிலில் கவசமிட்ட கொடிமரமும், ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதற்கு அருகில் பலிபீடமும், நந்தியும் உள்ளன.

திருமணத் தடை உள்ளவர்கள், ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர். இந்தக் கோயிலில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால், பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட சரளமாக பேசும் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.

பிரார்த்தனை நிறைவேறியதும், இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் இறைவனுக்கு வஸ்திரம் சாற்றியும் பக்தர்கள் வழிபடுகின்றனர். கண்ணப்பர் வாய் கலசமாக முகலிநீர் கொண்டு வந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால், பக்தர்களுக்கு திருநீறு (விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக் கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கின்றனர்.

மேலும், பக்தர்கள் கொண்டு வரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் காலடியில் வைத்து அதனை எடுத்துக் கொடுக்கின்றனர். மூலவருக்கு பச்சைக் கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. இது ராகு, கேது தலம் என்பதால், கோயிலை சுற்றி வரும் போது எதிர்வலமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோயிலில் பூஜை செய்கின்றனர்.

இந்தக் கோயில் கிரக தோஷங்களுக்குரிய கோயில் என்பதால், நவக்கிரகங்கள் என்று எதுவும் இல்லை. ஆனால், சனீஸ்வரர் மட்டுமே காட்சி தருகிறார். இறைவனுக்கு அங்கி அணிவிக்கப்பட்ட பிறகு தான் திருமேனியில் தும்பை மாலை சாற்றப்படுகிறது. இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் எப்படி நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளனவோ அதே போன்று அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது. ரிஷிகளுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.

ஒரு காலத்தில் ஆதிசேஷனுக்கும், வாயு தேவனுக்கும் இடையில் யார் பெரியவன் என்று கடும் போட்டி நிலவியது. அதற்கு கயிலாய மலையை என்னுடைய உடம்பில் சுற்றி இறுக்கி மூடிக் கொள்வேன். நீ உனது பலத்தால் மலைச் சிகரங்களை பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை நான் ஒப்புக் கொள்வேன் என்று ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்.

ஆதிசேஷன் தனது ஆயிரம் தலைகளாலும், உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துக் கொண்டார். வாயுதேவன் பலம் கொண்டு காற்றை வீசிப்பார்த்தும் கூட அசைக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஆதிசேஷன் லேசாக அசைய அந்த நேரம் வாயுதேவன் தனது முழு பலத்தையும் காட்டி மலையை பெயர்க்க, அதிலிருந்து 3 சிகரங்கள் மட்டும் பெயர்ந்து தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்று தான் திருக்களத்தி மலை என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.