ராகு தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

71

ராகு தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் என்ற ஊரில் அபய வரதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் மூலவராக அபய வரதீஸ்வரர் இருக்கிறார். தாயார் சுந்தர நாயகி. இந்த கோயிலில், அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்று அழைக்கப்படுகிறாள். ஒவ்வொரு திருவாதிரை நட்சத்திர நாளன்றும் சித்தர்கள் இங்கு அரூப வடிவில் வந்து வழிபாடு செய்வதாக கூறப்படுகிறது.

திருவாதிரை நட்சத்திரக்காரர்களின் பொதுவான குணங்கள்: மற்றவர்களிடம் எளிதாக பழகி அவர்களை நண்பராக்கும் திறமை இவர்களிடம் உண்டு. சாமர்த்தியமாக சம்பாதிக்கும் குணம் கொண்டவர்கள். அதனை திட்டமிட்டு எளிதாக செலவழிக்கவும் செய்வார்கள். வாதம் செய்வதில் வல்லவர்கள். எந்தவொரு சுபகாரியத்தையும் முன்னின்று நடத்தக்கூடியவர்கள். கலைகளில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

தல பெருமை:

திருவாதிரை நட்சத்திக்காரர்கள், ராகு, தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அனைவரும் வழிபட வேண்டிய கோயில் தான் இந்த அபய வரதீஸ்வரர். இந்த கோயிலில் உள்ள அம்மன் தெற்கே கடலை பார்த்து அருள்பாலிப்பதால் கடல் பார்த்த நாயகி என்று அழைக்கப்படுகிறாள். திருக்கடையூரைத் தொடர்ந்து இந்த கோயில் தான் எம பயம் நீக்கும் தலமாக விளங்குகிறது.

எம பயம் நீக்கும் கோயில்:

எம பயம் கொண்டவர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள், நீண்ட ஆயுள் வேண்டுபவர்கள் இந்த கோயிலில் வழிபாடு செய்கிறார்கள். ஆயுஷ் மற்றும் மிருத்யுஞ்சய ஹோமம் இங்கு செய்யப்படுகிறது. திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்த பெண்களுக்கு எந்த தோஷத்தினால் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், இந்த கோயிலில் வந்து வழிபாடு செய்தால் பலன் கிடைக்கும்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்த மன்னர் அதிவீரராமபாண்டியன் இத்தல இறைவனான அபய வரதீஸ்வரரை வழிபட்டு திருப்பணிகளை செய்துள்ளார். இதனால், இந்த ஊர் முதலில் திரு ஆதிரைப்படினமாக இருந்து அதிவீரராமன் பட்டினமாகி தற்போது அதிராம்பட்டினமாக மாறிவிட்டது.

தல வரலாறு:

ஒரு காலத்தில் தேவர்கள், முனிவர்கள் ஆகியோர் அசுரர்களிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக திருவாதிரை நட்சத்திர மண்டபத்தில் தஞ்சம் அடைந்தனர். பிரதோஷ நாள் மற்றும் திருவாதிரை நட்சத்திர நாள் அன்றும் சிவபெருமான் உலா வரும் இடங்களில் திருவாதிரை நட்சத்திர மண்டலும் ஒன்று. இந்த மண்டபத்திற்குள் அசுரர்கள் யாராலேயும் உள்ளே வர முடியாது.

இந்த மண்டபத்திற்குள் வந்த தேவர்கள், முனிவர்களை அபயம் தந்து காப்பாற்றுவார். இதனால், சிவபெருமான் அபய வரதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். திருவாதிரை நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்கள் இந்த கோயிலில் திருவாதிரை நட்சத்திர நாளில் வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். பைரவ மகரிஷி மற்றும் ரைவத மகரிஷி ஆகியோர் இந்த தலத்தில் திருவாதிரை நட்சத்திர நாளில் அபய வரதீஸ்வரரை வழிபாடு செய்துள்ளனர். பங்குனி உத்திரம் அன்று இந்தக் கோயிலில் விழா கொண்டாடப்படுகிறது.