ராகு தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

106

ராகு தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!

நம் முன்னோர்கள் கோயில்களை வெறும் வழிபாட்டு தலமாக மட்டும் அமைக்காமல் வாழ்க்கையின் பல நிலைகளிலும் உதவக்கூடிய ஒரு முழுமையான அமைப்பாக இயங்கும்படி நிறுவியிருக்கின்றனர். பஞ்ச காலத்தில் காத்துக்கொள்ள கோபுர கலசங்களில் நவதானிய விதைகளை வைத்தனர், பெருவெள்ளத்தில் இருந்து பாதுகாக்க தடிமனான கற்களால் ஆன மிகப்பெரிய மதில்களை அமைத்தனர், ஆன்றோர்கள் வாழ்ந்து கல்வி போதிக்கும் இடமாகவும், தீராத நோய்களையும் குணமாக்கும் மருத்துவ கூடமாகவும் கூட கோயில்கள் இருந்திருக்கின்றன.

அக்காலத்தில் ஒருவருக்கு பாம்பு கடித்தால் அவரை குணப்படுத்துவது என்பது இயலாத ஒன்றாக இருந்தது. இறப்பை உறுதி செய்யும் விஷயமாக இருந்த பாம்புக் கடியை குணப்படுத்தும் அருமருந்தாக கோவை மாவட்டம் சோமனூரில் இருக்கும் வாழைத் தோட்டத்து ஐய்யன் கோயிலில் கிடைக்கும் புற்றுமண் இருந்து வருகிறது. வாருங்கள், பாம்புக்கடியை குணப்படுத்தக்கூடிய புற்றுமண் கிடைக்கும் வாழைத் தோட்டத்து ஐய்யன் கோயிலுக்கு சென்று தரிசனம் மேற்கொள்ளலாம்.

வாழைத்தோட்டத்து ஐய்யன் :

கோவை மாவட்டத்தில் திருப்பூர் எல்லையை ஒட்டி நொய்யல் தழுவியோடும் சோமனூர் என்ற ஊரில் அமைந்திருகிறது வாழைத்தோட்டத்து ஐய்யன் கோயில்.

நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இக்கோயிலுக்கு பின்னால் இருக்கும் வரலாற்றையும், வாழைத் தோட்டத்து அய்யன் நிகழ்த்திய அற்புதங்கள் பற்றியும், தீரா நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் இந்த கோயிலின் மகிமைகள் பற்றியும் அடுத்தடுத்த பக்கங்களில் தெரிந்துகொள்வோம். சின்னையன் என்ற இயற்பெயர் கொண்ட வாழைத் தோட்டத்து கி.பி 1777ஆம் ஆண்டு செங்காளியப்பன் என்பவருக்கு மகனாக பிறந்திருக்கிறார்.

தனது 12ஆம் அகவை வரை கல்வி பயின்ற பிறகு தந்தையின் விருப்பப்படி மேய்ச்சல் தொழிலை மேற்கொண்டிருக்கிறார். சிறு வயதில் ஆன்மீகத்தில் பெரும் ஈடுபாடு கொண்டவராக இருந்த சின்னையன் மாடு மேய்க்கும் போது சிறு சிறு கற்களை அடுக்கி தெய்வ வழிபாடு மேற்கொண்டு வந்திருக்கிறார். ஒருநாள் இவர் மாடு மேய்க்கும் வழி வந்த பெரியவர் சின்னையனுக்கு சர்வவிஷ சம்ஹார மந்திரத்தையும், பஞ்சாட்சர மந்திரத்தையும் உபதேசித்துள்ளார்.

வாழைத் தோட்டத்து அய்யன் என்பவர் யார்?

இதே பெரியவர் பின்னொருநாள் சின்னையனின் அறையில் தோன்றி சிவ பெருமான் பார்வதி தேவியாரோடு இருக்கும் காட்சியை காட்டி மறைந்துவிட்டார். சிவ தரிசனம் பெற்றதன் பிறகு நோய்களை குணமாக்கும் வல்லமையையும், பாம்பு மற்றும் தேள் ஆகியவற்றின் விஷத்தை விபூதி மற்றும் பஞ்சாட்சிர மந்திரங்களை கொண்டு குணப்படுத்தி வந்திருக்கிறார். தனது 72ஆவது வயதில் மாடு முட்டி இறைவனடி சேர்ந்தார். பின் தனது பண்ணையில் வேலை செய்து வரும் தொழிலாளி ஒருவரின் கனவில் தோன்றி தான் இதுநாள் வரை பூஜித்து வந்த லிங்கம் மற்றும் நந்தி ஆகியவவை இருக்கும் இடத்தை சொல்லியிருக்கிறார். இவற்றை சுற்றி தான் இன்று நாம் பார்க்கும் கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

கோயில் அமைப்பு:

வாழைத் தோட்டத்து அய்யன் முக்தியடைந்ததாக சொல்லப்படும் கிளுவை மரத்தின் கீழ் தான் அவர் வழிபட்டு வந்த லிங்கம் மற்றும் நந்தி ஆகியவை இருந்திருக்கின்றன. இந்த லிங்கத்தை சுற்றி பின்னாளில் புற்று ஒன்று வளர்ந்திருக்கிறது. இந்த புற்று மண் பாம்பு விஷத்தை முறிக்கும் சக்தி கொண்டது என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

புற்று மண்:

இங்கு கிடைக்கும் புற்று மண்ணில் மிகச் சிறிதளவை உங்கள் வயல் அல்லது தோட்டத்து மண்ணில் கலந்து விட்டால், பாம்புத் தொல்லை, விஷ ஜந்துக்களின் தொல்லை இருக்காது. பாம்பு கடித்தவர்களுக்கு புற்று மண் பூசப் பட்டு விஷம் நீங்கப்பெறுவதாக நம்பிக்கை. வீடுகளில் பூச்சித்தொல்லை இருந்தால் புற்று மண்ணை நீரில் கலந்து வீட்டை சுற்றலும் தெளித்தால் விஷப்பூச்சிகள் அண்டாது என்பது நம்பிக்கை.

ராகு தோஷம்:

ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும், குடும்பத்தில் ஒற்றுமையின்றி இருப்பவர்களும் கூட வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலுக்கு வந்து வழிபட்டால் அக்குறைகள் நீங்கும் என்றும் பக்தர்களால் நம்பப்படுகிறது.

திருவிழா:

மார்கழி மாதம் நிகழும் திருவாதிரை நட்சத்திர நாள் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல தமிழ் புத்தாண்டான சித்திரை வருட பிறப்பின் போதும் சுற்றுவட்டாரப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாழைத் தோட்டத்து அய்யனை தரிசிக்க வருகின்றனர்.

சந்நிதிகள்:

இக்கோயிலின் மூலவராக வாழைத் தோட்டத்து அய்யன் கிளுவை மரத்தின் கீழ் சிறிய சிற்பமாக அருள்பாலிக்கிறார். அதோடு இக்கோயிலில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கும் முருகன் ஆகியோரது சந்நிதிகளும் இங்கே இருக்கின்றன.

எப்படி அடைவது?

கோவை – அவினாசி சாலையில் உள்ள கருமத்தம்பட்டியில் இருந்து 8கி.மீ தொலைவில் சோமனூருக்கு அருகே அய்யம்பாளையம் என்ற இடத்தில் அமைந்திருக்கிறது. இக்கோயிலுக்கு உக்கடம் மற்றும் காந்திபுரம் பேருந்து நிலையங்களில் இருந்து தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நீங்கள் கோவையில் இருந்தாலோ அல்லது அடுத்தமுறை கோவைக்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தாலோ நிச்சயம் வாழைத் தோட்டத்து அய்யன் கோயிலுக்கு சென்று வாருங்கள்.