ரிஷி சாபத்தால் வம்சமே இல்லாமல் போய்விடும்!

164

ரிஷி சாபத்தால் வம்சமே இல்லாமல் போய்விடும்!

இறைவனால் படைக்கப்பட்டு பூமியில் பிறக்கிறோம். மனித பிறப்பு எடுத்து, நற்காரியங்கள் செய்து வருகிறோம். இறைவனை பிரார்த்திக்கிறோம். என்னதான் பிரார்த்தனை செய்தாலும், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும், எப்போது கொடுக்க வேண்டும் என்பதை நிர்ணயிப்பவன் அவன் தான். அவனை மீறி அவன் இல்லாமல், இந்த உலகில் ஒரு அணுவும் அசையாது. நமது பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப இன்று அதற்குரிய பலன்களை அனுபவித்து வருகிறோம்.

இறைவழிபாட்டின் மூலமாக நல்ல பலன்களை பெற நினைத்தாலும் சாபத்தின் மூலமாக அவை தடுக்கப்படுகிறது. அப்படி என்னென்ன சாபம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

சாபங்கள்:

பெண் சாபம், பிரேத சாபம், பிரம்ம சாபம், சர்ப்ப சாபம், பித்ரு சாபம், கோ சாபம், பூமி சாபம், கங்கா சாபம், விருட்ச சாபம், தேவ சாபம், ரிஷி சாபம், முனி சாபம், குலதெய்வ சாபம் என்று சாபங்கள் 13 வகைப்படும். அவற்றை ஒவ்வொன்றாக இந்தப் பதிவில் பார்ப்போம்….

பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பது, அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி ஆகியோரை தரக்குறைவாக பேசுவது, அவர்களை அரவணைக்காமல் தள்ளி வைப்பது ஆகியவற்றால் பித்ரு தோஷம் ஏற்படுகிறது. பித்ரு சாபம் ஏற்பட்டால், வம்சத்தில் ஆண் வாரிசு பிறக்காமல் போகும். குழந்தைகள் இறந்து போவது ஆகியவற்றை ஏற்படுத்தும்.

குலதெய்வ சாபம்:

நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த குல தெய்வத்தை மறப்பது, குல தெய்வத்தை பூஜிக்காமல் இருப்பது, குல தெய்வ வழிபாடு செய்யாமல் இருப்பது ஆகிய காரணங்களால் குல தெய்வ சாபம் ஏற்படும். குல தெய்வ சாபத்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும். துக்கம் சூழ்ந்து கொண்டு கஷ்டங்களை கொடுக்கும்.

பெண் சாபம்:

பெண்களை ஏமாற்றுவது, அவர்களுக்கு துரோகம் செய்வது, உடன் பிறந்த சகோதரிகளை ஆதரிக்காமல் விட்டுவிடுவது, மனைவியை கைவிடுவது ஆகியவற்றால் ஏற்படுகிறது. ஒரு பெண் சாபம் விட்டால், வம்சமே அழிந்துவிடும்.

பிரேத சாபம்:

இறந்தவர்களின் உடலை வைத்துக் கொண்டு இழிவாகப் பேசுவதும், பிணத்தை தாண்டுவதும், இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவர்களை வேண்டியவர்கள் பார்க்க அனுமதிக்க மறுப்பது என்று பலவற்றால் பிரேத சாபம் ஏற்படும். பிரேத சாபத்தால் ஒருவரது ஆயுள் குறையும்.

பிரம்ம சாபம்:

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று சொல்வார்கள். குருவிற்கு பிறகு தான் தெய்வமே வருகிறது. அப்படிப்பட்ட குருவை மறப்பது, நமக்கு கற்றுக் கொடுத்த வித்தையை தவறாக பயன்படுத்துவது, நாம் கற்ற வித்தையை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க மறுப்பது ஆகியவற்றால் பிரம்ம சாபம் ஏற்படுகிறது. பிரம்ம சாபத்தால் படிப்பறிவு (வித்யா நஷ்டம்) இல்லாமல் போகும்.

சர்ப்ப சாபம்:

பாம்புகளை துன்புறுத்தி கொல்வது, அவற்றின் இருப்பிடங்களான பாம்பு புற்றுகளை அழிப்பது ஆகியவற்றால் சர்ப்ப சாபம் ஏற்படுகிறது. இதனால், கால சர்ப்ப தோஷம் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படுகிறது.

கோ சாபம்:

பசு மாட்டை சித்ரவதை செய்வது, கன்றுடன் இருக்கும் தாயை பிரிப்பது, தாகம் ஏற்படும் போது தண்ணீர் கொடுக்காமல் இருப்பது ஆகிய காரணங்களால் கோ சாபம் ஏற்படுகிறது. இதனால், குடும்பத்திலோ அல்லது வம்சத்திலோ எந்தவித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

பூமி சாபம்:

தேவையில்லாமல், பூமியில் பள்ளங்கள் தோண்டுவது, அடுத்தவர் பூமியை அபகரிப்பது, பூமியை காலால் மிதிப்பது ஆகிய காரணங்களால் பூமி சாபம் ஏற்படுகிறது. பூமி சாபம் நரக வேதனையைக் கொடுக்கும்.

கங்கா சாபம்:

ஓடும் நதியை அசுத்தம் செய்வதும், நீரை வீணாக்குவதும் கங்கா சாபத்தை ஏற்படுத்தும். கங்கா சாபம் ஏற்பட்டால், பூமியில் எங்கு, எவ்வளவு தோண்டினாலும் தண்ணீர் கிடைக்கவே கிடைக்காது.

விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவது, காய், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப் போகச் செய்வது, மரத்தை அழிப்பது, எரிப்பது, மரங்கள் அதிகம் இருக்கும் இடங்களை அழித்துவிட்டு வீடு கட்டுவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும். விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

தேவ சாபம்:

தெய்வங்களை இகழ்வது, தெய்வங்களின் பூஜையை பாதியில் நிறுத்துவது, இறைவழிபாடு செய்யாமல் இருப்பது ஆகிய காரணங்களால் தேவ சாபம் ஏற்படுகிறது. இந்த சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

ரிஷி சாபம்:

ஆச்சார்ய புருஷர்களையும், பக்தர்களையும், ரிஷிகளை அவமதிப்பது போன்ற காரணங்களால் ரிஷி சாபம் ஏற்படுகிறது. இந்த ரிஷி சாபத்தால் வம்சமே இல்லாமல் போய்விடும்.

முனி சாபம்:

தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய பூஜை புனஷ்காரங்களை கொடுக்காமல் இருப்பது, தெய்வங்களை பூஜிக்க மறுப்பது ஆகியவற்றால் முனி சாபம் ஏற்படும். முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு ஏற்படும்.

சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாகவும், தீயவர்களை அழிக்கவும் செய்யும். என்னதான், எவ்வளவு வரங்கள் பெற்றிருந்தாலும் தாங்கள் பெற்ற வரத்தின் பலனாக எந்தவொரு நல்லவர்களையும் அழிக்க முடியாது. ஆனால், ஆற்றாமல், அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தையானது சாபமாக மாறினால், எப்படிப்பட்ட வலிமையானவராக இருந்தாலும் உரு தெரியாமல் அழித்துவிடும்.