ராகு தோஷம் நீங்க வழிபட வேண்டிய கோயில்!
நவக்கிரகத்தில் உள்ள ராகு பகவானால் ஏற்பட்ட தோஷம் நீங்க குன்றத்தூரில் உள்ள நாகேஸ்வரரை வழிபாடு செய்தால் தோஷம் நீங்கும். ஜாதகத்தில் சனி பாதிப்பை ஏற்படுத்துவதோடு, ராகு, கேதுவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய கிரகங்கள். ஆனால், ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பார்கள். இவ்வளவு ஏன், யோக காலத்தை உருவாக்க கூடியவரே ராகு பகவான் தான்.
ராகு பகவானைப் போன்று கொடுப்பாரும் இல்லை, கேதுவைப் போன்று கெடுப்பாரும் இல்லை என்று கூறுவர். எனினும், ராகு கெடு பலன்களையும் கொடுப்பார். இது போன்ற ராகு பகவானால் ஏற்படும் பாதிப்புகளை, தோஷங்களை நீக்க குன்றத்தூர் நாகேஸ்வரரை வழிபடுவது சிறப்பு பலனை அளிக்கும்.
குன்றத்தூர் நாகேஸ்வரர் கோயில் சேக்கிழார் அவதார தலமாக கருதப்படுகிறது. சோழ தேசத்தில் சேக்கிழார் அமைச்சராக இருந்த போது கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் நாக நாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பாக்கியமாக கருதினார். இப்படியொரு கோயிலை தனது சொந்த ஊரில் கட்ட வேண்டும் என்று ஆவல் கொண்டு அதனை நிறைவேற்றி அதனால், மனநிறைவும் கொண்டார்.
சேக்கிழார் கட்டிய இந்த கோயிலை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இந்த கோயிலில் நாகத்தின் கீழ் லிங்க வடிவில் சிவன் காட்சி தருகிறார். கோயிலுக்குள் சேக்கிழாருக்கு தனி சன்னதியும் உள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் புரிகிறார். ராகு பகவான் ஏற்பட்ட தோஷம் நீங்க நாகேஸ்வரரை வழிபட தோஷம் நீங்கும்.