7 ஜென்மத்து பாவங்கள் நீங்க வில்வ இலை வழிபாடு!

192

7 ஜென்மத்து பாவங்கள் நீங்க வில்வ இலை வழிபாடு!

ஒவ்வொரு இறைவனுக்கு ஒவ்வொரு பூக்கள் வைத்து வழிபடுவதால் அதற்குரிய நன்மைகள் கிடைக்கும். விநாயகருக்கு அருகம்புல் விசேஷம், தட்சிணாமூர்த்தி மஞ்சள் நிற மலர்கள் கொண்டு வழிபடுவது சிறப்பு. சனி பகவானுக்கு கருப்பு தான் உன்னதமானது என்பதால், நீல நிற பூக்கள் கொண்டு வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். சரி, சிவனுக்கு வில்வம் வைத்து வழிபடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்தப் பதிவில் நாம் காண்போம்.

நாம், ஏழு ஜென்மங்களில் செய்த பாவங்கள் நீங்க வில்வ இலை ஒன்றே போதும் என்று நமது முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். எப்போதும் எளிமையை விரும்பும் சிவபெருமானுக்கு வில்வ இலையே அர்ச்சனைக்கு சிறந்தது.

கற்பூரவில்வம், கொடிவில்வம், மகாவில்வம், சித்தவில்வம் என்று வில்வத்தில் பல ரகங்கள் உள்ளன. 7 இதழ், 3 இதழ், இந்து இதழ் என்று வில்வ இலைகள் இருக்கின்றன. ஆனால், 3 இதழ்கள் கொண்ட வில்வ இலைகள் கொண்டு தான் சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது. பூஜைக்கும் அந்த 3 இதழ் வில்வ இலைகள் தான் பயன்படுத்தப்படுகிறது.

வில்வ மரங்களில் உள்ள இலைகள் பொதுவாக மூன்று மூன்றாக தான் காணப்படும். வில்வ இலையில் இடது பக்கமாக இருக்கும் இலை பிரம்மா என்றும், வலது பக்கமாக இருக்கும் இலை விஷ்ணு என்றும், நடுவில் இருக்கும் இலையானது சிவன் என்றும் சொல்லப்படுகிறது.

பூஜைக்கு பயன்படுத்திய பூக்களையோ, பழங்களையோ திரும்பவும் பயன்படுத்தும் வழக்கம் இல்லை. ஒரு முறை பயன்படுத்திய பூக்களை மறுபடியும் இறைவனுக்கு பயன்படுத்தக் கூடாது. ஆனால், வில்வ மரத்தின் இலையை மட்டும் மீண்டும் மீண்டும் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு முறை பூஜைக்கு பயன்படுத்திவிட்டு அதனை கழுவிவிட்டு மறுபடியும் பூஜைக்கு பயன்படுத்தலாம். இப்படி ஒரு வில்வத்தையே திரும்ப திரும்ப 6 மாதம் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

வில்வ மரமானது சுடுகாட்டிற்கு அருகிலோ அல்லது குப்பை கிடங்குகளுக்கு அருகிலோ இருந்தால் அந்த வில்வ மரங்களின் இலையை பூஜைக்கு பயன்படுத்தக் கூடாது. மேலும், சுத்தமான இடங்களில் உள்ள வில்வ மரங்களின் இலையை மட்டுமே நாம் பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.

சிவனுக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தும் வில்வ இலைகளை சூரியன் உதயமாவதற்கு முன்னதாகவே நாம் பறித்து எடுத்துக் கொள்வது அவசியம். வில்வத்திற்கு எந்த தோஷமும் கிடையாது. தினந்தோறும் சிவபெருமானுக்கு வில்வம் கொண்டு சாற்றி வழிபாடு செய்தால் நன்மை உண்டாகும். அதுவும், மகா சிவராத்திரி நாட்களில் வில்வாஷ்டகம் சொல்லி வில்வ இலை சாற்றி சிவனை வணங்கி வழிபட்டால் ஏழேழு ஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

ஒரு வில்வ இலையைக் கொண்டு சிவபெருமானுக்கு அர்ச்சனை செய்தால் அது கோடிக் கணக்கான பூக்களுக்கு சமம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.