மனக்குழப்பத்தை தரும் கிரகங்களும்- பரிகாரமும்

447

சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்ய மனக்குழப்பம் நீங்கும். மனக்குழப்பத்தால் பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும்.

மனக்குழப்பத்தை தரும் கிரகங்களும்- பரிகாரமும்
சிவன் பார்வதி
வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி, உலக இன்பங்கள் அனைத்தையும் நுகர வேண்டும் என்பதே ஒரு மனிதனுடைய விருப்பமாக இருக்கும். ஒருவருடைய எண்ணங்கள், விருப்பங்கள் பலிதமாகும் போதுதான், அடுத்த நிலையை நோக்கி அடியெடுத்து வைக்கும் ஆர்வம் ஏற்படும்.

தன் வாழ்நாள் முழுவதும் மனிதன் ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரச்சினைகளையும், போட்டிகளையும் சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு கணம் அசந்தால் கூட, வெற்றி வாய்ப்பை இழந்துவிடுவோம். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருமே, வயதிற்கேற்ற போட்டியை சந்திக்கும் நிலையில்தான் மனிதர்களின் வாழ்க்கை கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் விதவிதமான போட்டியையும், எதிர்ப்பையும் சந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவும் இருக்கிறது.

ஒருவரின் எண்ணங்கள் ஈடேறும் போது, அவர்கள் அடையும் சந்தோஷம், மன நிம்மதிக்கு அளவே கிடையாது. நிறைவேறாத எண்ணங்கள் கனவாக, கானல் நீராக ஆழ்மனதில் பதிந்து விடும். மன வலிமை உள்ளவர்கள், நிறைவேறாத எண்ணங்களை கனவாக நினைத்து மறந்துவிட்டு, அடுத்த முயற்சியை நோக்கி அடியெடுத்து வைப்பார்கள். மன வலிமை குறைந்தவர்கள் தனிமையில் யோசித்து, தன் மனதை தானே கெடுத்துக்கொண்டு உடன் இருப்பவர்களையும் காயப்படுத்தி விடுகிறார்கள்.

உடன் பணிபுரிபவர்கள், அருகில் வசிப்பவர்கள், நண்பர்கள், குடும்பத்தாருடன் போட்டியிட்டு அவர்களை விட முன்னேற வேண்டும், அவர்களை விட வெற்றிகரமாக வாழ்ந்து காட்ட வேண்டும் என யோசித்து ஆனந்தத்தையும், நேரத்தையும், ஆற்றலையும் தொலைத்து சேர வேண்டிய உண்மையான இலக்கிற்கான பாதையை மறந்து மனக்குழப்பத்தை வரவழைப்பவர்கள் மிகுதியாக இருக்கிறார்கள்.

இந்த ஆரோக்கியமற்ற போட்டியானது, ஒரு முடிவில்லாமல் சுழலும்போது உடலில் உள்ள அனைத்து சக்கரங்களின் இயக்கங்களும் பாதித்து மனக் குழப்பத்தால் தொல்லை ஏற்படுகிறது.

மனக் குழப்பத்தை, மெல்லக் கொல்லும் விஷத்துடன் ஒப்பிடலாம். தீராத மனக்குழப்பம் மனிதனை சிறிது சிறிதாக அழித்து விடும். இது போன்ற மனக்குழப்பத்தால் 40 வயதை தொட்டவர்கள், உடல் அளவிலும் மனதளவிலும் இனி தன்னால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.

மனக்குழப்பம் ஏற்பட ஜோதிட ரீதியான காரணங்களைப் பார்க்கலாம்.

ஜனன ஜாதகத்தில் லக்னம், 3-ம் இடம், சந்திரன், சூரியன் ஆகியவை நல்ல நிலையில் இருந்தால் ஜாதகரின் எண்ணங்கள் 100 சதவீதம் பலிக்கும். நினைக்கும் காரியங்கள் அனைத்தையும் சாதிக்கும் வல்லமை படைத்தவராக அந்த ஜாதகர் இருப்பார். அவருடைய எண்ணங்களும் வலிமை கொண்டதாக இருக்கும்.

மூன்றாம் இடத்தில் பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய் இருந்தால், அந்த நபர் மன தைரியம் கொண்டவராக இருப்பார். சுப கிரகங்கள் ஆதிக்கம் மிகுதியாக இருந்தால் சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக யோசித்து பெரியதாக மனக்குழப்பத்தை ஏற்படுத்துவர்கள்.

மூன்றாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து, ஐந்தாம் அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் மனக்குழப்பமும், தைரியக் குறைவும் மிகுதியாகும்.

ஐந்தாம் அதிபதி நீச்சம், அஸ்தமனம் அடைந்து மூன்றாம் அதிபதியுடன் சேர்ந்திருந்தால் எவ்வளவு தைரியமானவராக இருந்தாலும், தான் எடுக்கும் முடிவு சரியானதாக இருக்குமா? என்ற மனக்குழப்பம் ஆழ்மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

ஒருவரின் ஆழ்ந்த சிந்தனை, ஆழ்மனதை குறிக்கும் கிரகம், 5-ம் அதிபதியான சூரியன். அப்படிப்பட்ட சூரியன், ராகு – கேது மற்றும் சனியுடன் இணைந்திருந்தாலோ, சூரியன் நீச்சம் பெற்றிருந்தாலோ, 6,8,12-ல் சூரியன் மறைந்தவர்கள், அஷ்டம, பாதக அதிபதியோடு சூரியன் சம்பந்தம் பெற்றவர்கள் மனவிரக்தியை அதிகம் சந்திக்கிறார்கள்.

ஜாதகத்தில் மனோகாரகன் எனப்படும் சந்திரன் வலிமை குறைந்தால் மனரீதியான பாதிப்பு மிகும். லக்னத்திற்கோ, லக்னாதிபதிக்கோ 8-ல் சந்திரன் மறைந்தால் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சந்திரனுடன் சனி, ராகு- கேது இணைந்திருந்தாலோ, அஷ்டமாதிபதி, பாதகாதிபதியுடன் சந்திரன் சம்பந்தம் பெற்றிருந்தாலோ கடுமையான மன உளைச்சல் ஏற்படும். சனி – சந்திரன் சேர்க்கை, சனியும் சந்திரனும் சப்தம பார்வை, பாகை முறையில் சனி- சந்திரன் நெருக்கம் ஆகியவை முதன்மையான மனக்குழப்ப கிரக அமைப்பாகும்.

ராசியின் அடிப்படையில் பார்க்கும் போது மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பம் ஆகிய ராசிகாரர்களுக்கு சந்திரனால் மனரீதியான பாதிப்புகள் இருக்கும்.

நட்சத்திர ரீதியாகப் பார்க்கும் போது சனி, புதன், ராகு, கேது ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மன அழுத்தம் மிகுதியாக இருக்கும். குறிப்பாக சனி, புதனின் நட்சத்திரத்தில் பிறந்தவர் களுக்கு பாதிப்பு மிகுதியாக இருக்கும். புதன், சந்திரன், சனி நீச்சம் அடைந்தாலும் கடுமையான மனக் குழப்பம் ஏற்படும்.

கோட்சார சந்திரன் ராசிக்கு எட்டில் மறையும் போது அல்லது ராகு-கேது, சனியை கோட்சார சந்திரன் தொடும்போது மனரீதியான பாதிப்பு நிச்சயம் உண்டு.

கோட்சார ராகு, கேது, சனி சந்திரனுடன் சம்பந்தம் பெறும் போதும், ஏழரை சனி, அஷ்டம சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி, ஜென்ம ராகு -கேது, ஆகிய காலகட்டங்களில் மனோரீதியான பாதிப்பு அதிகம் உருவாகும். லக்னத்தில் சனி, ராகு, கேது, அஷ்டமாதிபதி இருந்தாலோ அல்லது பார்வை சேர்க்கை பெற்றாலோ அல்லது லக்னாதி பதியுடன் சனி, ராகு, கேது இணைந்தாலோ அல்லது 6,8,12-ம் அதிபதியுடன் அமர்ந்தாலும் மன ரீதியான பாதிப்பு ஏற்படும்.

ஜனன கால ஜாதகத்தில் அதிக வக்ர கிரகம் இருந்தாலும், மன அழுத்தம் உண்டாகும்.

உளவியல் ரீதியாக பண அழுத்தமே மனக்குழப்பத்தத்திற்கு காரணமாகிறது. கண்ணுக்கு தெரியாமல் தொடங்கும் இந்த மன குழுப்பம், ஒற்றைத் தலைவலி முதல் மாரடைப்பு வரையான பல்வேறு நோய்களை மனிதனுக்கு தருகிறது.

பரிகாரம்

சந்திரன் இரவு வேளைக்கு அதிபதி என்பதால் வளர்பிறை காலங்களில் சந்திர தரிசனம் செய்ய மனக்குழப்பம் நீங்கும். மனக்குழப்பத்தால் பய உணர்வு மிகுதியாக உள்ளவர்கள் திங்கட்கிழமைகளில் மாலை நேரத்தில் வெண்ணிற மலர்களால் சிவபெருமானையும், அம்பிகையையும் வழிபட வேண்டும்.