பில்லி சூனியம், நவக்கிரக தோஷங்களில் விடுபட உதவும் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர்

261

அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை.

தமிழகத்தில் மிகப் பிரசித்தி பெற்றதும், பக்தி காவியமான ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டதுமான அனந்தமங்கலம் ராஜகோபாலசுவாமி கோவிலில் எழுந்தருளியுள்ள திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு வாய்ந்தது.

மூன்று கண்களும் பத்து கைகளும் உள்ள ஆஞ்சநேயர் அமைப்பு தமிழகத்திலேயே இந்த கோவிலில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தனிச்சிறப்பாக அனந்தமங்கலம், ராமாயணத்துடன் நேரடி தொடர்பு கொண்டது.

ராமபிரான் கட்டளையை ஏற்று கடலில் பதுங்கி இருந்த இரு அரக்கர்களை அழித்து அனுமன், ராமபிரானை சந்திக்க திரும்பிக் கொண்டிருக்கும்போது, அனந்தமங்கலத்தில் இளைப்பாற இறங்கியுள்ளார். அப்போது இயற்கை அழகுடன் இருந்த இப்பகுதியில் மன நிறைவோடு ஆனந்தம் அடைந்தார். எனவே இந்த திருத்தலம் அனந்தமங்கலம் என அழைக்கப்படுகிறது.

இங்குள்ள அனுமனை வழிபட்டால் பிரம்மா, விஷ்ணு, சிவன் உள்ளிட்ட மூன்று கடவுள்களையும் ஒருங்கே வழிபட்ட பலன் கிடைப்பதுடன், பில்லி சூனியம் மற்றும் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது திடமான நம்பிக்கை. தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில் முனைவோர், திருமணம் ஆகி குழந்தை வரம் வேண்டுவோர் என ஏராளமான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வந்து அனுமனை வழிபடுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தில் திரளான பக்தர்கள் இங்கு வந்து வழிபடுவது வழக்கம். ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை தினங்கள் சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால், ஆண்டுதோறும் இந்த அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கானோர் அனுமனை தரிசிக்க இங்கு வருவர். அதை ஒட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.