கல்யாண உற்சவம் செய்தால் விரைவில் திருமணம்

213

 

நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வருபவர்கள், ஒப்பிலியப்பன் ஸ்தலத்தில் உள்ள பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும்.

ஒப்பிலியப்பன்ஆயிரம் ஆண்டுகள் கடந்து மிளிரும் அழகுடன் சுத்தானந்த விமானத்துடன் கூடிய கருவறையில் திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்ற நின்ற திருக்கோலத்துடன் கிழக்கு திசை நோக்கி சுமார் 9 அடி உயரத்தில் ஒப்பிலியப்பன் (ஒப்பற்றவன்) எழுந்தருளியிருக்கிறார். திருவிண்ணகரம் என அழைக்கப்பட்ட இத்தலத்தினை இன்றைய காலக் கட்டத்தில் பக்தர்கள் தென்னக திருப்பதி என்றும் உப்பிலியப்பன் கோயில் என்றும் அழைக்கின்றார்கள்.

இத்தலத்திலுள்ள பூமி நாச்சியார் சமேத உப்பலியப்பனை பசு நெய் தீபம் இட்டு துளசி பத்திரம் கொண்டு வழிபட வாழ்வில் வளமும், நலமும் நிறையும் என்பது ஐதீகம்.

திருப்பதி போக இயலாதவர்கள் இங்கு வந்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொள்கிறார்கள். திருமங்கையாழ்வார், பேயாழ்வார், நம்மாழ்வாரால் மங்களாசாஸனம் செய்யப் பெற்ற திருத்தலம் இது.

இத்தலம் சிறந்த பிரார்த்தனைத் தலமாகப் போற்றப்படுகிறது. நீண்ட நாட்களாக திருமணம் தடைபட்டு வருபவர்கள், இத்தலத்தில் பெருமாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைத்தால் விரைவில் திருமணம் நடைபெறும். மேலும் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பம், தொழில் செழிக்க இத்தலத்தில் ஏற்றப்படும் கோடி தீப விளக்குக்கு இயன்ற உதவி செய்தால் பயன்கிடைக்கும் என்று நம்புகிறார்கள்.