கேது தோஷம் போக்கும் திருத்தலம்

231

கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்களுக்கும் திருமுருகன்பூண்டிக்கு சிறந்த கேது பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.

கேது பகவான், தலவிருட்சம், நாகர் சன்னிதி சுந்தரமூர்த்தி நாயனாரின் தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமாக விளங்குவது, திருமுருகன்பூண்டி. இது திருப்பூர் மாவட்டம், அவிநாசியில் இருந்து தென்கிழக்கே 5 கிலோமீட்டர் தொலைவில் நொய்யல் நதியின் வடக்கே அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தின் வடமேற்கு மூலையில் ஐந்து தலை நாகமும் மனித உடலுமாக கேது பகவான் தனிக் கோவில் கொண்டு விளங்குகிறார். இங்கே இவர்தான் சிறப்பு மூர்த்தி. ஒரு கோவிலில் ஒன்பது கிரகங்களும் இருக்கும் இடத்தினை ஆராய்ந்தால், கேது அங்கே வடமேற்கில்தான் வீற்றிருப்பார். அதேபோல இந்த ஆலயத்தின் வடமேற்கில் கேது சன்னிதி அமைந்திருப்பது மிகச் சிறப்பானதாகும்.

கேதுதிசை, கேது புத்தி நடப்பவர்கள், ஜாதகத்தில் கேது தோஷம் உள்ளவர்கள், கொள்ளு தானியம் முடிச்சு போட்டு, பல வண்ண நிற திரி போட்டு, நெய் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றுகிறார்கள். கொள்ளு சாதம் நைவேத்தியமும் படைக்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு கேது பகவானுக்கு, சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடை பெறுகிறது.

இவருக்கு எதிரே மாவிலங்க மரம் தல விருட்சமாக தழைத்து நிற்கிறது. இங்கே நாகப் பிரதிஷ்டை செய்து கொள்கிறார்கள். திருக்காளகஸ்தி தவிர, சோழ நாட்டில் கேதுவுக்குத் தனி சன்னிதியுள்ள கீழப் பெரும்பள்ளம், ராகு -கேது ஏக சரீரமாக விளங்கும் திருப்பாம்புரம், மன்னை பாமணி போல கொங்கு நாட்டில் திருமுருகன் பூண்டி கேது பகவானுக்கு தனியான பரிகாரத்தலமாக சிறந்து விளங்குகிறது.