குழந்தை பாக்கியம் அருளும், திருமண தடை நீக்கும் தேவநாதசாமி

85

கடலூர் அருகே உள்ள புகழ்பெற்ற திருவந்திபுரம் தேவநாதசாமி கோவில் திருமண தடை நீக்கும் தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர்.

கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில் உள்ளது. திருமண தடை நீக்கும் தலமாக இந்த கோவில் விளங்குகிறது. பெரும்பாலான பக்தர்கள் தங்களது மகன் மற்றும் மகளின் திருமணத்தை இந்த கோவிலில் வந்து நடத்துவது என்று வேண்டிக்கொள்வார்கள். திருமணங்கள் கைகூடியதும் இங்கு வைத்து திருமணத்தை நடத்துகிறார்கள்.

இதனால் ஒவ்வொரு முகூர்த்த நாட்களிலும் குறைந்தது 100 திருமணமாவது நடக்கிறது. இதில் அதிகப்பட்சமாக 222 திருமணம் வரை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சிக்காக மண்டபமும் கோவில் சார்பாக உள்ளது. மேலும் மணமக்களுக்கு திருமண சான்றிதழும் கொடுக்கப்பட்டு வருகிறது.

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தி அடைய பொதுமக்கள் சாமியை வேண்டிக் கொள்கின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகளில் பொது மக்கள் மொட்டை யடித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி செல்கின்றனர்.

திருப்பதியில் நேர்த்திக்கடன் செலுத்த முடியாவிட்டால் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினால் போதுமானது என கூறப்படுகிறது. அதன்படி பக்தர்கள் திருப்பதிக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்தாவிட்டாலும் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசாமி கோவிலில் புரட்டாசி மாதத்தில் தங்கள் நேர்த்திக்கடனாக மொட்டையடித்து பெருமாளை தரிசித்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.