பாவவினை போக்கும் பாதயாத்திரை

268

பக்தர்கள் இறைவனை தேடி பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.

பாதயாத்திரை

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழாவில் “பாதயாத்திரை” என்பது தனி சிறப்பு பெற்று விளங்குகிறது. இதற்காக பக்தர்கள் சிலர் மார்கழி மாதத்தில் துளசி மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். ஒருசிலர் தை மாதத்தில் இருந்து முருகனை எண்ணி தங்கள் விரதத்தை தொடங்குகின்றனர். ஆகவே தை மாதம் தொடங்கி விட்டாலே பழனியில் பக்தர்கள் கூட்டத்தை அதிகம் பார்க்க முடியும்.

குறிப்பாக காரைக்குடி, தேவகோட்டை, நத்தம், திருச்சி, ராமநாதபுரம் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திண்டுக்கல் வழியே காவடி சுமந்து, முருகா…! முருகா…! என்ற சரணகோஷம் முழங்க பாதயாத்திரையாக வருகின்றனர். அப்போது அவர்கள் முருகனுக்கு பிடித்த காவி உடையை அணிந்து பக்தி பரவசத்துடன் வருவதை பார்க்கலாம்.

இதில் செட்டிநாடு என்றழைக்கப்படும் காரைக்குடி நகரத்தார் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயில்காவடி, சேவல்காவடி, வேல்காவடி எடுத்து ஆடிக் கொண்டே வருகின்றனர். இவ்வாறு பாதயாத்திரையாக வருவதால் நம் முன்ஜென்ம பாவ வினைகள் நீங்கி நம் வாழ்வு சிறப்பு பெறும் என்பது ஐதீகமாக உள்ளது.