தீவினைகள் நீங்க, எதிரிகள் பயம் விலக நரசிம்மரை வழிபடுங்க

116

நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். தீவினைகள் நீங்கவும், எதிரிகள் பயம் விலகவும் நரசிம்மரை போற்றி வழிபட வேண்டும்.

நரசிம்மரின் அவதாரம் இறைவன் எங்கும் உள்ளார் என்பதை உணர்த்துவதாகும். நரசிம்மன் என்றால் ஒளிப்பிழம்பு என்று அர்த்தம். நரசிம்மனின் தேஜஸ் காயத்ரி மந்திரத்துக்குள்ளே இருப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

அதர்மத்தை அழிக்க உக்ர ரூபத்துடன் தூணைப் பிளந்து அவதரித்த திருமாலின் நான்காவது அவதாரம் நரசிம்மம். தன்பால் பக்தி கொண்டொழுகும் பக்தர்களை அனவரதமும் தெய்வம் காத்து நிற்கும் என்பதற்கு சான்றாகத் திகழ்வது இந்த தெய்வ அவதாரம். அதர்மவாதிகளுக்குத்தான் அவர் சிம்மசொப்பனமே தவிர, அன்பர்களுக்கு அவர் வெல்லக்கனியாகத் திகழ்கிறார்.

அதுமட்டுமல்ல, நரசிம்ம மூர்த்தியை பேரழகன் என்றும் போற்றுகின்றனர் பக்தர்கள். ராமபிரானை அழகு ராமன் என்றும், அபிராமன் என்றும் போற்றும் பக்தர்கள், நரசிம்மரை பேரழகன் என்று பொருள்படும்படியாக ‘வேள்’ என்று அடைமொழியுடன் சேர்த்து அழைத்து வழிபடுகிறார்கள். அதாவது சிங்கவேள் பெருமாள் என்று போற்றுவர். நரசிம்மரை தொடர்ந்து மனம் ஒன்றி வழிபட்டு வந்தால் எதிரிகளை வெல்லும் பலம் கிடைக்கும். தீவினைகள் நீங்கவும், எதிரிகள் பயம் விலகவும் இந்த அழகரை சிங்கவேள் பெருமாளைப் போற்றி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு சனிக்கிழமையும், சுவாதி நட்சத்திர திருநாள் மற்றும் பிரதோஷ காலங்களில் ஸ்ரீநரசிம்மரை வழிபட உகந்த நாட்களாகும். துளசி மாலை சாற்றி, பானகம் நைவேத்யம் செய்து வழிபடுவது சிறப்பானதாகும். ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீநாராயணீயம் படித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.