திருமண தடை, தீராத நோயை தீர்க்கும் ஆலயம்

189

திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

தஞ்சையில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது, பிள்ளையார்பட்டி என்னும் கிராமம். பிள்ளையாருக்கென்றே தோன்றிய கிராமம் இது. ஊர் மட்டுமல்ல, பிள்ளையாருக்காகவே இந்த ஊரில் ஒரு கோவிலும் அமைந்துள்ளது என்றால் இந்த ஊரின் சிறப்பு நமக்கு தெரியவரும்.

இங்குள்ள பிள்ளையார் கோவிலில், மாமன்னன் ராஜராஜ சோழனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அழகிய பிள்ளையார் வீற்றிருக்கிறார். இத்தல மூலவர் ‘ஹரித்ரா விநாயகர்’ என்று அழைக்கப்படுகிறார். ஒன்பதாம் நூற்றாண்டை சிறப்பித்த மாமன்னன் ராஜராஜ சோழன் காலத்தில்தான், இந்த வியத்தகு ஊரும், கோவிலும் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.

இங்குள்ள விநாயகர் சிலை, தமிழகத்திலேயே உயரமான சிலை என்று குறிப்பிடப்படுகிறது. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட இந்த சிலையில் ஒரு தந்தம் உடைந்து காணப்படுகிறது. பிள்ளையாரின் முதுகு பகுதியில் ஸ்ரீ சக்கரம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் உள்ள விநாயகரின், நாபி (தொப்புள்) அருகில் பாம்பு ஒன்று படமெடுத்தபடி உள்ளது. அது விநாயகரின் உடலை சுற்றிய நிலையில் காணப்படுகிறது.

விநாயகரின் உடல் முழுவதும் பாம்புகள் பின்னப்பட்டுள்ளது. எனவே இந்த தலம் கேது நிவர்த்தி தலமாக கருதப்படுகிறது. திருமண தடை நீக்கவும், புத்திர பாக்கியம் கிடைக்கவும், தீராத நோயை தீர்க்கவும் உகந்த ஆலயம் என்பதால் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோவிலுக்கு வந்து வழிபட்டுச் செல்கிறார்கள். பொதுவாக விநாயகருக்கு, எலிதான் வாகனமாக இருக்கும். ஆனால் இங்கு நந்தியே விநாயகரின் முன்புறம் வாகனமாக இருக்கிறது.

தஞ்சையில் இருந்து 7 கிலோமீட்டர் தொலை வில் அமைந்துள்ள இந்தக் கோவிலுக்கு டவுன் பஸ் வசதி உண்டு. ஆட்டோ, ஷேர் ஆட்டோ, மினி பஸ் மூலமும் சென்று வரலாம்.