இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

41

இறந்தவர்கள் கனவில் வந்தால் என்ன அர்த்தம்?

நம்மோடு நெருங்கிப் பழகியவர்கள், நமக்கு பிடித்தவர்கள், போன்றோர் இறந்தால், சில நேரங்களில் நமது கனவில் அவர்களின் உருவம் வரக்கூடும். அவ்வாறு அவர்கள் வந்தால் வீண் பயம் நம்மைத் தொற்றிக் கொள்வதும் அதுகுறித்த சிந்தனையும் அடிக்கடி தோன்றி நம்மை படாத பாடு படுத்திவிடும்.

இதுகுறித்து ஜோதிடம் என்ன கூறுகிறது என்று பார்ப்போம். இயற்கையாக மரணமடைந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும் என்று கனவுகள் தொடர்பான நூல்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பேரன், பேத்தி எடுத்து நன்றாக வாழ்ந்து மரணமடைந்த முன்னோர்கள் கனவில் வந்தால் அதனை ஆசி எனக் கருத வேண்டும். ஆனால் துர்மரணம் அடைந்தவர்கள் கனவில் வந்தால் சில இடர்பாடுகள் ஏற்படும்.

உடல் நலம் குறையலாம். விபத்து, குடும்பத்தில் வாக்குவாதம், பிரிவு உள்ளிட்டவை ஏற்படக் கூடும். இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க குலதெய்வக் கோயில் வழிபாட்டை மேற்கொள்ளலாம். பொங்கல் வைத்து அன்னதானம் வழங்கலாம். வஸ்திர தானம் செய்யலாம். வயதானவர்கள், பெரியவர்கள், வாழ்க்கை முழுவதும் சிறப்பாக வாழ்ந்து இயற்கை எய்தியவர்கள் கனவில் வந்தால் கவலை கொள்ளத் தேவையில்லை.

இறந்தவர்கள் உங்களுடன் சாப்பிடுவது போல கனவு கண்டால் நற்புகழும் அதன் காரணமாக செல்வ செழிப்பும் ஏற்படும். இறந்தவர்கள் உங்களிடம் பேசுவது போல கனவு வந்தால் இக்கட்டான நிலையில் உங்களுக்கு உதவ சிலர் வருவார்கள் என்று பொருள். நாமே இறந்து விட்டது போல் கனவு வந்தால் நம்முடைய ஆயுள் கூடும். இறந்து போன உங்கள் தாய் உங்கள் கனவில் வந்தால் உங்களுக்குகோ அல்லது உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ ஒரு பெண் குழந்தை பிறக்க போகிறது என்று பொருள்.

நமக்கு வேண்டப்பட்ட யாராவது இறந்துவிட்டது போல கனவு வந்தால் துன்பங்கள் விலக போகிறது என்று அர்த்தம். இறந்து போனவர்களை (யாராக இருந்தாலும்) தூக்கி செல்வது போல கனவு வந்தால் நன்மை உண்டு. உறவினர் ஒருவர் இறந்து விட்டது போல் கனவு கண்டால், அவரின் துன்பங்கள் நீங்கும் என்று பொருள். நண்பன் இறந்து போனது போல் கனவு கண்டால், கூடிய விரைவில் நற்செய்தி ஒன்று வரும்.