என்ன ராசி என்று எப்படி கணிக்கிறார்கள் தெரியுமா?

112

என்ன ராசி என்று எப்படி கணிக்கிறார்கள் தெரியுமா?

சந்திரனைப் பார்த்து காதல் வயப்படுகின்றனர். வானத்தில் இருக்கும் முழு நிலவு மனதில் எழுச்சியை ஏற்படுத்துகிறது. ஒரு புத்துணர்ச்சியை தரும். சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன.

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நட்சத்திரத்தை வைத்துதான் அவர் என்ன ராசி என்று கணிக்கிறோம். முதல்தசை என்னவென்று கணிக்கிறோம். கோச்சாரப்படி கிரகங்களின் சஞ்சாரம், சனி, குரு, ராகு கேது பெயர்ச்சிக்கு பலன்கள் பார்ப்பதோடு ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்கிறோம்.

சந்திரனின் சஞ்சாரம் அமாவாசை, பவுர்ணமி என மாதந்தோறும் நிகழும் போது மனதளவில் மாற்றங்களை ஏற்படுத்தும். சந்திரனும் சூரியனும் ஒரே ராசியில் இருக்கும் போது அமாவாசையும், சந்திரனும் சூரியனும் எதிர் எதிர் திசையில் சூரியனிடம் இருந்து ஏழாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் போது பவுர்ணமியும் ஏற்படுகிறது.

ரிஷபம், கடகம், விருச்சிகம்:

சந்திரன் இயற்கை தத்துவப்படி நீருக்கு ஆதாரமாக இருப்பவர். சந்திரனின் ஆட்சி வீடு கடக ராசியாகும். இது ஜலராசி இதனை கடக ஆழி என்று சொல்வார்கள். உச்சவீடு ரிஷபம், நீச்ச வீடு விருச்சிகம். நீர் இருக்கும் இடமெல்லாம் சந்திரன் ஆதிக்கம் செய்யும் இடங்கள்தான். கடல் சார்ந்த அறிவியல் நுட்பங்கள், நதி, நதிக்கரை, கடற்கரை, ஏற்றுமதி, இறக்குமதி, இரவுக்கு அதிபதி, தாயார், தாய்வழி உறவுகள், சுவாசம், நுரையீரல், இடது கண், இயற்கை பருவ மாற்றங்கள், பெண்களின் பருவகால மாற்றங்கள், விவசாயம், செடி கொடிகள், அந்தந்த பருவ காலத்திற்கேற்ப செய்யப்படும் தொழில்கள் என எங்கும் வியாபித்து இருப்பவர் சந்திரன்.

சந்திரன் சஞ்சாரம்:

சந்திரன் மனோகாரகன். ஒருவரின் கற்பனை சக்தியை அதிகரிப்பவர். எண்ணம், செயல், சொல், புத்தியை சரியாக கொண்டு செல்பவர் சந்திரனே. ஜாதகத்தில் சந்திரன் சரியாக இருந்தால் எல்லாமே சரியாக இருக்கும். அதே நேரத்தில் ஜாதகத்தில் சந்திரன் நீசம் பெற்றோ பலம் குறைந்தோ பாவ கிரகங்களுடன் சேர்ந்தோ இருந்தால், பாதிப்பு ஏற்படும்.

கர்பத்திற்கும் சந்திரனுக்கும் தொடர்பு:

சந்திரனுக்கும் மனித மனங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பெண்களின் மனதளவில் மட்டுமல்லாது உடல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சந்திரனே காரணமாக இருக்கிறார். பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்ப விஷயங்கள் எல்லாம் சந்திரனின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கின்றன. இதைத்தான் மாணிக்கவாசகர், திருவாசகத்தில் ‘உருத்தெறியா காலத்தே என் உட்புகுந்து உளம் மன்னி’ என்று குறிப்பிடுகிறார். அந்தக் கரு உருவாகும்போதே சந்திரனின் செயல்பாடுகள் தொடங்கிவிடுகின்றன.

சூரியன், சந்திரன் செவ்வாய்

ஒரு பெண்ணின் உடலில் ஹார்மோன்களின் இயக்கத்தால் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்த ஹார்மோன் இயக்கத்தை சந்திரன் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. எனவே பெண்ணினுடைய கரு முட்டை கருத்தரிக்கிற நிலைக்கு போவதற்கு சந்திரன் சஞ்சாரம் முக்கியமாகும். ஒரு பெண் கரு தரிப்பதற்கு சூரியன்-சந்திரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதோடு பூமிகாரகன் என்று சொல்லக்கூடிய செவ்வாயும் கெட்டுவிடக்கூடாது. செவ்வாய் ரத்தகாரகன். பெண்கள் பூப்படைவதற்கு முக்கிய காரணமே செவ்வாய்தான்.

கரு உருவாக சரியான நேரம்:

ஒரு பெண்ணின் ஆரோக்கியத்தை பொறுத்து இந்த மாதவிலக்கு சரியான பருவத்தில் வர வேண்டும். மாதவிலக்கு என்பது சினைப்பையில் உருவான அவளுடைய முட்டை 28 தினங்களுக்கு பிறகு வெளியேற்றப்படும் நிகழ்ச்சியாகும். அதாவது எந்த திதியில் அவள் மாதவிலக்கு அடைகிறாளோ அதிலிருந்து 28 ஆவது திதியில் புதிய கருமுட்டை உருவாகும். இந்த சமயத்தில் தாம்பத்திய உறவு நிகழ்ந்தால் கர்ப்பம் ஜனிக்கும். 28 தினங்களுக்கு ஒரு முறை பெண் மாதவிலக்கு அடைந்தால் ஆரோக்கியமான உடல் நிலையுடன் இருக்கிறார் என்று அர்த்தம்.

குழந்தையின் ஜனனம்:

கரு உருவான உடன் எந்த நட்சத்திரத்தில் ஒரு குழந்தை ஜனிக்க வேண்டுமோ, அந்த நட்சத்திரத்தின் தசா, புக்தி, அந்தரம் எல்லாம் தொடங்கிவிடுகின்றன. அதேபோல் லக்னம் மற்ற கிரக அமைப்புகள் எல்லாமும் முடிவாகி செயல்பட ஆரம்பிக்கின்றன. இந்தக் கணக்கை வைத்துத்தான் குழந்தை பிறந்தவுடன் மாதா கர்ப்ப செல்லு நீக்கி மீதி இந்த தசையில், இந்த புக்தியில், இந்த அந்தரத்தில் இவ்வளவு வருடம், மாதம், நாள் என்று பஞ்சாங்கத்தின் துணையுடன் கணக்கிடுகிறோம்.

சந்திரன் கிரகங்கள் கூட்டணி:

ஒரு பிறந்த உடன் அவரது ஜாதகத்தில் சந்திரனுடன் நிழல் கிரகங்களான ராகுகேது சம்பந்தப்படும்போது கிரஹண தோஷம் உண்டாகிறது. கிரக சேர்க்கைகளில் நன்மை, தீமை இரண்டும் உண்டு. இது அவரவர் வாங்கி வந்த வரம். கிரக சேர்க்கைகள் இருக்கும் இடம். ஜாதக பலம், பூர்வ புண்ணிய பாக்கிய பலம் ஆகியவற்றை வைத்துத்தான் யோக, அவயோகங்கள் அமைகின்றன. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன், ராகுகேது, செவ்வாயுடன் சம்பந்தப்படும்போது அவர் மிகச்சிறந்த மருத்துவராக இருப்பார். அதேநேரத்தில் பயம், படபடப்பு, கோபம், வெறி, விரக்தி, இயலாமை, அவமான உணர்ச்சி, சுய பச்சாதாபம், செயல் இழப்பு, பிறரை சார்ந்து இருப்பதால் உண்டாகும் ஆற்றாமை, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணங்களை சந்திரன், ராகுகேது கிரகங்கள் ஏற்படுத்துகின்றன.

திருமண தடை ஏற்படுத்தும் அமைப்பு:

சனியும், சந்திரனும் கூட்டணி சேர்வது, பார்த்துக்கொள்வது புனர்பூ தோஷத்தை ஏற்படுத்துகிறது. ஒரே ராசியில் சனியும், சந்திரனும் சேர்ந்திருப்பது, சனியின் நட்சத்திரத்தில் சந்திரன் இருப்பது, சனி சந்திரன் பார்வை, பரிவர்த்தனை, இந்த தோஷத்தை தரும். இதன் மூலம் மன சஞ்சலம், சபலம் அதிகம் கொண்டிருப்பார்கள். திருமண விஷயத்தில் எல்லாம் கூடிவந்தாலும் திருமணம் முடியும் வரை ஒரு நிச்சயமற்றதன்மை இருக்கும். திருமணம் முடிவதில் பாதிப்பு இருக்கும்.