ஏழரைச் சனி, விரைய சனி, அஷ்டமத்து சனி இதற்கெல்லாம் என்ன வித்தியாசம்?

194

ஏழரைச் சனி, விரைய சனி, அஷ்டமத்து சனி இதற்கெல்லாம் என்ன வித்தியாசம்?

ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் தங்கி பலன் அந்த ராசிக்குரிய பலனை கொடுக்கும் கிரகம் சனி பகவான். ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒரு முறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும். அந்த 30 வருடத்தில் மனித வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படலாம்.

அதனால்தான் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை; கஷ்டத்திலேயே இளைத்தவர்களும் இல்லை என்பார்கள். சனீஸ்வரனைப்போல் கொடுப்பவரும் இல்லை கெடுப்பவரும் இல்லை என்பதும் சோதிடப் பழமொழி. நவக்கிரகங்களில் ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் சனி பகவான். இவருக்கு ஒரு கால் ஊனம் என்பதால், மந்தன் என்றும், முடவன் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, அர்த்தாஷ்டகச்சனி என்பன சனீஸ்வரனின் சஞ்சாரத்தினால் (கோசரநிலை) ஏற்படுவனவாகும். சனி மகா தெசை பிறப்பில் இருந்து கணிக்கப்பெறுவதாகும். அவரவர் ராசி சக்கரத்தில் (சந்திரன் நிற்கும் இடம் ”ராசி” எனப்படும். அதற்கு) 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனியின் முதல் கட்டம் ஆரம்பமாகின்றது.

அங்கு இரண்டரை வருடம் சஞ்சரிக்கும் சனியை ”விரயச் சனி” எனவும். அடுத்து ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் 2-ஆம் கட்டமாக சஞ்சரிக்கும் சனியை ”ஜென்மச் சனி” என அழைப்பர். அதன் பின் ஜென்ம ராசிக்கு 2-ஆம் இடத்தில் சனி சஞ்சரிக்கும் இரண்டரை வருட மூன்றாம் கட்டச் சனியை ”பாதச் சனி” என்றும் குடும்பச் சனி, வாக்குச் சனி எனவும் அழைப்பர். இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும்.

ஜென்ம சனி:

ஒருவரின் ராசியில் சனிபகவான் ஒன்றாம் இடத்தில் அமர்ந்திருக்கும் பொழுது பிறக்கிறது. ஒருவருடைய ஜாதகத்தில் ஜென்மசனி நிகழும் போது, பல்வேறு இழப்புகள் அல்லது அதற்கு ஏற்றார் போல துன்பங்கள் ஏற்படும் என்பது ஜோதிட வல்லுநர்கள் சொல்லும் வாக்கு.

ராகு கேதுவுக்கு பரிகார பூஜை செய்வதும், சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும் ஜென்ம சனியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும். வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை சாற்றி வழிபட்டால் நன்மை உண்டாகும்.

மங்கு சனி:

மங்கு சனி என்பது ஒருவருடைய குழந்தை பருவத்தில் தொடங்கி அவருடைய 25 வயது வரைக்கும் வரும் காலம். இச்சனியின் தாக்கமானது பெரிதளவில் இருக்காது. இச்சனியின் ஜாதககாரர்களுக்கு தாக்கம் ஏற்படுவதை விட அவர்களின் பெற்றோர்களுக்கே தாக்கமானது காணப்படும்.

பொங்கு சனி:

பொங்கு சனி என்பது ஒருவருடைய 35 வயதில் தொடங்கி 55 வயது வரை ஆட்சி செய்யும். இச்சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு அக்கால கட்டத்தில் பொருளாதார ரீதியான தாக்கம் ஏற்படும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

மாரக சனி

மாரக சனி ஏற்படும் ஜாதககாரர்களுக்கு மரணம் உண்டாகும் என்பது ஐதீக ரீதியாக எழுதப்பட்டது. ஆனால் இச்சனியின் பார்வை படும் ஜாதககாரர்களுக்கு மரணம் நிச்சயம் என்பது கிடையாது. மரணத்திற்கு சரியாக உள்ள பிரச்னைகள் உண்டாகும் என்பதே உண்மை.

அஷ்டம சனி:

அஷ்டம சனி என்பது, முன் ஜென்மத்தில் ஒருவர் செய்யும் வினைகளைப் பொறுத்து சனி பகனான் அவர்களுக்கென தண்டனையை கொடுப்பதாகும். வயதிற்கேற்ப அஷ்டமத்து சனி பிரச்சனைகளைக் கொடுக்கும். அந்த வகையில், 4 முதல் 15 வயதுள்ளோருக்கு அஷ்டமத்து சனி நிகழ்ந்தால் படிப்பில் சற்று மந்தமாக இருப்பார்கள். இதுவே 40 வயட்திற்கு உட்பட்டவர்களுக்கு அஷ்டமத்து சனி நடந்தால் குடும்பத்தில் தேவையில்லாத பிரச்னைகள் தோன்றும் என்றும் கூறுகிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

அஷ்டமத்து சனியில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள சனிக்கிழமைதோறும் சனி பகவானுக்கு நல்லெண்ணெய், எள் சேர்த்து விளக்கேற்ற வேண்டும்.

அர்த்தாஷ்டம சனி:

அர்த்தாஷ்டம சனியானது சனிபகவான் ராசியின் நான்காம் இடத்தில் சஞ்சரிக்கும்போது பிறக்கிறது. பொருள் மற்றும் நிதி செலவுகளை ஏற்படுத்தும். தொழில் பாதையை இச்சனியானது பார்ப்பதனால் தொழில் சார்ந்த விஷயங்களில் கவனமாக இருப்பது அவசியமாகும். இச்சனியின் தாக்கத்தை தாங்குவதற்கு ஞாயிற்றுகிழமைகளில் சொர்ண ஆகர்ஷண பைரவரையும் சனிக் கிழமைகளில் சிவாலயங்களுக்கு சென்றும் வழிபடுதல் வேண்டும்.

விரைய சனி:

விரைய சனி ஏழரை சனியின் முதற்கட்டமாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு ஜாதகத்தில் இரண்டரை ஆண்டு காலம் ஆட்சி செய்கிறது. இச்சனியின் காலத்தில் பொருளாதரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும்.

பாத சனி, வாக்கு சனி:

பாத சனி மற்றும் வாக்கு சனி என்பது எந்த ராசியில் சனி அமர்கிறாறோ அந்த ராசியின் முன்பாக உள்ள ராசியில் இச்சனியானது பிறக்கிறது. பாத சனி என்பதால் பயணங்களில் கவனமாக இருக்கும் காலமாகப் பார்க்கப்படுகிறது.

வாக்கு சனி நிலவும் போது கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் போகும் தருணம் ஏற்படும். வாக்கை காப்பாற்ற செய்யும் முயற்சிகளைத் திருந்த வண்ணம் செய்தல் வேண்டும். இத்தாக்கத்தை எதிர்கொள்வதற்கு குச்சனூரில் உள்ள சனி பகவான் ஆலயத்துக்குச் சென்று வர நன்மை உண்டாகும்.

கண்டக சனி:

கண்டக சனி என்பது கழுத்தைப் பிடிக்கும் சனி என்பார்கள். குரல்வளையை இறுகப்பிடித்தால் நாம் எப்படி திணறுகிறோமொ அதே போல் ராசியில் ஏழாம் இடத்தில் வரும் இந்த கண்டக சனியால் வரும் இடர்பாடுகள் இருக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு முன்னால் யோசித்து செயல்பட்டால் இச்சனி காலத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.