ஒருவரின் லக்கினம் எப்படி இருக்க வேண்டும்?

133

ஒருவரின் லக்கினம் எப்படி இருக்க வேண்டும்?

சுவர் இல்லாமல் சித்திரம் வரைய முடியாது. அது போல ஒருவரின் ஜாதகத்தில் மிக பெரிய ராஜ யோகங்கள் இருந்தாலும் லக்கினம் வலுவாக இல்லாமல் இருந்தால் அது பலன் அளிக்காது. பொதுவாக லக்கினம் என்னவென்று கேட்டால் பெரும்பாலான மக்களுக்கு விடை தெரியாது. ராசியை மட்டுமே அறிந்து வைத்து இருப்போம். இதற்கு காரணம் ஜோதிடம் அந்த காலத்தில் அரசர்களுக்கும், மேல் தட்டு மக்களுக்கும் மட்டும் பார்க்கப்பட்டு வந்த ஒரு உயர் சாஸ்திரம் ஆகும்.

எளிய மக்களுக்கு ஜாதகம் எழுத அல்லது கணிக்க அந்த காலத்தில் ஜோதிடர்கள் போதுமானவர்கள் இல்லை, எனவே குழந்தை பிறக்கும் தினம் அன்று என்ன ராசி மற்றும் நட்சத்திரம் வருகிறதோ அதற்கு ஏத்த பெயர் வைத்து விடுவார்கள். அவர்கள் ஏதேனும் முக்கிய விஷயமாக ஜோதிடரை தொடர்பு கொள்ளும் போது, அவர்கள் பெயரை சொன்னால் போதும், ஜோதிடர்கள் அவர்கள் ராசிக்கு அப்பொழுது என்ன கோட்சார பலன்களோ அதை சொல்வார்கள். இந்த காலத்தில் திருமணத்துக்காக பொருத்தம் பாக்கும் போதுதான் ஒருவருக்கு லக்கினம் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்து, லக்கினம் பற்றி அறிந்து கொள்வார்கள்.

உண்மையில் லக்கினம் தான் ஒருவரின் ஆதி புள்ளி, ஒரு தனிநபரின் துல்லிய பலன்களை தெரிந்து கொள்ள லக்கினமும், அதன் ராசி சக்கரம் மற்றும் நவாம்ச சக்கரத்துடன் தசா புத்தி மற்றும் கோட்சாரத்தை பொருத்தி பார்த்தால் துல்லிய பலன்கள் கிடைக்கும். இந்த பதிவில் ஒருவரின் லக்கினம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொள்வோம்.

உங்கள் ஜாதகம் என்ன பலன்களை தந்து கொண்டு இருக்கிறதை அறிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த ஜோதிட கட்டுரையின் ஆசிரியர் ஜோதிடர் கிரியை +91 9677824799 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் ஜாதக பலன்களை குறைந்த கட்டணத்தில் தெளிவான பலன்களை பெறுங்கள்.

லக்கினம் எவ்வாறு இருக்க வேண்டும்:

  1. லக்கினம் என்பது உங்களை குறிக்கும். ஒருவரின் செயல், எண்ணங்கள், குண நலன்கள், ஆயுள் மற்றும் அதிர்ஷ்டத்தை லக்கினம் குறிக்கும். ஒருவரின் லக்கினம் மேஷம் முதல் மீனம் வரை எது வேண்டுமானால் அமையலாம். ஆனால் கடகம் மற்றும் சிம்மம் ராசியில் (சூரியன் சுப தொடர்பு பெற்று மற்றும் சந்திரன் வளர் பிறை ஆகி அமைய வேண்டும்) லக்கினம் அமைவது சிறப்பு.
  2. ஏனென்றால் இந்த லக்கின அதிபதிகள் சூரியன் மற்றும் சந்திரன் இந்த ஒரு ராசிக்கு மட்டும் அதிபதிகள், எனவே இவர்கள் லக்கினாதிபதி எனும் முழு அந்தஸதை அடைவார்கள். மற்ற லக்கினத்துக்கு அதிபதிகள் கூடுதலாக மற்றோரு வீட்டின் ஆதிபத்தியம் பெற்று கலப்பு பலன்களை செய்வார்கள்.
  3. லக்கினம் சுபர் வீடுகளில் அமைவது சிறப்பு. சுபர் வீடுகளில் முதன்மையாக தனுசு மற்றும் மீனம், அதனை அடுத்து துலாம் மற்றும் ரிஷபம், புதனின் வீடுகளான மிதுனம் மற்றும் கன்னி (குறிப்பு: புதன் லக்கினாதிபதியாக வரும் போது பாவ கிரகங்களின் சேர்க்கை மற்றும் தொடர்பு பெறாமல் இருப்பது நல்லது).
  4. லக்கினம் பாவர் வீடுகளான மேஷம், விருச்சிகம், மகரம் மற்றும் கும்பம் ஆக அமைந்து இருந்தாலும், லக்கினத்தில் பாவ கிரகங்களான சனி, செவ்வாய் (பார்வை மற்றும் இருப்பு), ராகு ஆகியவற்றின் தொடர்பு இல்லாமல் இருப்பது நல்லது.
  5. லக்கினத்தில் குரு (தனித்து வெறு எவரும் பார்வை இல்லாமல்) தனித்து இருப்பவர் நல்லவராக இருப்பார், லக்கினத்தில் சுக்கிரன் (தனித்து வெறு எவரும் பார்வை இல்லாமல்) தனித்து இருக்க பிறந்தவர் நல்ல கலா ரசிகராக, வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணம் உள்ளவராக இருப்பார். லக்கினத்தில் புதன் (தனித்து வெறு எவரும் பார்வை இல்லாமல்) தனித்து இருக்க பிறந்தவர் தனது புத்தியின் வலுவால் வாழ்வில் எதையும் சாதிக்க பிறந்தவராக இருப்பார்.
  6. லக்கினத்தில் சூரியன் (தனித்து வெறு எவரும் பார்வை இல்லாமல்) தனித்து இருக்க பிறந்தவர் பொதுவாகவே தன்னை சுற்றி இருப்பவரை அதிகாரம் செய்யும் மனம் கொண்டவராகவும், தலைமை தாங்கும் விருப்பம் கொண்டவராக இருப்பார்கள். லக்கினத்தில் சந்திரன் (தனித்து வெறு எவரும் பார்வை இல்லாமல்) தனித்து இருக்க பிறந்தவர், வளர்பிறை சந்திரனாக இருந்தால் திடமான மன உறுதியும், அடுத்தவருக்கு உதவும் மனப்பான்மையும் இருக்கும். தேய்பிறை சந்திரனாக இருந்தால் இதற்கு எதிர்மறையாக இருக்கும்.
  7. லக்கினத்தில் செவ்வாய் (தனித்து வெறு எவரும் பார்வை இல்லாமல்) தனித்து இருக்க பிறந்தவர், இயல்பிலே கோவம் அதிகம் உள்ளவராகவும், வேகம் வீரம் மற்றும் அசட்டு தைரியம் கொண்டவராக இருப்பார்கள். செவ்வாய்க்கு சுப தொடர்புகள் ஏற்பட பலன்கள் மாறும். லக்கினத்தில் சனி (தனித்து வெறு எவரும் பார்வை இல்லாமல்) தனித்து இருக்க பிறந்தவர், தாழ்வு மனப்பான்மை, பொய் மற்றும் புரட்டு பேசுதல், அடுத்தவரை ஏமாற்றும் எண்ணம், நயவஞ்சகம் இருக்கும், சனியின் சுப தொடர்புகள் இதை மாற்றும்.
  8. ராகு லக்கினத்தில் இருப்பது சிறப்பு இல்லை, கேது இருப்பது மிக பெரிய தீமையும் இல்லை.