கல்வி, ஜோதிடம், கலை, இசையில் சிறந்து விளங்க புதன் வழிபாடு!

66

கல்வி, ஜோதிடம், கலை, இசையில் சிறந்து விளங்க புதன் வழிபாடு!

சந்திரன் மற்றும் தாரைக்கு மகனாக பிறந்தவர் புதன் பகவான். இவர், சிவபெருமானை நோக்கி கடும் தவம் புரிந்தார். அவரது தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், புதனுக்கு நவக்கிரகங்களில் ஒன்றாகும்படி, நவகோள்களில் ஒன்றாகும்படி பதவியை அளித்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

நவக்கிரகங்களில் புதன் பகவானும் ஒருவர். நான்கு குதிரைகள் பூட்டிய தேரில் வலம் வருபவர். சூரிய பகவானைச் சுற்றி வலம் வரும் முதல் கிரகம் புதன். அதாவது, 24 மணி கணக்கில், தன்னைத் தானே சுற்றியும் 88 நாட்களில் சூரிய பகவானை ஒருமுறையும் சுற்றி வருகிறார்.

உலகிலேயே குருத்துரோகமும், நம்பிக்கை துரோகமும் மாபாதகம் என்கிறது சாஸ்திரம். அப்படியான குருத்துரோகத்தைச் செய்த பாவத்தில் இருந்தும் நம்பிக்கை துரோகத்தைச் செய்த பாவத்தில் இருந்தும் சந்திர பகவான், புதன் பகவானுடன் இணைந்து தவமிருந்து, சிவ பூஜைகள் செய்து, சாபம் நீங்கப் பெற்றான். அப்படி சாபம் நீங்கிய திருத்தலம்தான் திருவெண்காடு. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகிள் உள்ள ஊர் தான் திருவெண்காடு. இந்த ஊரில் புதன் பகவான் வீற்றிருக்கிறார். இந்த கோயிலானது புதன் பகவானுக்குரிய பரிகார தலமாக விளங்குகிறது. புதன் பகவான் தனி சன்னதியில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

நாம் செய்த பாவங்களை எல்லாம் போக்கி அருள் புரியும் தலமாக இந்த தலம் விளங்குகிறது. இந்தக் கோயிலில் சிவபெருமான் சுவேதாரண்யேசுவரர் என்ற திருநாமத்துடன் காட்சி தருகிறார். திருவெண்காடு கோயிலுக்கு வந்து சுவேதாரண்யேசுவரரை வழிபட்டு தனி சன்னதியில் அருள் பாலிக்கும் புதன் பகவானை மனதார பிரார்த்தனை செய்தால், ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.

மேலும், கல்விக்கு வித்தகனாக திகழும் புதன் பகவானை மனதார வழிபட கல்வியில் சிறந்து விளங்கலாம். இசையில் தேர்ச்சி பெறலாம். ஜோதிடம் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கலாம். கல்விக்கும் கலைக்கும் வித்தைகளுக்கும் புதன் பகவானே காரகன். அதனால்தான் புதன் பகவான் வித்யாகாரகன் என்றும் அழைக்கப்படுகிறார்.