களத்திர தோஷம் என்றால் என்ன?

46

களத்திர தோஷம் என்றால் என்ன?

மண வாழ்வைக் குறிப்பது களத்திரம் ஆகும். இந்த மண வாழ்வு அமைவதற்கு ஏற்படக் கூடிய தடை, தாமதங்கள் மற்றும் எதிர்பார்ப்புக்கு மாறான வாழ்க்கைத் துணை அமைவது போன்றவையே களத்திர தோஷம்.

ஒருவர் ஜாதகத்தில் களத்திர ஸ்தானம் எனும் 7-ம் இடத்து அதிபதி மறைவு ஸ்தானங்களான 6 மற்றும் 8 ஆகிய இடங்களில் அமர்ந்து மறைந்து போவதும். அப்படியில்லை என்றால், பாப கிரகங்களான ராகு கேதுவோடு இணைவதாலும், நீச்சம் என்னும் பலவீனத்தை அடைவதும், உச்சம் பெற்று வக்கிரம் அடைவதால் தன் பலத்தை முழுமையாக இழப்பதுமாக, இதுபோன்ற கிரக அமைப்புகள் இருக்குமாயின் அது திருமணத்திற்கு தடையை உண்டு பண்ணும்.

அதேபோல 7-ம் இடத்தில் களத்திர காரகன் என்னும் சுக்கிரன் தனித்து இருந்தாலும் “காரகோ பாவ நாஸ்தி” (திருமணத்தை நடத்திக் கொடுப்பவர் சுக்கிர பகவான், ஏழாம் பாவகம் என்பது திருமணத்தைக் குறிக்கும். சுக்கிரன் திருமணத்தை நடத்திக் கொடுப்பவராக இருந்தாலும், ஏழாமிடத்தில் தனித்து இருந்தால் அவருடைய காரகமான திருமணம் என்பதும், ஏழாம் பாவம் என்னும் திருமண ஸ்தானமும் சேரும்போது அந்த ஏழாம் பாவகம் “காரகோ பாவ நாஸ்தி” என்னும் நிலையை அடைகிறது) என்னும் அடிப்படையில் திருமணத்திற்கு தடையை உண்டு பண்ணும்.\

மேலும் ஏழாமிடத்தில் சூரியனும் சந்திரனும் அமர்ந்து அமாவாசை எனும் நிலை ஏற்படும் பட்சத்தில் திருமணத்திற்குத் தடையை ஏற்படுத்தும். 7 ஆம் இடத்தில் சனி இருந்தாலும், கேது இருந்தாலும், 7 ஆம் அதிபதியாக வரக்கூடியவர் பாதி மறைவு ஸ்தானங்களான 3 மற்றும் 12 ஆகிய இடங்களில் இருந்தாலும், நீச்சம் அடைந்து வக்கிரம் பெற்றிருந்தாலும், (நீச்சம் அடைந்து வக்கிரம் பெற்றால் நீச்சம் நீங்கி உச்ச பலம் பெற்று, நீச்சபங்க ராஜ யோகமாக மாறும். அதேசமயம் நீச்சத்திற்கான வேலையைச் செய்த பிறகே நீச்சபங்க ராஜ யோகத்திற்கான வேலையைச் செய்யும்) இப்படிப்பட்ட அமைப்புகள் திருமணத்திற்கு தாமதத்தை உண்டு பண்ணும்.

ஒரு சிலர் திருமணம் கூடி வரும்போது அந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் நல்ல வேலை கிடைத்த பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறுவதும், அல்லது சொந்த வீடு வாங்கிய பின்பே திருமணம் செய்வேன் என்று சொல்வதும், தேவையான பணம் சேமிப்பாக மாறிய பிறகே திருமணம் செய்து கொள்வேன் என்பதும் இந்த கிரக அமைப்புகளினால் தானே தவிர, அவருடைய சிந்தனைக்கு உட்பட்டதல்ல. இந்த கிரகங்கள் இப்படிப்பட்ட எண்ணங்களைத் தூண்டி விடும். ஜோதிடம் என்பதே வரக்கூடிய பிரச்சினைகளை உணர்ந்து அ தை எப்படியாவது தவிர்க்க முயற்சி செய்யக்கூடிய காரணியாகும்.

எனவே திருமண வாய்ப்புகள் தேடி வரும்போதே திருமணம் செய்து கொள்வதே புத்திசாலித்தனம். அந்த வாய்ப்பை தவற விடும் பட்சத்தில் திருமணத்தில் தடைகள் மட்டுமல்ல, தாமதங்களும் உண்டு பண்ணும். அதுமட்டுமல்லாமல் விரும்பிய மண வாழ்க்கை கிடைக்காமல் கிடைத்த வாழ்க்கையை ஏற்று நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளிவிடும்.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் திருமண வாய்ப்புகளை சொந்தக் காரணங்களுக்காக தள்ளி வைக்காமல், திருமணத்தை சரியான காலத்தில் செய்து கொள்வதே நல்லது. ஆண்கள் அதிகபட்சம் 32 வயதிற்குள் திருமணம் செய்து கொள்ள வேண்டும். பெண்கள் அதிகபட்சம் 27 வயதிற்குள் திருமணம் செய்ய வேண்டும். இது அனைத்தும் தவறும்பட்சத்தில் புத்திர பாக்கியம் உண்டாவதிலிருந்து, மன ஒற்றுமை ஏற்படுவது வரை நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வருகிறது.