கிரகணத்தின் போது செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்  என்னென்ன?

124

கிரகணத்தின் போது செய்ய வேண்டியதும், செய்ய கூடாததும்  என்னென்ன?

சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய இரு கிரகணங்கள் ஆண்டில் இரு முறை அல்லது சில நேரங்களில் மூன்று முறை ஏற்படுவதுண்டு. அமாவாசை அன்று சூரிய கிரகணமும், பெளர்ணமி அன்று சந்திர கிரகணம் ஏற்படுவது வழக்கம்.

சூரிய கிரகணம் என்றால் என்ன?

சந்திரன் பூமியைச் சுற்றுகின்றது. பூமி சூரியனை சுற்றுகின்றது. அப்படி சுற்றும் போது சூரியன் மற்றும் பூமி இடையே ஒரே நேர்கோட்டில் சந்திரன் வரும் போது சூரிய கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகின்றது

சந்திர கிரகணம் என்றால் என்ன?

சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது கிரகணம்  உண்டாகிறது. அந்நேரத்தில் பூமியினுடைய நிழல் நிலவின் மீது விழுந்தால் அதனை சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்கிறோம்.

சரியான நேர் கோட்டில் வந்தால் (நட்ட நடுவில்) முழு சூரிய கிரகணம் அல்லது முழு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இல்லை என்றால் பகுதி கிரகணம் ஏற்படுகிறது.

கிரகணத்தின் போது செய்யக் கூடாதவை:

கிரகணத்தின் போது சூரியனிலிருந்து வரும் கதிர்கள் தடுக்கப்படுவதால், வானத்திலிருந்து வரும் தீய கதிர்வீச்சுகள் நம்மை தாக்கும். அதனால் கிரகணத்தின் போது நம்மை காத்துக் கொள்ள சொல்கின்றனர். அதனால் நாம் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். தீய கதிர்களால் கண்ணுக்கு தெரியாத பல உயிரினங்கள் கொல்லப்படுவதால், கிரகணத்தின் போது சாப்பிடக்கூடாது என்றும், சமைத்த உணவுகள் மூடி வைக்க வேண்டும் என கூறப்பட்டது.

கிரகண நேரத்தில் கர்ப்பிணிகள் உடலில் அரிப்பு ஏற்படும் இடத்தில் சொரிந்து கொண்டால், குழந்தைக்கு அந்த இடத்தில் மச்சம் போன்று கருமை நிறத்தில் ஏற்பட வாய்ப்புள்ளதாக பெரியோர் கூறுகின்றனர்.

கிரகணத்தை வெறும் கண்ணில் பார்ப்பது தவிர்க்க வேண்டும். கிரகணத்தின் ஒரு மணி நேரத்திற்கு முன்போ அல்லது பின்போ தான் உணவு அருந்த வேண்டும்.

ஏன் தர்ப்பைப் புல் பயன்படுத்த வேண்டும்:

தர்ப்பைப் புல் கதிர்வீச்சுகளை தடுக்கக் கூடிய வல்லமை வாய்ந்தது என்பதால், கிரகண நேரத்தில் உணவு வைத்திருக்கும் பாத்திரத்தில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கச் சொன்னனர் நம் முன்னோர்கள்.

கிரகணத்தின் போது செய்ய வேண்டியவை:

மந்திர சாஸ்திராத்தில் பொதுவான நேரத்தில் ஒரு முறை இறைவனை வேண்டி ஜெப மந்திரத்தை உச்சரித்தால் ஒரு மடங்கு பலனும், அந்திசாயும் நேரத்தில் செய்தால் 10 மடங்கும் பலன்களும், பிரம்ம முகூர்த்தத்தில் செய்தால் 100 மடங்கு பலன்களும், பெளர்ணமி, அமாவாசை தினத்தில் செய்தால் 1000 மடங்கு பலன்களும் கிடைக்கும். அதுவே கிரகண நேரத்தில் செய்தால் லட்சம் மடங்கு பலன்கள் கிடைக்குமாம். அதனால் இயல்பாக செய்யும் வேலையை விடுத்து, முழுவதுமாக இறைவனை சரணாகதி அடைவது நல்லது.

கிரகணம் முடிந்த பின்னர் வீட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, குளித்து, தீபம் ஏற்றி இறைவனை வழிபடுவதோடு, கோயிலுக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் கடலிலோ அல்லது கல் உப்பு சிறிது போட்ட அந்த தண்ணீரில் குளித்தல் நல்லது. அப்படி செய்தால் கிரகண நேரத்தில் கெட்ட கதிர்களால் இறந்த நுண் உயிரிகள் நம் உடலில் இருந்து அகலும்.