கேந்திராதிபத்திய தோஷம் என்றால் என்ன? அதனால், என்ன விளைவு வரும்?

71

கேந்திராதிபத்திய தோஷம் என்றால் என்ன? அதனால், என்ன விளைவு வரும்?

ஒரு ஜாதகத்தில் 1, 4, 7, மற்றும் 10 ஆகிய பாவங்கள் கேந்திரங்கள் ஆகும். அந்த கேந்திர ராசிகளின் அதிபதிகள் கேந்திர அதிபதிகள் ஆவர். உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், மேஷ லக்கினம் என எடுத்துக் கொள்ளலாம். மேஷத்தின் 4ஆம் வீடு கடகம் கேந்திரம் வீடு ஆகும். அதனுடைய அதிபதி சந்திரன் என்பதால், கேந்திரதிபதி ஆவார்.

அதே போன்று, மேஷத்தில் 7ஆம் வீடு துலாம். அதன் அதிபதி சுக்கிரன், மேஷத்தில் 10ஆம் வீடு மகரம். அதன் அதிபதி சனி கேந்திரதிபதிகள் ஆவார்கள். ஜாதகத்தில் 1, 4, 7 மற்றும் 10 ஆகிய வீடுகளின் அதிபதிகள் கேந்திரதிபதிகள் ஆவர். அவர்கள் 1, 4, 7 மற்றும் 10 ஆகிய வீடுகளில் அமர்ந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஆகும். அதாவது, 1, 4, 7 மற்றும் 10 ஆகிய வீடுகளின் அதிபதிகள் 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்திய தோஷம் ஆகும்.

கேந்திராதிபத்திய தோஷம் குரு பகவான், புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு மட்டுமே ஏற்படும். மற்ற கிரகங்களுக்கு கேந்திராதிபத்திய தோஷம் கிடையாது. அதுவே புதன் பகவான், குரு மற்றும் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்ந்தால் தோஷ பலன் ஏற்படுவதில்லை.

எந்த கிரகம் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றுள்ளதோ, அந்த கிரகம் தனது காரகப் பலனை குறைவாகவே வழங்கும்.

புதன் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றால்…..

கல்விக்கும், கலைக்கும், வித்தைகளுக்கும் காரகன் புதன் பகவான். அப்படிப்பட்ட புதன் பகவான் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றால் கல்வி, வித்தைகள், கலைகள் கற்றுக்கொள்வது, கணிதம், வியாபாரம், தாய்மாமன் உறவு ஆகிய காரக பலன்கள் பாதிக்கப்படும். அதாவது இந்த பலன்களை புதன் பகவானால் தர முடியாது.

குரு கேந்திராதிபத்திய தோஷம் பெற்றால்….

தனம், செல்வம், புத்திர பாக்கியம் ஆகியவற்றிற்கு காரகன் குரு பகவான். அப்படிப்பட்ட குரு பகவான் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றால் புத்திர பாக்கியம், தங்கம் சேமிப்பு, தனம், செல்வம், நல்ல ஆசிரியர்கள் அமைவது ஆகியவற்றில் சிக்கல் ஏற்படும். அதாவது, இவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.

சுக்கிரன் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றால்….

சுக்கிர பகவான் கேந்திராதிபத்திய தோஷம் பெற்றால் அழகிய வாழ்க்கைத்துணை, வியாபாரம், ஆடம்பர பொருள் சேர்க்கை, பொன் பொருள் சேர்க்கை ஆகியவை பாதிக்கப்படலாம். கேந்திராதிபத்திய தோஷம் தரும் கிரகம் மற்றொரு பாவகிரகத்தோடு இணைந்தாலோ, பார்வை பெற்றாலோ தோஷம் வேலை செய்யாது என்பது குறிப்பிடத்தக்கது.