சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம் என்ன?

63

சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியின் முக்கியத்துவம் என்ன?

ஜோதிடத்தில் சனி மற்றும் குருவின் பங்கு மிகவும் முக்கியமானது. கோட்சாரத்தில் சனி மற்றும் குரு மாறும் போது மனிதர்களின் வாழ்வில் பெரியளவில் மாற்றங்கள் ஏற்படும். சனி பெயர்ச்சி மற்றும் குரு பெயர்ச்சியாகும் போது கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள், அபிஷேக, ஆராதனைகள் செய்யப்படும். இதனை அந்தந்த ராசிக்காரர்கள் கோயிலுக்கு சென்று பரிகாரம் செய்து கொள்வது வழக்கம்.

காலப்புருஷனின் லக்னம் மேஷம். அந்த வகையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் காலப்புருஷனின் அங்கங்கள் கீழ்க்கண்டவாறு அமையும்.

 • மேஷம் – தலை
 • ரிஷபம் – முகம்
 • மிதுனம் – கைகள்
 • கடகம் – மார்பு
 • சிம்மம் – இருதயம்
 • கன்னி – அடி வயுறு
 • துலாம் – மர்ம உருப்பு
 • விருச்சிகம் – குதம்
 • தனுசு – தொடை
 • மகரம் – கால் மூட்டு
 • கும்பம் – கணுக்கால்
 • மீனம் – பாதம்

காலப்புருஷனின் லக்னமான மேஷத்திற்கு 9, 12க்கு உடையவன் குரு பகவான். 10, 11க்கு உடையவன் சனி பகவான். கால புருஷனின் அங்கங்களான தொடை முதல் பாதம் வரை உள்ள கால் பகுதியை சனி மற்றும் குரு ஆட்சி செய்கிறார்கள். மனிதனைத் தாங்கிப் பிடிப்பது, நடக்க வைப்பது, ஓட வைப்பது எல்லாம் கால்கள் தான். கால்கள் இல்லாதவனால் நகரமுடியாது. எனவே மனிதனின் இயக்கத்திற்கு கால்கள் மிகவும் இன்றியமையாததாகும்.

சனியும், குருவும் கோட்சரத்தில் ராசி சக்கரத்தில் நகர்ந்து செல்வதை மனிதனே ராசி சக்கரத்தில் நடந்து செல்வது போன்று பாவித்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இதன் காரணத்தினாலேயே சனி பெயர்ச்சிக்கும், குரு பெயர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. கால புருஷனுக்கு 9 ஆம் வீடான தனுசு தர்ம ஸ்தானம் எனப்படுகிறது. 10ஆம் வீடான மகரம் தர்ம ஸ்தானம் எனப்படுகிறது.

எனவே தனுசு ராசியின் அதிபதியான குரு தர்மக்காரகன் எனப்படுகிறான். அதே போன்று மகர ராசியின் அதிபதியான சனி கர்மக்காரகன் எனப்படுகிறான். இங்கே கர்மம் என்பது விதியைக்குறிக்கும். தர்மம் என்பது சுய முயற்சியைக் குறிக்கும். எனவே இரு கால்களாக நின்று மனிதனைத் தாங்கிப் பிடிப்பது விதியும் சுயமுயற்சியும்தான். இதில் ஒன்று இல்லையென்றாலும் மனிதனின் வாழ்க்கை ஊனமாகிவிடும்.

மனிதனுக்கு இரண்டு கால்களும் சமமாக இருப்பதால்தான் அவனால் நிற்க முடிகிறது, நடக்க முடிகிறது. அதுபோல் விதியும், முயற்சியும் சரி சமமாக செயல்பட்டால் தான் வாழ்க்கை நகரும், இல்லையென்றால் வாழ்க்கை சரிவர நகராது. இதன்மூலம் நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் மனிதன் விதியை மட்டும் நம்பிக்கொண்டு இருக்கக்கூடாது, முயற்சியும் செய்ய வேண்டும். முயற்சி செய்தால்தான் விதிகூட சரியாக செயல்படும். அப்படி முயற்சி செய்யவில்லை என்றால் விதியும் ஊனமாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.