பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன? சிறப்புகள் என்னென்ன?

76

பஞ்ச பட்சி சாஸ்திரம் என்றால் என்ன? சிறப்புகள் என்னென்ன?

ஆய கலைகள் 64 என்று கூறினாலும், அதில் மேம்பட்டு விளங்கும் கலைகள் 4 ஆகும். அதுவே சரகலை:பஞ்சபட்சி: கெவுளி சாஸ்திரம்: கொக்கோகம்: என்ற நான்கு விதகலைகளையும் சித்தர்கள் கலை என்று அழைக்கப்படுகிறது. இந்த அபூர்வ சாஸ்திரங்களை யோகிகள், ஞானிகள், முனிவர்கள், சித்தர்களும் பல்லாயிரம் வருடங்களாக மிகவும் இரகசியமாக பயன்படுத்தியும் பாதுகாத்தும் பயிற்சி அளித்தும் வந்துள்ளனர்….

மேற்கண்ட நான்கு கலைகளில் பஞ்ச பட்சி சாஸ்திரம் எனப்படும் மகத்துவம் வாய்ந்த இக்கலை ஆதியில் சிவபெருமானால், பார்வதி தேவிக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது. சூரபத்மனை வதம் செய்ய முருகப்பெருமானுக்கு வேல் கொடுத்து வெற்றிவாகை சூட வைத்த பார்வதிதேவி இந்தப் பஞ்ச பட்சி சாஸ்திரத்தையும் முருகனுக்கு போதித்தாக கூறப்படுகிறது. மேலும், பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியால் எளிதாக சூரனை வென்றார் முருகப்பெருமான்.

சூரவதம் முடிந்ததும் இந்தக் கலையை அகத்தியருக்கும் மற்ற சித்தர்களுக்கு உபதேசித்தார். இக்கலையைப் பயின்ற சித்தர்களும் தம்மிடம் உள்ள உண்மையான சீடர்களுக்கு மட்டும் குருவழி உபதேசம் அளித்து வந்துள்ளனர். பஞ்ச பட்சி சாஸ்திரம் என்பது ஜோதிடக்கலையிலும் மேலான மிகவும் துல்லியமான ஒரு காலக்கணிதம் ஆகும். இது பஞ்ச பூத சக்திகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குவது ஆகும்.

நவக்கிரகங்கள், பன்னிரு இராசிகள், இருபத்தேழு நட்சத்திரங்கள் ஆக மொத்தம் – 48- இவை அனைத்தையும் ஐந்து பட்சிக்குள் (பறவைகள்) அடக்குவதே இதன் சூட்சும ரகசியமாகும். பஞ்சபூதம் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் எனப்படும் ஐந்து வித மாபெரும் பிரபஞ்ச சக்திகளை பஞ்ச பட்சி எனப்படும் வல்லூறு, ஆந்தை, காகம், கோழி, மயில் என ஐந்து வித பறவைகளாக மாற்றி அமைத்து இக்கலையை உருவாக்கியது இறைவனின் வல்லமையாகும்.

சரம் தெரிந்தவனிடம் சரசமாடாதே பட்சி தெரிந்தவனிடம் பகைகொள்ளாதே பல்லி சொல்பவனிடம் பதில் பேசாதே என்பது பெரியோர் வாக்குவாகும். மேற்கண்டபடி பஞ்ச பட்சி தெரிந்தவனை பகைத்துக் கொண்டால் பகைத்தவனை எளிதில் சாய்க்கும் வல்லமை அவனுக்கு உண்டு என்பதால்தான். இன்றும் தென் தமிழகத்தில் இக்கலையின் ரகசியம் அறிந்த குருமார்கள் ஒரு சிலர் மட்டுமே உள்ளனர். இக்கலையினைப் பயன்படுத்தி சேவல் சண்டை, ஆட்டுகிடா சண்டை, சிலம்பம், பிரச்சனை வழக்குகள் போன்றவற்றில் தன்னைச் சார்ந்தவர்களை மட்டும் வெற்றி பெற வைத்து வருகின்றனர்.

அதே சமயம் பஞ்சபட்சி கலையின் சூட்சும சக்தியைப் பயன்படுத்தி வாழ்வில் மிகவும் தாழ்ந்த நிலையில் உள்ள ஒருவரை வாழ்வில் மிகவும் உச்ச நிலையில் உயர்த்தி பணம், பதவி, புகழ் ஆகியவற்றை எளிதில் அடைய வைக்க முடியும். மேலும் பஞ்ச பட்சி நுட்பத்தினை அறிந்தவன் ஜெகத்தை ஆள்வான். அவனை எவரும் வெல்ல முடியாது என்பது அறுதியிட்ட உண்மையாகும்.

இக்கலையை பயன்படுத்தி மாந்திரீக அஷ்ட கர்மம் ஆடலாம், செய்தொழில், காரியங்கள், வாழ்க்கையில் முன்னேற புதுவித திட்டங்கள் போன்றவற்றை உடனே நடைமுறைக்கு கொண்டு வரவும், தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறவும் முடியும். நவக்கிரகங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்தும் வல்லமை இக்கலைக்கு உண்டு. நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம், நேரம், லக்கினம் போன்ற அனைத்து தோஷங்களும் பஞ்ச பட்சியினைக் கட்டுப்படுத்த இயலாது.

பஞ்ச பட்சி சாஸ்திரத்தை கற்கும் ஒருவனை பஞ்ச பூத சக்திகள் துணை நின்று காக்கும். அவன் வாழ்வில் மேன்மை பெற்று சீரும் சிறப்புடன் வாழ வகை செய்யும். அதே சமயம் இக்கலையின் மூலமாக சத்ருக்களை துன்புறுத்தவோ, அழிக்கவோ நினைத்தால் ஏழு ஜென்ம பாவ வினைகள் வந்து சேரும். எனவே இந்த தெய்வீகக் கலையினை குருவின் வழியில் சென்று கற்று சித்தி பெற்று தான் வாழ்வில் வளம் பெறுவதுடன் தன்னைச்சுற்றி உள்ளோரையும் வாழ்வில் வளம் பெறச் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.