பவித்ரோத்சவம் என்றால் என்ன?

45

பவித்ரோத்சவம் என்றால் என்ன?

பவித்ரோத்சவம் என்பது வைஷ்ணவ கோயில்களில் நடக்கும் ஒரு முக்கிய உற்சவம். புனிதப்படுத்துதல் என்ற பொருளில் வரும் பெருமாளையே பவித்ரன் என அழைப்பார்கள். ஒவ்வொரு கோயிலிலும் ஆவணி அல்லது புரட்டாசி மாதங்களில் பவித்ரோத்ஸவம் 3, 5, 7 அல்லது 9 நாட்களுக்குக் கொண்டாடப்படும் போதும் மற்றைய திருவிழா காலங்களில் மந்த்ர லோபம் (தவறான மந்திர உச்சரிப்பு) ஏற்படக்கூடும்.

அதனால் எம்பெருமானுடைய ஸாந்நித்யம் குறைய வாய்ப்பு உண்டு. அவ்வாறு ஏற்படும் குறைகளைப் போக்குவதற்காகப் பவித்ரோத்சவம் கொண்டாடப்படுகிறது. அதே போல பூஜை செய்யும்போது தவறுகள் ஏற்படலாம். சில உத்சவங்கள் நடைபெறாமல் தடைபட்டு போகலாம் (கரோனா காலத்தில் ஏற்பட்ட மாதிரி). கோயிலுக்கு வரும் மகான்கள் துதிக்கும் துதிகளால் இறை சக்தி, புனிதம் ஆகியவை பெருகும். அதே சமயம் அங்கே வரும் பக்தர்களின் குணங்கள், மாறுபட்ட நடத்தைகள், அவர்களால் ஏற்படும் தீட்டுக்கள் போன்றவைகளால் மூர்த்திகளின் இறை அம்சங்களில் மாறுபாடு ஏற்படும்.

அவற்றை சரி இவற்றால் ஏற்படும் தோஷங்களை நீக்கிப் பரிசுத்தம் அடையும் வண்ணம் செய்யப் படுவதே பவித்ரோத்சவம் ஆகும். மூர்த்திகளின் சாந்நித்யம் குறையாமல் இருக்க பவித்ரோத்ஸவம் கொண்டாடப்படுகிறது. ஆலயங்கள் தொடர்பான பிராயச்சித்தம் என்றும் சொல்லலாம். இந்த சமயத்தில் உத்சவ விக்கிரகங்கள் மட்டுமில்லாமல் மூலவருக்கும் சேர்த்தே விசேஷமான பவித்ர மாலைகள் அணிவிக்கப்படும்.

பவித்ரம் என்பது பட்டு நிறத்தால் செய்யப்பட்ட பல வண்ண மாலைகளுக்குப் பெயர். ஐந்து வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ள மாலைகளை பவித்திர மாலைகள் என்பார்கள் (நீலம், சிவப்பு, கருப்பு, மஞ்சள், பச்சை). இந்த உத்சவத்தில் பவித்ர மாலைகளை பெருமாளுக்குச் சாற்றுவார்கள்.

அனைத்து சன்னதிகளில் இருக்கும் பெருமாள், தாயார் மற்றும் ஆழ்வார்களுக்கும் பவித்திர மாலைகள் சாற்றப்படும். உத்சவத்தின் போது எம்பெருமானுக்குத் திருவாராதனம் சமர்பிக்கப்படும். ஹோமங்கள் செய்யப்படும். வேத பாகங்கள் புருஷ சூக்தம், விஷ்ணு சூக்தம், ஸ்ரீசூக்தம், பூ சூக்தம், சுதர்சன காயத்ரியும் ஓதப்படும்.

கடைசி நாளில் பிரமாண்டமான பூர்ணாஹுதி  நடைபெறும். உத்சவம்  முடிந்ததும், பவித்ரமாலைகள் எடுக்கப்படும். பிறகு, திருமஞ்சனம் நடைபெறும். இந்த உத்சவத்தின் பலன் அபாரமாகச் சொல்லப் பட்டுள்ளது. உத்சவத்தில் ஈடுபடுபவர்கள், உதவி செய்பவர்கள் ஆகியோர் பாவங்கள் தீரும். நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

இந்த உத்சவம் நடத்துவதன் மூலம் அந்த பகுதியில் நன்கு மழை பொழியும். வியாபார விருத்தியும், செல்வச் செழிப்பும் ஏற்படும். உலக நலன் கருதி செய்யப்படுவது தான் புனிதப்படுத்தும் பவித்திர உத்ஸவம். (“சவம்” என்றால் சோகம் அல்லது துக்கம். “உத்” என்றால் அதிலிருந்து மீள்வது. உத்சவங்களின் மூலம் சோக விமோசனம் பெறுகிறோம். இது எல்லா உத்சவங்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.