பாப கர்த்தாரி  யோகம் என்றால் என்ன? இந்த யோகம் என்ன செய்யும்?

61

பாப கர்த்தாரி  யோகம் என்றால் என்ன? இந்த யோகம் என்ன செய்யும்?

பாப கர்த்தாரி  யோகம் என்பது, கத்தரிக்குள் மாட்டிக்கொண்ட யோகம் என்று வைத்துக் கொள்ளுங்கள். கத்திரிக்குள் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும்?  வெட்டுப்பட்டுப் போகும். இல்லையா? வெட்டுப்படுதலில் தீயதும், நல்லதும் நடக்கும்.  துணி இருக்கு என்று வைச்சுப்போம், வெட்டுனாதனே சட்டை தைக்க முடியும். நல்லதும் நடக்க முடியும். ஆனால், இந்த யோகத்தில், அதிகமாகத் தீமையே உண்டு.  சில நேரங்களில், சில அமைப்புக்களால் நன்மையும் உண்டு. நடுவில் மாட்டிக்கொண்ட வீட்டின் பலன்கள் கெடும் அல்லது  பலன்கள் தாமதமாகும்.

இதை எப்படி பார்க்கிறது? இரண்டு தீய கிரகங்கள் ஒரு வீட்டின் இரு பக்கமும் அல்லது ஒரு கிரகத்தின் இரு பக்கமும் அமர்ந்திருந்தால் அது பாப கர்த்தாரி யோகம் எனப்படும். உதாரணத்திற்கு, ஒரு ஜாதகருக்கு 7ஆம் வீட்டின் இருபுறமும் தீய கிரகங்கள் இருந்தால், அந்த ஜாதகருக்கு திருமணம் தள்ளிக் கொண்டே போகும். ஜாதகத்தில் வேறு நல்ல அமைப்புகள் இல்லாமலிருந்தால் திருமணமே நடக்காமல் போய்விடும் அபாயமும் உண்டு. அப்படியே திருமணம் ஆகியிருந்தாலும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியில்லாமல் இருக்கும்.

இதே அமைப்பு 10ஆம் வீட்டிற்கு ஏற்பட்டாலும், அதாவது பத்தாம் வீட்டின் இரு புறமும் தீய கிரகங்கள் இருந்தாலும், ஜாதகருக்கு வேலை கிடைக்காது. கிடைத்தாலும் திருப்தியிருக்காது. அவதியாக இருக்கும். தனியாக தொழில் செய்வதும் நல்லதல்ல. இந்த அமைப்பு ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தாலும், அப்படியே அந்த வீட்டிற்கான பலா பலன்கள் கெடும். அவை என்னவென்று சம்பந்தப்பட்ட அந்த வீட்டை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

4 என்றால் கல்வி, 5 என்றால் குழந்தை பாக்கியம் இப்படி. இதே அமைப்பில் சிலருக்கு நன்மையும் கிடைக்கக்கூடும். அது என்னவென்றால், ஒரு வீட்டின் இருபுறமும் அல்லது ஒரு கிரகத்தின் இருபுறமும் சுபக் கிரகங்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட அந்த வீட்டிற்கு நன்மையான பலன்கள் அபரிதமாகக் கிடைக்கும்.

தீமைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்:

சனி, செவ்வாய், ராகு, கேது மற்றும் சூரியன்

நன்மைகளைச் செய்யக்கூடிய கிரகங்கள்:

குரு,  வளர் பிறை  சந்திரன், சுக்கிரன் மற்றும் புதன்

உதாரணங்கள்:

துலாமில் சுக்கிரன். அதன் பின்னால் கன்னியில்  சனி, அதற்கு முன்னால் விருச்சிகத்தில் சூரியன் இருப்பதாக வைத்துக் கொண்டால், அது துலாம் வீட்டிற்குப் பாப கர்த்தாரி யோகத்தைக் கொடுக்கும். அப்படி கொடுத்தால் என்ன ஆகும்? சுக்கிரனால் சரிவர இயங்க முடியாது. ஜாதகருக்கு உரிய பலனைத் தரமுடியாது. ஜாதகருக்கு காசு இருந்தும் பட்டினி, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியாக இருப்பான். சுகங்களை அனுபவிக்க முடியாது.

இதைப்போல ஐந்தாம் வீட்டின் இருபுறமும் இரு தீய கிரகங்கள். ஐந்தாம் வீட்டில் எந்த கிரகமும் இல்லை என்று வைத்துக் கொண்டால்,  ஜாதகருக்கு குழந்தைகளைப் பாதிக்கும். அதாவது ஜாதகருக்கு தன்னுடைய குழந்தைகளால் அவதிப்படுவான் அல்லது குழந்தை இல்லாமல் அவதிப்படுவான்.

இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் லக்கினம் மாட்டிக்கொண்டு விட்டால், ஜாதகருக்கு குணக்கேடு உடையவனாக இருப்பான். அதனால் பல சிக்கல்களை அவன் எதிர்கொள்ள நேரிடும்.