பித்ரு தோஷம் உங்கள் குடும்பத்திற்கு இருக்கிறதா?

106

பித்ரு தோஷம் உங்கள் குடும்பத்திற்கு இருக்கிறதா?

யாராக இருந்தாலும் ஒருவர் இறந்த பிறகு அவருக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களை கண்டிப்பாக முறைப்படி செய்ய வேண்டும். அப்படி செய்யாதவர்களின் குடும்பத்தில் துன்பம், நிம்மதியின்மை, பண ரீதியாக கஷ்டம் போன்றவை இருந்து கொண்டே இருக்கும் என்று கருட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய கஷ்டத்தை பித்ரு தோஷம் என்று அழைக்கிறார்கள்.

பித்ரு தோஷம் உள்ளவர்களின் வீட்டில் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம். நண்பர்களோடு பிரச்சனை ஏற்படும். குழந்தை பிறந்து இறந்து போகும் சூழல் ஏற்படும். தந்தை, தாயாரை இகழ்வதும், அவர்களை மதிக்காமல் அவமதிக்கும் செயல்களும் நடைபெறும். பணம் மற்றும் சொத்து, பொன், பொருள், பெண் போன்ற காரணங்களால் அயலாரை கொல்ல முயற்சிக்கும் செயலுக்கு மனம் உந்தப்படும்.

இறை வழிபாட்டில் ஈடுபட முடியாமல் வாழ்நாள் வீணாகக்கூடும். உற்றார் உறவினர்களுடன் ஒற்றுமையின்மை காணப்படும். குடும்பத்தில் நிம்மதியின்றி கடைசியில் வெறுமையே ஏற்படும். புத்திரன் பகைவனைப் போன்று மாறும் சூழல் ஏற்படும். மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் நெடுநாட்கள் பிரிந்து வாழும் நிலை ஏற்படும்.

இது போன்ற செயல்கள் உங்களது வீட்டில் நடந்தால் பித்ரு தோஷம் இருக்கிறது என்று கருட புராணம் சொல்கிறது.

இதுபோன்ற பிரச்சனைகள் நீங்க வேண்டுமானால், பித்ரு கடன்களை ஒழுங்காகவும், கடமை தவறாமலும் செய்யுங்கள். பித்ரு கடன் என்ன என்று தெரிந்து கொண்டு உங்களது பித்ருக்களை மகிழ்ச்சியடையச் செய்தால் இதுபோன்ற கெடுதல்கள் எல்லாம் இருக்காது. இதற்கு பரிகாரமாக அமாவாசை, பௌர்ணமி திதிகளில் விரதம் இருந்து, காலையில் எள் கலந்த சாதத்தை காகத்திற்கு வைத்து வழிபடுங்கள்.

அதிகாலை முதல் இரவு 7 மணி வரை வீட்டில் விளக்கு அணையாமல் எரிய விட வேண்டும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உதவ வேண்டும். அன்று மாலை சிவன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். இதன் மூலம் எந்த தோஷமும் உங்களை பாதிக்காது.