பொதுவாக ராகு தசை எப்போது யோகத்தை தரும்?

794

பொதுவாக ராகு தசை எப்போது யோகத்தை தரும்?

ராகு தசை ஒரு மனிதனை ஆட்கொள்வது 18 வருடங்கள். இந்த 18 வருட ராகு திசை என்பது ஒருவருக்கு மிகச் சிறந்த விழிப்புணர்வை ராகு தசை முடிந்த உடன் நமக்கு கிடைக்க செய்கிறது.

அப்படி என்ன விழிப்புணர்வு, ராகு போக காரகன், ராகு நின்ற வீட்டிற்கு எவ்வளவு கொடுத்தாலும் அதற்கு திருப்தி இல்லாமல் தேடல் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

காரணம் ராகுவிற்கு தலை மட்டுமே உடல் இல்லை எவ்வளவு கொடுத்தாலும் ஆசை தீராது. ராகுவிற்கு மிகவும் பிடித்தவர்கள் என்று பார்த்தால் சுக்கிரனும், சனியும் .ராகு சனியைப் போல் செயல்படுவார். கரும்பாம்பு என்று சொல்கிறோம்.

ராகு திசையில் திடீரென உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்து அழகு பார்ப்பதும் ராகுவே. ராகு தசை முடியும் பொழுது அனைத்தும் முடிந்து சாதாரணமாக மாற்றிவிடும். எந்த லக்னமாக இருந்தாலும் எந்த பாவத்தில் ராகு நின்றாலும், சுபர்கள் ஆன பௌர்ணமி சந்திரன் அல்லது குருவின் தொடர்பை ராகு பெற வேண்டும். பெரும்பாலும் கிரக சேர்க்கை இல்லாமல் தனித்த ராகுவாக இருந்து சுபர் தொடர்பு பெறுதல் அவசியம்.

குரு சேர்க்கை பெறுவதைவிட குரு பார்வையில் இருக்கும் ராகுவிற்கு, சுபத்தன்மை அடையும். குருவும் பங்கப் படாமல் இருப்பார். அவ்வாறு குரு பங்கப் படாமல் இருந்தால் தான் ராகு தசை முடிந்த உடன் வரக்கூடிய குரு தசையும் பாதிப்பு இல்லாமல் யோக தசைகள் ஆக செயல்படும்.

ராகு மேஷம் முதல் துலாம் வீடு வரை அமர்ந்திருந்தாலும் யோகத்தை செய்யக் கடமைப்பட்டவர். கால புருஷனுக்கு மேஷம் முதல் துலாம் வரை உள்ளது தலையிலிருந்து இடுப்புவரை குறிக்கக்கூடிய இடமாகும். பெரும்பாலும் இந்த இடங்களில் அமரும் ராகு யோகத்தையே செய்கிறார். விருச்சிகம் முதல் மீனம் வரை கேதுவின் உடைய வாள் பகுதியாக கருதப்படுகிறது.

3, 6, 10, 11 என்கிற உபஜெய ஸ்தானத்தில் இருக்கும் ராகு யோகத்தை செய்யும். இது மட்டும் போதுமா என்றால் நிச்சயமாக இல்லை. ராகுவிற்கு வீடு கொடுத்தவன் நிலை, ராகு பெற்ற சாரம் இரண்டும் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டும். வீடு கொடுத்தவனும் சாரம் கொடுத்தவனும் சுபர் தொடர்பு பெற்றிருத்தல் அவசியம் அல்லது நட்பு வலுவுடன் இருத்தல் அவசியம்.

சுக்கிரன் வீடுகளான துலாம் மற்றும் ரிஷபத்தில் இருக்கும் ராகு, சுக்கிரனை போல செயல்படுவார் என்ற விதி இருந்தாலும் பெரும்பாலும் இந்த வீடுகளில் இருக்கும் ராகு பேராசையை உண்டு பண்ணுகிறார்.

இந்த ராகு தசை காலத்தில் பெரும்பாலும் பேராசை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். (மூளைச் சலவை செய்தல், அடுத்தவரின் அறியாமையை பயன்படுத்தி பொருளீட்டுதல், ஏமாற்றுதல், அடுத்தவரின் நிலத்தை அவருக்கு தெரியாமல் அபகரித்தல், மது போதை, மது தொழில், மாது, பெண்கள் விஷயத்தில் ஏற்படும் அளவுக்கு அதிகமான போதை) என இவை அனைத்துமே ராகுவின் காரகத்துவம்)

இதனால் ஏற்படக் கூடிய விளைவுகளை ராகு தசை முடிவதற்குள்ளாகவே வெளிச்சத்திற்கு கொண்டு வந்து நிற்க வைத்து விடுவார். சினிமா துறை, லாட்டரி, பத்திரிகை துறையில் ஒருவர் புகழ் பெறுதல், மிகப்பெரும் ஜோதிடர் ஆக்குதல், அரசியலில் உச்சத்திற்கு கொண்டு செல்லுதல், ஒரு தனி மனிதன் பார்க்கும் வேலைகளில் உயர்வினை அளித்தல் என அனைத்துமே ராகு சுபர் தொடர்பு பெற்று தசா நடக்கும் பொழுது அவர் சுபத்துவம் ஆன பல பலன்களை வாரி வழங்குகிறார்.

ராகு கொடுக்கும் வளர்ச்சிகளை ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக ஏற்றுக் கொண்டாலே, ராகு தசையும் யோகமாக அமையும் அடுத்து வர இருக்கும் குரு தசையும் யோகமாக அமையும். ராகுவிற்கு பரிகாரமாக, முக்கியமாக முன்னோர்களுக்கு திதி கொடுத்தல், பைரவர் வழிபாடு, உணவு தானம் கொடுத்தல் போன்றவை ராகு தசையில் சிறந்த பரிகாரமாக அமையும். ராகுகால, சிவ வழிபாடு மிகுந்த நன்மை தரும்.