வெள்ளிக்கிழமை நல்ல நாளே கிடையாது!

154

வெள்ளிக்கிழமை நல்ல நாளே கிடையாது!

திருமாங்கல்யம் மாற்றுவதற்கு வெள்ளிக்கிழமை நல்ல நாளே கிடையாது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எந்த ஒரு பெண்ணிற்கும் முக்கியமானது என்னவென்று கேட்டால் அது திருமாங்கல்யம் என்றுதான் சொல்வார்கள். ஜாதக பொருத்தம் பார்த்து, நிச்சயித்து, பந்தல்கால் நட்டு, நல்ல முகூர்த்தத்தில் ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் சொல்லி, மேள தாளங்கள் முழங்க, பெரியோர்களின் ஆசியோடு ஒரு பெண்ணின் கழுத்தில் மணமகனால் தாலி கட்டப்படுகிறது. அன்று முதல் ஒரு பெண்ணிற்கு வேலியாக அந்த தாலியே விளங்குகிறது.

தாலி கட்டிய பிறகு காலப்போக்கில் அந்த தாலியை தங்கச்சரடில் அணிந்து கொள்ளும் பெண்களும் உண்டு. மஞ்சள் கயிற்றையே கடைசி வரைக்கும் அணிந்திருக்கும் பெண்களும் உண்டு. மஞ்சள் கயிரில் அணிந்திருக்கும் பெண்களுக்கு அந்த தாலிக்கயிறை எப்போது, எப்படி மாற்ற வேண்டும் என்பது குறித்து பல சந்தேகங்கள் உண்டு.

சரி, அந்த சந்தேகங்களுக்கான விளக்கங்களை இங்கு காண்போம்.

பொதுவாகவே தாலிக்கயிறை அடிக்கடி மாற்றக் கூடாது. வருடத்திற்கு 2 முறை மட்டுமே மாற்றிக் கொள்ள வேண்டும். அதுவும், கயிறு அறுந்து விழும் நிலையில் இருக்கும் போது தான் மாற்ற வேண்டும். பெண்களுக்கு வேலியாக இருக்கக் கூடிய இந்த தாலிக்கயிறை எல்லா நாளுமே மாற்றக் கூடாது. திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 3 நாட்கள் மட்டுமே மாற்றிக் கொள்ள வேண்டும்.

ஆனால், சிலர் வெள்ளிக்கிழமை நல்ல நாள் தானே. அன்று மாற்றிக் கொள்ளலாமே என்று நினைக்கின்றனர். ஆனால், என்னதான் வெள்ளிக்கிழமை நல்ல நாளாக இருந்தாலும் சரி, பெண்கள் தங்களது கழுத்தில் இருந்து வெள்ளிக்கிழமை தாலிக்கயிறை கழற்றி மாற்றக் கூடாது. அது சிறந்தது அல்ல.

திருமாங்கல்யத்தை மாற்றும் போது பெற்ற தாய் உள்பட யாருமே பார்க்க கூடாது. தாலிக்கயிறை மாற்றி பழக்கம் இல்லாதவர்கள் வேண்டுமென்றால் பெற்ற தாயின் உதவியுடன் தாலிக்கயிறை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், அதன் பிறகு அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆடி 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு அன்று நாள், நட்சத்திரம், கிழமை என்று எதுவும் பார்க்காமல் தாலிக்கயிறை மாற்றிக் கொள்ளலாம். புதிதாக திருமணம் ஆனவர்கள் கூட ஆடி 18 ஆம் பெருக்கு அன்று தாலியை மாற்றிக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிக்கயிறானது 16 திரிகளை கொண்டது. தாலிக்கயிறை மாற்றும் போது பிரம்ம முகூர்த்தமான அதிகாலையில் தான் மாற்ற வேண்டும். குளித்து முடித்துவிட்டு, பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கிழக்கு பக்கமாக அமர்ந்து கொண்டு பழைய தாலிக் கயிறை கழற்றாமல், தாலிக்கயிற்றின் முடிச்சுகளை மட்டும் அவிழ்த்து, குண்டுகளை மட்டும் எடுத்து முதலில் புது தாலிக்கயிற்றில் கோர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அந்த புதிய தாலிக் கயிறை கழுத்தில் அணிந்த பிறகு தான் கழுத்திலிருந்து பழைய தாலிக்கயிறை கழற்ற வேண்டும். அந்த பழைய தாலிக் கயிறை நீர் நிலைகளில், ஏரிகளில் தான் விட வேண்டும்.

புதிய தாலிக்கயிற்றின் முடிச்சானது, இடது நெஞ்சு பக்கத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். திருமாங்கல்யத்திற்கு குங்குமம் வைத்து சாமி கும்பிட வேண்டும். குங்குமம் வைக்கும் போது காயத்ரி மந்திரம் சொல்வது மிகவும் சிறந்தது. திருமாங்கல்யம் மாற்றிய நாளன்று மாலை நேரத்தில் குடும்பத்தோடு அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வது நீண்ட ஆயுளையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும்.

கர்ப்பிணி பெண்கள் தாலிக்கயிறையோ அல்லது தங்க தாலி சரடையோ மாற்றக் கூடாது. பொதுவாக பெண்கள் மஞ்சள் கயிற்றில் தான் தாலி அணிவதை வழக்கமாக கொண்டிருந்தனர். ஆனால், இன்றைய காலகட்ட த்தில் வசத்திக்கு ஏற்ப தாலிக்கயிறை தங்கத்தால் செய்யப்பட்ட சரடில் அணிந்து கொள்வதை வழக்கமாக கொண்டு வருகின்றனர்.

திருமணம் ஆன பிறகு கர்ப்பம் தரித்த சில நாட்களிலேயே தாலி கயிற்றுக்கு தினமும் மஞ்சள் தேய்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர். அது பெண்களுக்கும், அவரது சேய்க்கும் பாதுகாப்பாக இருந்தது. தாலிக்கயிற்றில் மஞ்சள் இருக்கும் போது எந்த நோயையும் மார்பக பகுதியில் அண்ட விடாமல் காத்து இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டங்களில் அது மாறிவிட்ட து. மஞ்சள் தேய்த்து குளித்தால் தங்களது அழகு குறைந்துவிடும் என்று பெண்கள் நம்புகிறார்கள். அதோடு, தாலிக் கயிற்றுக்கும் மஞ்சள் தேய்ப்பது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், பெண்களுக்கு மார்பகத்தில் நோய் உண்டாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.