அனைத்து பலன்களும் தரும் குலதெய்வ வழிபாடு

0 48

அனைத்து பலன்களும் தரும் குலதெய்வ வழிபாடு

குலதெய்வ வழிபாடு என்பது பழங்காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வரும் ஒரு வழக்கம் ஆகும். குல தெய்வம் என்பதனை குலத்தினை காக்கின்ற தெய்வம் என்று பொருள் கொள்ளலாம். இவ்வழிபாடானது உலகின் பல நாடுகளில் நடைமுறையில் இருக்கிறது.  நோய்கள் நீங்கவும், பிள்ளை வரம் வேண்டியும், மழை பெய்யவும் மற்றும் சுபிட்ச வாழ்வு வேண்டியும் மக்கள் இவ்வழிபாட்டினை மேற்கொள்கின்றனர்.

குலதெய்வ வழிபாடு தோன்றிய விதம்

குலம் என்பது பல குடும்பங்களின் தொகுப்பு ஆகும். குலத்தின் உறுப்பினர்கள் யாவரும் ஒரு குறிப்பிட்ட மூதாதையரின் வழித் தோன்றல்கள் ஆவர். குலத்தின் தெய்வங்கள் பெரும்பாலும் அந்த குலத்தில் தோன்றி நல்ல செயல்களுக்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களாக இருப்பர்.KULA DEIVAM, VILLAGE, TEMPLE, SIVA, SWASTHIKTV.COM பெண்களை குல தெய்வங்களாகக் கொண்டாடுவோரும் உண்டு. இப்பெண்கள் தங்கள் வாழ்வை சமுதாயம் மற்றும் குலத்திற்கு அர்ப்பணித்தவர்களாக இருப்பர். இவ்வாறு சமுதாயத்திற்கு தங்கள் வாழ்வை அர்ப்பணித்தவர்களை நினைவுகூறும் விதமாக கற்களை ஊன்றி வழிபாடு செய்தனர். இதற்கு நடுகல் வழிபாடு முறை என்று பெயர். இந்த நடுகல் வழிபாடே பின்னாளில் குல தெய்வ வழிபாட்டு முறையாக மாறியிருக்கலாம் மேலும் மறைந்த முன்னோர் வழிபாடே குல தெய்வ வழிபாடாய் காலப்போக்கில் மாறியிருக்கும்.

குலதெய்வம் அமைந்துள்ள விதம்

பெரும்பாலும் எல்லா குல தெய்வ வழிபாட்டிலும் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு முக்கிய தெய்வங்களும் அதனைச் சுற்றிலும் 5-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களும் இடம் பெற்றிருக்கும். குல தெய்வங்கள் பொதுவாக காடு, மலை, வயல் மற்றும் சாலை வசதி இல்லாத இடங்களில்தான் அமைந்திருக்கும். பெரும்பாலும் கிராமங்களை ஒட்டியே இவ்வகைத் தெய்வங்களின் வழிபாட்டிடம் இருக்கும்.

மேலும் குலதெய்வ கோயில்கள் பெரிய அளவில் கோபுரங்களை கொண்டிருப்பதில்லை. சிறிய கோயில் அமைப்பாகத் தான் இருக்கும். இவ்வகை கோவில்கள் ஆகம முறைப்படி அமைக்கப்பட்டிருக்காது. அந்த அந்த இடத்திற்கு ஏற்றாற் போல் இருக்கும். இவை பெரும்பாலும் கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கியே அமைந்திருக்கும். பெரும்பாலும் வேம்பு அல்லது வில்வ வகை மரங்கள் குல தெய்வக் கோவில்களில் இடம் பெற்றிருக்கும்.

குலதெய்வ வழிபாட்டு முறை

குல தெய்வ வழிபாட்டில் பூஜைகள் முறைப்படி நடத்தப்படுவதில்லை. பெரும்பாலும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் விருப்பப்படி நடக்கும். அல்லது குடும்பத் தலைவர் தன் தந்தையிடம் இருந்து கற்ற முறைப்படி நடக்கும். ஒரு சிலர் குலதெய்வ வழிபாட்டினை ஆண்டிற்கு ஒருமுறையே நடத்துகின்றனர். நீர் வளம் தரும் அய்யனாரையும், மழைவேண்டி மற்றும் நோயிலிருந்து காப்பாற்ற மாரியம்மனையும் பலர் குல தெய்வமாக வழிபடுகினறனர்.

குல தெய்வத்தனைப் பற்றிய அறிய வரலாறோ அல்லது கல்வெட்டுக்களோ கிடையாது. இவற்றினை பெரும்பாலும் செவி வழிக் கதைகள் மூலம் அறியலாம். திருமணம், வீடு கட்டுதல் போன்ற விசேஷங்களின் போது முதலில் குல தெய்வத்தை வழிபட்ட பின் வேலைகளை ஆரம்பிக்கின்றனர். பிறந்த குழந்தைக்கு முதல் மொட்டை போடுதல், காது குத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் குல தெய்வக் கோயில்களிலே நடைபெறுகின்றன.

திருமணம், புதுமனை புகுவிழா, தொழில் துவங்கும் விழா போன்றவற்றின் அழைப்பிதழ்களை குல தெய்வத்திடம் வைத்து முதலில் வழிபாடு நடத்திய பின்பே பின் எல்லோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்படுகின்றன.

சுப நிகழ்ச்சிகளின் போது குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் கட்டி வைத்து குலதெய்வக் கோயிலுக்கு செல்லும் போது செலுத்திவிடுகின்றனர்.

பெரும்பாலான குல தெய்வ வழிபாடுகள் சூலம், பீடம், மரம், கல், பெட்டி போன்ற அடையாளக் குறியீடுகளைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன. குல தெய்வ வழிபாட்டில் மற்ற தெய்வங்களுக்குச் செய்யும் வழிபாடு போன்றே நடத்தப்பட்டாலும் பொங்கலிட்டு படைத்து வழிபாடு நடத்தும் வழக்கம் இதன் தனிச் சிறப்பாகும்.

காணிக்கை அளித்தல், தீ மிதித்தல், தீச்சட்டி எடுத்தல், தொட்டில் கட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளும் குல தெய்வ கோயில்களில் நடத்தப்படுகின்றன.

குல தெய்வ வழிபாட்டில் சைவ வழிபாட்டு முறை, அசைவ வழிபாட்டு முறை என்று இரு வகைகள் உள்ளன. சைவ வழிபாட்டு முறையில் பொங்கலிட்டு படையலிடும் வழக்கமும், அசைவ வழிபாட்டு முறையில் ஆடு, கோழி, சேவல், பன்றி போன்றவற்றை பலியிடும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. சில இடங்களில் சுருட்டு, சாராயம், கருவாடு போன்றவற்றை படையல் செய்து வழிபாடு நடத்துவது நடைபெறுகின்றது.

வழிபாட்டின் போது கரகாட்டம், தெருக்கூத்து ஆகியவற்றின் மூலம் குல தெய்வ வரலாறு விளக்கப்படுகிறது. குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது பற்றி குறி கேட்டல், உத்தரவு கேட்டல், போன்ற நிகழ்ச்சிகள் உள்ளன.

குலதெய்வ வழிபாட்டின் நம்பிக்கைகள்

இவ்வழிபாட்டினை மேற்கொள்வதால் தங்கள் குடும்பத்துக்கும், உறுப்பினர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படாது வளமையான வாழ்க்கை கிடைப்பதாக மக்கள் கருதுகின்றனர். குல தெய்வ வழிபாடில்லாமல் தொடங்கும் எந்த ஒரு செயலும் நன்றாக முடிவதில்லை. எனவே இவ்வழிபாடு எல்லாவற்றிலும் முதன்மையானது என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகின்றது.

வருடத்திற்கு ஒருமுறையாவது குல தெய்வ கோவிலுக்குச் சென்று வழிபாடு மேற்கொள்கின்றனர். எந்த ஒரு நல்ல காரியத்திற்கும் முதல் வழிபாடு குல தெய்வத்திற்கு நடைபெறும். அதன் பிறகு தான் மற்ற நிகழ்ச்சிகளை துவக்குவதும் நாம் கூப்பிடாமல் உதவி செய்யும் தெய்வம் குல தெய்வம் என்கின்ற கருத்தும் மக்களிடம் நிலவுகிறது.

குல தெய்வத்தை மறப்பது பெற்றோரை மறப்பது போன்றது. மேலும் குல தெய்வ சாபம் வம்சத்தை சீரழிக்கும் போன்றவற்றை மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். குல தெய்வ வழிபாடு பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் காணப்படுகிறது.

தொல்காப்பியத்தில் நடுகல் நடும் முறை பற்றி கூறப்பட்டுள்ளது. எனவே குல தெய்வ வழிபாடு பழங்காலம் தொட்டே நடைபெற்று வந்துள்ளது என்பதை அறியலாம்.

குலம் தெரியாமல் போனாலும் குல தெய்வம் தெரியாமல் போகக்கூடாது. குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்கக் கூடாது ஆகியவை குலதெய்வம் குறித்த பழமொழிகள் ஆகும்.

தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து குழுவாக வழிபடும் விழாவாக குல தெய்வ வழிபாடு உள்ளது. இவ்வழிபாடானது மக்களை நெறிப்படுத்துவதோடு அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது. இந்த‌ பாரம்பரிய பழக்கம் இன்றும் கடைப்பிடிக்கப் பட்டு வருவது போற்றுதலுக்குரிய ஒன்றாகும்.

#swasthiktv #swasthiktv.com #spiritual #spirituality #devotionalwebtv #devotion #spiritualwebtv #sivaperuman #hindudevotionalwebtv #hinduspiritualwebtv #swasthiktv24X7LiveTv

Send Your Feedback at : [email protected]

whatsapp----2To Receive Our Daily Devotional News Update on Whatsapp Type MSG with Your name to 8124516666

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.