ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம்….!

0 237

    ஐந்தே நிமிடத்தில் சுந்தரகாண்டம்….!

சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் உண்டாகும் நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும். எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும்,
வாழ்வில் நம்பிக்கை ஏற்படும்.

 நோய்கள் விலகும். ராமச்சந்திர மூர்த்தியையும், ராமபக்தனான அனுமனையும் மனதில் தியானித்து, இந்த எளிய சுந்தரகாண்டத்தைப் படிப்போருக்கு வாழ்வில் எல்லா நன்மைகளும் வந்துசேரும். சுந்தர காண்டம் என்று பெயர் சொல்லுவார், இதை சுகம் தரும் சொர்க்கம் என்று மனதில் கொள்வார், கண்டேன் சீதையை என்று காகுஸ்தனிடம் சொன்ன,கருணைமிகு ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயர் பெருமையிது, அஞ்சனை தனயன் அலைகடல் தாண்டவே, ஆயத்தமாகி நின்றான், அனைத்து வானரங்களும், அங்கதனும், ஜாம்பவானும் அன்புடன் விடை கொடுத்து வழியனுப்பினரே!

 வானவர்கள் தானவர்கள் வருணாத் தேவர்கள் வழியெல்லாம் சூழ நின்று பூமாரி பொழிந்தனரே! மைநாக பர்வதம் மாருதியை உபசரிக்க மகிழ்வுடன் மாருதியும் மைநாகனைத் திருப்தி செய்து, சுரசையை வெற்றி கண்டு ஹிம்சை வதம் செய்து சாகசமாய் சமுத்திரத்தை தாண்டியே இலங்கை சேர்ந்தான்.

 இடக்காகப் பேசிய இலங்கையின் தேவதையை இடக்கையால் தண்டித்து இலங்கையைக் கலக்கினான். அழகான இலங்கையில் அன்னை ஜானகியை அங்கும் இங்கும் தேடியே அசோக வனத்தை அடைந்தான். கிம்சுபா மரத்தடியில் ஸ்ரீராமனைத் தியானம் செய்யும் சீதா பிராட்டியைக் கண்டு சித்தம் கலங்கினான்.

 ராவணன் வெகுண்டிட, ராட்சசியர் அரண்டிட வைதேகி கலங்கிட, வந்தான் துயர் துடைக்க கணையாழியைக் கொடுத்து ஜெயராமன் சரிதம் சொல்லி சூடாமணியைப் பெற்றுக் கொண்ட சுந்தர ஆஞ்சநேயர் அன்னையின் கண்ணீர் கொண்டு, அரக்கர் மேல் கோபம் கொண்டு, அசோகவனம் அழித்து அனைவரையும் ஒழித்தான்.

 பிரம்மாஸ்திரத்தால் பிணைத்திட்ட ஆஞ்சநேயர் பட்டாபிராமன் பெயர் சொல்ல வெகுண்ட இலங்கை வேந்தன் வையுங்கள் தீ வாலுக்கென்றான். வைத்த நெருப்பினால் வெந்ததே இலங்கை நகரம். அரக்கனின் அகந்தையை அழித்திட்ட அனுமானும் அன்னை ஜானகியிடம் அனுமதி பெற்றுக் கொண்டு ஆகாய மார்க்கத்தில் தாவி வந்தான். அன்னையைக் கண்டுவிட்ட ஆனந்தத்தில் மெய் மறந்தான். ஆறாத சோகத்தில் ஆழ்ந்திருந்த ஸ்ரீராமனிடம் ஆஞ்சநேயர் “கண்டேன் சீதையை என்றான்.

 வைதேகி வாய்மொழியை அடையாளமாகக் கூறி சொல்லின் செல்வன் ஆஞ்சநேயர் சூடாமணியைக் கொடுத்தான், மனம் கனிந்து மாருதியை மார்போடணைத்து ஸ்ரீராமர் மைதிலியை சீறை மீட்க சித்தமானார். ஆழ்கடலில் அற்புதமாய் அணை கட்டி படைகள் சூழ அனுமானும், இலக்குவனும் உடன் புறப்பட்டனர்.

 அழித்திட்டான் இராவணனை ஒழித்திட்டான் அதர்மத்தை அயோத்தி சென்று ஸ்ரீராமர் அகிலம் புகழ ஆட்சி செய்தான். அவனை சரண் அடைந்தோருக்கு அவன் அருள் என்றும் உண்டு. எங்கே எங்கே ரகுநாத கீர்த்தனமோ அங்கே அங்கே சிரம் மேல் கரம் குவித்து மனம் உருகி நீர் சொரிந்து ஆனந்தத்தில் மூழ்கி இருக்கும் ஆஞ்சநேயா! உன்னைப் பணிகின்றோம், பன்முறை உன்னை பணிகின்றோம், பன்முறை உன்னைப் பணிகின்றோம்!!

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.