பௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”

0 402

பௌர்ணமி பௌர்ணமியின் விசேஷம் – “சந்திர மண்டல மத்யகா”

 பராசக்தி இல்லாத இடம் ஏதுமில்லை. ஆனால் மனசுக்குப் பிடிப்பு உண்டாவதற்காக அவளுக்குப் மணித்வீபம், ஸ்ரீபுரம் உள்பட சில வாஸஸ்தானங்களைச் சொல்லியிருக்கிறது.

 தியானம் செய்வதற்குப் பரம சௌக்கியமாக இன்னொரு வாஸஸ்தானமும்  சொல்லியிருக்கிறது. ‘லலிதா ஸஹஸ்ரநாமத்’தின் பலச்ருதியில் சொல்லியிருக்கிற இந்த முறையில் பல மகான்கள் அவளுடைய இருப்பிடத்தைத் தியானம் செய்து பரமானந்தத்தை அநுபவிக்கிறார்கள்.

 அது என்ன என்றால், பூரண சந்திர மண்டலத்திற்குள் அம்பாள் அமர்ந்திருப்பதாகத் தியானம் செய்வதாகும். ஸஹஸ்ர நாமத்திலேயே ‘சந்திர மண்டல மத்யகா’ என்று ஒரு நாமம் வருகிறது.

 பார்க்கப் பார்க்கத் தெவிட்டாத அழகுள்ளது சந்திரன். நிலாச் சாப்பாடு, நிலா வெளிச்சத்தில் பாட்டுக் கச்சேரி எல்லாம் வைத்துக் கொண்டு சந்தோஷப்படுகிறோம். இருந்தாலும் எலெக்ட்ரிக் ஜோடனை அதிகமாகிவிட்ட இக்காலத்தவர்களுக்குச் சந்திரன் அருமை தெரிந்திருக்க நியாயமில்லை.

 சீதளமான அதன் பிரகாசம் அலாதியானது. கண்ணை உறுத்தாத ஒளி வாய்ந்தது சந்திரன். அதிலும் பௌர்ணமி சந்திரனின் அழகு விசேஷம். இந்த அழகு விசேஷமாகத் தெரிய வேண்டும் என்பதற்கே ஈசுவரநியதியில் முப்பது நாட்களுக்கு ஒரு முறைதான் பூர்ணிமை வருகிறது. தினமும் பௌர்ணமி இருந்தால் பூரண சந்திரனில் நாம் இத்தனை சந்தோஷம் அடைய முடியாது. இந்தப் பூரண சந்திரமண்டலத்தை முதலில் தியானித்து, அதில் அம்பாளைத் தியானிக்க வேண்டும்.

 பூரண சந்திரனைத் தியானிக்கிற போதே மனசும் அது போல் குளிர்ந்து போகிறது. அங்கே துக்கத்துக்கும் துவேஷத்துக்கும் இடமில்லாமல் சாந்தமாகிறது. வெளிப் பிரபஞ்சமெல்லாம் ஜீவனுக்குள்ளே இருக்கிறது. அண்டத்திலுள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு என்பார்கள். சகல ஜீவராசிகளுக்கும் அந்தராத்மாவாக இருக்கிற பராசக்தியின் மனஸே சந்திரனாக ஆகியிருக்கிறது. ‘புருஷ ஸூக்த’த்தில் இப்படித்தான் சொல்லியிருக்கிறது (சந்த்ரமா மனஸோ ஜாத ) இதனால் ஜீவராசிகளின் மனத்துக்கும் சந்திரனுக்கும் சம்பந்தம் இருக்கிறது.

  இங்கிலீஷில் சித்தப் பிரமை பிடித்தவர்களை lunatic என்கிறார்கள். Lunar என்றாலே சந்திரனைப் பற்றியது என்றுதான் அர்த்தம். இது சித்தத்தின் விபரீத நிலையைச் சந்திரனோடு சேர்த்துச் சொல்கிறது. சித்த சுத்திக்கு அதே சந்திர மண்டலத்தில் அம்பாள் தியானத்தை நம் சாஸ்திரங்கள் சொல்கின்றன.

 சந்திரனில் அம்பாள் அமர்ந்திருப்பதாகச் தியானிக்க வேண்டும். அவ்வாறு அம்பாளை சந்திர மண்டல வாஸினியாக தியானித்தால், நம் மனமும் அவள் மனத்திலிருந்து வந்த சந்திரனைப்போல் குளிர்ச்சி அடையும். சந்திரன் தாபத்தைப் போக்குவதுபோல் நம் தாபமும் சமனமாகும். சந்திரிகையில் இருட்டு விலகுகிற மாதிரி அஞ்ஞானம் விலகும்.

 காளிதாஸர் ‘தேசிக ரூபேண தர்சிதாப்புதயாம்’, ‘குரு வடிவத்தில் வந்து தன் மகிமையைக் காட்டுகிறவள்’ என்று அம்பிகையை வர்ணிக்கிறார். எனவே சந்திரமண்டலத்தில் குரு பாதத்தையும் தியானிக்கலாம். நம் தாபங்கள் விலகவும், ஞானப்பிரகாசம் உண்டாகவும், நாம் எல்லோரிடம் குளிர்ந்து இருக்கவும் இம்மாதிரி சந்திர மண்டலத்தில் அம்பாளையோ, குரு பாதுகையையோ தியானிக்க வேண்டும்.

பெரியவா சரணம் 🙏

 

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.