கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவெள்ளக் குளம் (அண்ணன் பெருமாள் கோயில்),

0 349

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் திருவெள்ளக்குளம் (அண்ணன் பெருமாள் கோயில்), திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம்

‘கண்ணார் கடல்போல் திருமேனி கரியாய்
நண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னுநாங்கூர்
திண்ணார் மதிள்சூழ் திருவெள்ளக்குளத்துள்
அண்ணா! அடியேன் இடரைக் களையாயே!’

– திருமங்கையாழ்வார்

  சீர்காழியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் உள்ள திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று அண்ணன் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் திருவெள்ளக் குளம் என்னும் திவ்ய தேசம். 108 திவ்ய தேசங்களில் சோழ நாட்டுத் திருப்பதிகளில் இது 38ஆவது இடம் பெற்றுள்ள திருக்கோயிலாகும். இயற்கை எழில் கொஞ்ச, மிகவும் ரம்மியமாக அமைந்துள்ளது.

எல்லோருடைய தெய்வமும் அன்னை ஸ்ரீ வாலை திரிபுரசுந்தரி

தலபுராணம்

 துந்துகுமாரன் என்ற அரசனின் மைந்தனாகப் பிறந்த சுவேதன் என்னும் பாலகன் தனது ஒன்பதாம் வயதில் இறக்கும்படியாக விதியைப் பெற்றிருந்தான். இதனால் அவனும் அவன் தகப்பனும் மிகக் கலக்கமடையை, வசிட்ட மாமுனியின் அறிவுரைப்படி இத்தலத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாளின் முன்பாக நரசிம்ம மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை ஒரு மாதகாலம் சொல்லி, சிரஞ்சீவியானான். இத்தலத்தில் நரசிம்ம மிருத்யுஞ்ஜெய மந்திரத்தை எண்ணாயிரம் முறை ஜெபிப்போர் எம பயம் நீங்குவர்.

 சோழ மன்னனின் வீர தளபதியாகத் தன் வாழ்வைத் துவங்கி திருமங்கை நாட்டுக்கு மன்னனான நீலன் இங்கு இக்குளத்தில் மலர் கொய்ய வந்த குமுதவல்லியைக் கண்டு மையலுற்று அவளை மணக்க விரும்ப, அவளோ தினமும் ஆயிரம் வைணவர்களுக்கு அன்னமிட வேண்டுமென நிபந்தனை விதிக்க, அவ்வாறே செய்ய முயன்று அதில் தன் செல்வம், நாடு அனைத்தையும் அளித்து, இறுதியில் கொள்ளைக்காரனாக மாறி கோவிந்தன் கால்விரல் அணியைக் கடித்து தன் பிறப்பின் மேன்மையையும் தான் பூவுலகுக்கு வந்த காரணத்தையும் அறிந்து ஆழ்வானாய், அகிலத்தையும் அதில் உறைந்த அனந்தனையும் உணர்ந்த ஞானியான் ஆன திருமங்கையாழ்வான் குமுதவல்லியை மணம் புரிந்த தலமும்.

  இத்தலத்தில் உள்ள பெருமாள் சீனிவாசன், கண்ணன் நாராயணன் என்று வழங்கப்படுகிறார். திருப்பதி வெங்கடேசப் பெருமாளுக்கு அண்ணன் என்பதால் இக்கோயில் அண்ணன் பெருமாள் கோயில் என்று வழக்கில் மாறியதாயிற்று. உற்சவர் பெயரும் சீனிவாசன் என்பதாகும். தாயாரின் திருப்பெயர் அலர்மேல் மங்கை என்பதாகும்.

தலச்சிறப்பு:

திருப்பதிக்கு அண்ணன் முறை என்பதால், அங்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடன்களை நிறைவேற்ற இயலாது போனால், இங்கு நிறைவேற்றிக் கொள்ளலாம். எமயபம் நீக்குவதான இத்தலம், சைவர்களுக்கு எவ்வாறு திருக்கடையூரோ அதைப்போல வைணவர்களுக்கானதாகும். அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், இத்தலத்து சுவேத புஷ்கரணியில் நீராடினால் கழிந்து விடும் என்பது நம்பிக்கை. எந்தக் கிரகத்தால் எத்தகைய துன்பம் அனுபவிக்க நேரிட்டாலும், இங்கு வந்து புஷ்கரணியில் நீராடி அண்ணன் பெருமாளை தரிசித்தால் அவை யாவும் நொடியில் விலகி விடும் என்பதும் நம்பிக்கை. சகல தோஷங்களுக்கும் இது சிறந்த பரிகாரத் தலமாகும். மணவாள முனிவருக்கும் பெருமாள் காட்சி தந்த தலமாகும் இது. ஸ்ரீ ருத்ரனுக்கும் இங்கு பெருமாள் பிரத்யட்சமானார் என்பர்.

வேலன் தகப்பன் விரும்பிய மைத்துனனாம்
மாலன் தனையெண்ணின் மாசு மனம்விடுக்கக்
கால பயமகலும் காலந்தாழ்த் தாதவன்
கால்பிடித் துய்வோம் கதி.

ஓம் நமோ நாராயணா!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.