கோபுர தரிசனம் கோடி புண்ணியம் புருஷோத்தமர் திருக்கோயில், திருவெண் புருடோத்தமம்

0 131

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் புருஷோத்தமர் திருக்கோயில், திருவெண் புருடோத்தமம்

‘பல்லவம் திகழ்பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில்
ஒல்லை வந்திறப்பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோவில்
நல்லவெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம்
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.’

-திருமங்கையாழ்வார்

 சீர்காழியிலிருந்து சுமார் 10 கிமீ தொலைவில் திருநாங்கூர் திருத்தலத்தில் உள்ள மிகச் சிறிய அழகிய திருக்கோயிலான திருவெண் புருடோத்தமம் வைணவர்களின் 108 திவ்ய தேசங்களுள், சோழத் திருப்பதிகளில் முப்பதாவது இடம் பெற்றதாகும். அரிமேய விண்ணகரத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது இது.

தலபுராணம்

 சைவர்களுக்கு சீர்காழி திருத்தலம் போல வைணவர்களுக்கு திருவெண் புருடோத்தமம் ஆகும். இங்கு மலர் கொய்து இறைவனுக்குச் சாத்தும் கைங்கர்யம் செய்து வந்த வியாக்ரபாதர் என்னும் முனிவர் ஒரு நாள் தன் மகனை நந்தவனத்தில் அமர்த்தி விட்டுச் செல்ல, பசி பொறுக்காது பிள்ளை அழவே அது பாற்கடலில் அறிதுயிலிலிருந்த அரியவன் கேட்டு அந்த நந்தவனத்தில் ஒரு பாற்கடலையே உருவாக்கி அந்தச் சிசுவின் பசியை அமர்த்தினான். அப்பிள்ளையே உபமன்யு என்னும் பெயர் கொண்ட மகரிஷியாகிப் பின்னாளில் பிள்ளைப் பேறு வேண்டிய கிருஷ்ணனுக்கு சிவனை நோக்கிப் பாசுபத விரதம் இருக்குமாறு வழிகாட்டியவர் எனக் கூறுவர்.

  கல்லாத இடையனைக் கவியாக்கிய காளிபோல இங்கும் ஓர் கதை உண்டு. மூடனென்று ஊராரால் கேலி செய்யப்பட்ட குமேதஸ் என்பவன் இங்கு வந்து இத்தல மூர்த்தியை வேண்டி ஞானம் பெற்றான் என்று சொல்வதுண்டு. திருமங்கையாழ்வார் ஸ்ரீராம பிரானாக மங்களாசாசனம் செய்து தொழுத இத்தலத்தில் மூலவர் புருஷோத்தமர் ஆவார். தாயாரின் திவ்ய நாமம் புருஷோத்தம நாயகி என்பதாகும்.

தலச்சிறப்பு

 எம்பெருமானே பாற்கடலை இங்கு உருவாக்கி சிறுபிள்ளையின் பசி தீர்த்து சிசு நேசனாக இங்கு விளங்கினான் என்பதால், பிள்ளை வரம் வேண்டுவோருக்கு இது பிரதானமான வைணவத் தலமாகும். அது மட்டுமல்லாது, மேற்சொன்னது போல, இங்கு உருவான பாற்கடலை அருந்தி பசிதீர்ந்த உபமன்யு மகரிஷி பின்னாளில் கண்ணனுக்கு பாசுபத விரதம் அனுஷ்டிக்க உபதேசம் செய்து அவன் புத்திரன் பெறுவதற்கு வழி செய்தார் என்பதும் இத்தலத்தின் பெருமையே.

 எத்தலத்திற்கும் சென்றால் அருள் கிட்டும் எனில் இத்தலத்தைப் பற்றிக் கேட்டாலே அருள் கிட்டும் என திருமங்கையாழ்வார் கூறுகிறார். இங்கு ஒரு மண்டலம் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து வழிபட்டால் தீராத கவலைகளும் தீர்ந்து விடும். திருச்சியை அடுத்து உத்தமர் கோயில் என்று அழைக்கப்படும் திருக்கரம்பனூர் திவ்ய தேசத்தை அடுத்து இங்குதான் புருஷோத்தமனுக்கு தனிக்கோயிலும் சந்நிதியும் உள்ளன என்பது சிறப்பு. இங்கு ராமர் சந்நதியில் கைகட்டி, வாய் பொத்திய நிலையில் உள்ள அனுமன் மிக விசேஷமானவர்.

பாலகன் பசிதீர்க்கப் பாற்கடலுரு வாக்கிஅவன்
சீலத்திரு மகனாகச் செழித்திடவே செய்தவனாம்
ஓலம்நிறுத் தியருள் உத்தமனின் அடிதொழுதல்
சாலச்சி றந்தததெனச் சான்றோர்தம் அருள்வாக்கே!

ஓம் நமோ நாராயணா!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.