கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்!

0 335

 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் இன்று பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்

கோபுர தரிசனம் கோடி அருள்மிகு பழநி தண்டாயுதபாணி சுவாமி  திருக்கோயில்

இது மூன்றாம் படை வீடு ஆகும். இந்த தலத்தை அருணகிரி நாதர் மற்றும் நக்கீரர் பாடி உள்ளனர். திருப்புகழில் அருணகிரியார் இந்த பழனி மலை முருகனைத் தான் அதிக பாடல்களில் பாடி உள்ளார். மலைக்கோயிலுக்கு 690 படிகள் கடந்து செல்ல வேண்டும். பழநி மலையில் முருகன் கோயில் கொண்டிருக்கும் கருவறையில் பழநியாண்டவர் அருகில் ஒரு சிறிய பேழை இருக்கிறது. அப்பெட்டியில் ஸ்படிகலிங்க ரூபத்தில் சிவபெருமானும் உமாதேவியும் இருக்கிறார்கள்.

இவர்களை பழநி ஆண்டவர் பூஜிப்பதாக ஐதிகம். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், “தண்டாயுதபாணி” என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இங்கு வந்த போகர் சித்தர், முருகனுக்கு நவபாஷாணத்தால் ஒரு சிலை வடித்தார். இந்த மூர்த்தியே மலைக்கோயிலில் மூலவராக காட்சி தருகிறார். முருகனின் கையில் உள்ள தண்டத்தில் ஒரு கிளி உள்ளது. அந்த கிளி அருணகிரியாரின் வடிவமாகப் போற்றப்படுகிறது.

மூலவர் ஆண்டிக் கோலத்தில் அருளுகிறார். தினமும் இரவு இவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்படுகிறது. அதைக் காணவே பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரளாக வருகின்றனர். ஆறுபடை வீடுகளில் இங்கு மட்டுமே முருகன் நவபாஷன சிலையால் ஆனவர். பழனி செல்பவர்கள் இங்கு உள்ள பெரியவுடயரையும், பெரியநாயகியும் தரிசித்து செல்கின்றனர்.

தைப்பூச திருவிழா, பெரியநாயகி அம்மன் கோயிலிலேயே நடக்கிறது. விழாவின்போது, இங்குள்ள உற்சவர் முத்துக்குமாரசுவாமி தினமும் எழுந்தருளுவார். பழனியில் மூன்று கோலங்களில் முருகனைத் தரிசனம் செய்யலாம். பெரியநாயகி கோவிலில் வள்ளி, தேவசேன சமேதராகவும், மலையாடிவரத்தில் திரு ஆவினங்குடியில் மயில் மீது அமர்ந்து குழந்தை வடிவிலும், மலை மீது தண்டபாணி தெய்வமாகவும் அருளுகிறார்.

இங்கு மட்டுமே ஆறுபடை வீடுகளில் அன்ன அபிஷேகம் நடைபெறுகிறது. ஆனி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மலைக்கோயிலில் அருளும் தண்டாயுதபாணிக்கு உச்சிக்காலத்திலும், ஆனி மூல நட்சத்திரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதருக்கு சாயரட்சை பூஜையின்போதும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. இதற்கு அடுத்த இரண்டு நாட்களில் பூராடம் நட்சத்திரத்தில் பெரியநாயகி கோயிலிலும், உத்திராடம் நட்சத்திரத்தில் பெரியாவுடையார் கோயிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. சேரமான் பெருமான் என்னும் மன்னரால் இந்த கோவில் கட்டப்பட்டு பின்னர் நாயக்கர் காலத்தில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு உள்ளன. இங்கு மட்டுமே சித்தராகிய போகருக்கு சமாதி உள்ளது.

சூரசம்ஹாரத்துக்கு முருகன் மலையில் இருந்து கீழே இறங்கி வருகிறார். மலை கோவில் செல்லும் வழியில் உள்ள இடும்பன் தோளில் மலையை தாங்கிய நிலையில் உள்ளார். இடும்பனுக்கு பூஜை செய்த பிறகே தண்டபாணிக்கு பூஜை நடைபெறும். இங்கு மலைப் பாதை துவங்கும் இடத்தில் பாத விநாயகர் உள்ளார். இவரை வணங்கிய பின்பே தங்கள் யாத்திரையை துவங்குகின்றனர்.

 பழனி பஞ்சாமிர்தம் உலக புகழ் பெற்றது. இங்கு தினமும் தங்க ரத பவனி நடைபெறுகிறது. உற்சவர் முத்துக்குமார சுவாமி. அக்னிநட்சத்திர காலங்களில் இங்கு கிரிவலம் செய்தல் சிறப்பு. இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு கொண்டு செல்ல சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை எடுத்து வந்தான். வழியில் இத்தலத்தில் பாரம் தாங்காத இடும்பன் மலைகளை கீழே வைத்து விட்டான். இதில் சக்திகிரி அம்பிகையின் அம்சம், சிவகிரி சிவனின் அம்சம். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்று கொண்டார். இடும்பன் அவரை இறங்கும்படி சொல்லியும் கேட்கவில்லை. இடும்பன் அவரை எதிர்க்கத் துணிந்தான். அவனுக்கு தன் அருட்பார்வையை செலுத்தி, தன்னுடன் வைத்துக் கொண்டார் முருகன்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.