கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு திருநள்ளாற்று கோவில்

0 886

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் அருள்மிகு திருநள்ளாற்று கோவில்

 நவக்கிரக மூர்த்திகளில் சனிபகவான் நிரம்பவும் பெருமை உடையவர். ஈஸ்வரனுக்கு சமமாக அவருக்கு மட்டுமே ஈஸ்வரப்பட்டம் இருக்கிறது. அதனாலேயே சனீஸ்வரன் என்று போற்றப்படுகிறார்.

 சனீஸ்வர மூர்த்தியை வழிபட்டே தசரத மகாராஜா பலகாரியங்களில் வெற்றி அடைந்திருக்கிறார். புரூவரசு சக்கரவர்த்தியும், நளச்சக்கரவர்த்தியும் சனிபகவானை வழிபட்டே புகழும், சிறப்பும் எய்தி ஆட்சி செய்திருக்கிறார்கள்.

 இந்த தலம் ஆதிகாலத்தில் பிரமதேவர் பூஜை செய்ததால் ஆதிபுரி, தருப்பாரண்யம், நகவிடங்கபுரம், நளேச்சுரம் என்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. இந்நான்கு பெயர்களும் முறையே நான்கு யுகங்களுக்கும் வழங்கப்படுகின்றன. நளன் என்னும் பெயர் சொல்லின் “அன்” விகுதி கெட்டு ஆறு என்னும் சொற்புணர்ந்து நள்ளாறு என்றாயிற்று. அதாவது நளனுக்கு நன்னெறி காட்டிய தலம் என்று பொருள்படும். நல்லாறு என்பது நள்ளாறு என மருவி அழைக்கப்படுகிறது.

 திருநள்ளாற்று கோவில் கிழக்கு நோக்கி திசையில் உள்ளதாகும். இரண்டு திருச்சுற்று மதில்கள் உள்ளன. இறைவர் சன்னதி கிழக்கு முகமாகவும், அம்மையார் சன்னதி முதல்பிரகாரத்தில் சோபன மண்டபத்தில் தெற்கு முகமாகவும் இருக்கிறது. சனீசுவர பகவான் சன்னதி கிழக்கு முகமாய் அம்மையார் சன்னதிக்கு முன்புறம் அமைந்துள்ளது.

 திருநள்ளாற்றுக் கோவில் அழகும், அருளும் நிறைந்த ஓர் கலைக்கோவிலாகும். கோவிலை வலம் வரும்போது தெற்கு உட்பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்களின் உருவங்கள் காணப்படுகின்றன.

 இக்கோவிலின் நீண்ட வெளிப்பிரகாரத்தை வலம் வந்தால் அருள்மிகு காளத்தியப்பர் சன்னதிக்கு வந்து சேரலாம். இக்கோவில் ஓரு சிற்றாலயமாக எழிலுற அமைந்திருக்கிறது. காளத்தியப்பர் சிவஜோதியாக வீற்றிருக்கிறார். இத்தலம் சனி பகவானுக்கு மட்டுமில்லாமல் ராகு, கேது இவர்களுக்காகவும் வழிபட வேண்டிய தலமாகும்.

 ஸ்ரீசனிபகவான் சன்னதி இரண்டாவது கோபுர வாயிலின் வலது புறமாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. பொதுவாக சனிபகவான் சன்னதி மேற்கு நோக்கியே இருக்கும். உக்ரமூர்த்தியாகிய சனீஸ்வரன் இங்கு அனுக்கிரக தேவதையாக கிழக்கு நோக்கி அபயமுத்திரையுடன் அருள் வழங்குகின்றார். ஏனைய நவக்கிரகங்கள் இத்தலத்தில் தனியாக பிரதிஷ்டை செய்யப்படவில்லை என்பதும் இவருடைய முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.

 நளச்சக்கரவர்த்தியை துன்புறுத்தி கொண்டிருந்த ஸ்ரீசனிபகவான் நளன் ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரரை வந்து வணங்கி தரிசித்தவுடன் விலகி விடுகின்றார். பின்பு எம்பெருமானுடைய அருளாணையின் வண்ணம் பக்தர்களுக்கு அருள் வழங்கும் அனுக்ரக மூர்த்தியாக ஈஸ்வரப்பட்டம் பெற்றுக்கொண்டு துவார தேவதையாக இரண்டாவது கோபுர வாயிலில் விளங்குகின்றார்.

 இங்கு நளன் விடுதலை பெற்று திருப்பணிகள் செய்து முடித்து திருக்கோவில் அமைத்து இறைவனை பூசித்தான். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நல்ல எண்ணத்தினால் நளன் இறைவனிடத்தில் வரங்களை வேண்டினான். இங்கு என்னைப்போல் ஸ்ரீசனிபகவானை வந்து வணங்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ சனிபகவான் அருள்செய்து துன்பம் போக்கி நலம்பல செய்திடல் வேண்டும் என்று ஒரு வரமும். இரண்டாவதாக இத்தலத்தின் ஒருகாத விஸ்தீரணம் பரப்புகளில் சனிபகவான் அனுக்கிரஹ பார்வை உடையவராக இங்கு இருப்பவர்களுக்கு நன்மையளிக்க வேண்டும் என்று ஒரு வரமும்.

நீங்கள் ராஜ யோகத்தை அடைய வேண்டுமா

 மூன்றாவதாக, இந்த பகுதிக்கு இன்று முதல் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் என் பெயரில் விளங்கிட வேண்டும் என்று வேண்டினான். சனிபகவானும் மகிழ்ந்து ஏற்றுக்கொண்டு அவ்வாறு அருள் செய்தனர். ஆகையால் இங்கு நளனுக்கு விமோசனம் அளித்தபடியால் இறைவனுக்கு ஸ்ரீநளேஸ்வரர் என்ற பெயரும் திருக்குளத்திற்கு நளத்தீர்த்தம் என்ற பெயரும் இவ்வூருக்கு திருநள்ளாறு என்ற பெயரும் விளங்கலாயிற்று.

 முதலில் நளதீர்த்தம் சென்று அந்த தீர்த்த குளத்தை வலமாக பிரதட்சிணம் செய்து குளத்தின் நடுவில் இருக்கும் நளச்சக்கரவர்த்தி தமயந்தி குழந்தைகளின் உருவச்சிலைகளை வணங்கி வழிபடுதல் வேண்டும். பின்னர் நல்லெண்ணெயை தலையில் தேய்த்துக் கொண்டு வடக்கு முகமாகவோ அல்லது கிழக்கு முகமாகவோ ஒன்பது முறை ஸ்நானம் செய்து தலை முழுக்காட வேண்டும்.

 பின்னர் பிரம்ம தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம் ஆகிய திருக்குளத்திலும் தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம். பிறகு கோவிலுக்குள் நுழைந்து வலமாக வந்து ஸ்ரீசொர்ண கணபதியை முதலில் வழிபட்டு ஸ்ரீசுப்ரமணியர் சன்னதியை தரிசனம் செய்துக்கொண்டு, மூலஸ்தானமாகிய ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரருக்கு அர்ச்சனை பூஜைகள் செய்து ஸ்ரீ தியாகேசர் சன்னதியை தரிசிக்க வேண்டும்.

 பிறகு இரண்டாவது முறை வலமாக வந்து அம்மன் சன்னதியை அடைந்து அர்ச்சனை பூஜைகள் முடித்துக்கொண்டு கடைசியாக ஸ்ரீசனிபகவான் சன்னதியில் வந்து வழிபடுதல் வேண்டும். அவரவர்களுடையே வசதிக்கும், சக்திக்கும் ஏற்றபடி ஸ்ரீசனிபகவானுக்கு அர்ச்சனை, தீபாராதனை, அபிஷேகம், ஜபம், ஹோமம், தர்ப்பணம், தானம் முதலியன செய்யலாம். காலை, மாலை இரு வேளையிலும் ஸ்ரீசனிபகவானை நவப்பிரதட்சிணம் செய்வது நல்ல பயன் தரும்.

புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் பகுதியில் திருநள்ளாறு அமைந்துள்ளது. காரைக்காலுக்கு மேற்கே 5 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் 45 கி.மீ தொலைவிலும், மயிலாடுத்துறையிலிருந்து 30 கி.மீ தொலைவிலும், நாகப்பட்டினத்தில் இருந்து 23 கி.மீ தொலைவிலும் உள்ளது.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png9941510000     Related image8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.