கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், சிதம்பரம்

0 221

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், சிதம்பரம்

‘காயோடு நீடு கனியுண்டு வீசு கடுங்கால்

நுகர்ந்து நெடுங்காலம், ஐந்து

தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா

திருமார்பனைச் சிந்தையுள் வைத்துமென்பீர்

வாயோது வேதம் மல்கின்ற தொல்சீர்

மறையாளர் நாளும் முறையால் வளர்த்த

தீயோங்க வோங்கப் புகழோங்கு

தில்லைத் திருச்சித்ர கூடம் சென்றுசேர் மின்களே.’

-திருமங்கையாழ்வார்

perumal-swasthiktv (1)

 சிவாலயத்துடன் இணைந்த வைணவத் தலங்கள் மிக அரிது. அவற்றுள் பிரதானமானது, திருச்சியை அடுத்த திருக்கரம்பனூரும், திருச்சித்ர கூடம் எனப்படும் இத்தலமுமாகும். சிதம்பரம் நடராஜப் பெருமானின் கோயில் வளாகத்தினுள்ளாகவே மிகவும் அழகாக அமைந்துள்ள இத்திருக்கோயில் சோழ நாட்டுத் திருப்பதிகளுள் நாற்பதாவதாகும். குலசேகராழ்வார் மற்றும் திருமங்கையாழ்வார் ஆகிய இருவராலும் மங்களா சாசனம் செய்விக்கப் பெற்றது.

தலபுராணம்:

 கண்ணபிரானாக கலியுக மூர்த்தி ஸ்ரீமன் நாராயணன் திரு அவதாரம் எடுத்தபோது, சிவன் அவனுடைய அழகிய காளிங்க நர்த்தனத்தைக் காண வந்தான் என்று ஊத்துக்காடு வேங்கட சுப்பையர் பாடலில்,  ‘ஆடலைக் காண தில்லை அம்பலத் திறைவனும் – தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான்’ என்று மிக அழகான ஒரு சரணம் உண்டு.

 அதைப்போல, பாற்கடலில் பள்ளி கொண்ட பரந்தாமன் தில்லையம்பல நடராசனின் திருத்தாண்டவம் காண விழைந்தான் ஒரு நாள். இங்கு வந்து கனகசபாபதியின் கவின்மிகு நடனம் கண்டபின் திரும்பிச் செல்ல மனமில்லாது இங்கேயே கோவிந்தராஜனாக உறைந்து விட்டான் என்பது இத்தலபுராணம்.
காவிரியன்னையின் அருள்வாக்குப்படி கலிங்க மன்னன் இங்கு வந்து பெருமாளை தரிசனம் செய்து முக்தி அடைந்ததாகக் கூறுவர். அசுரகுலத்தைச் சேர்ந்த தில்லி என்பவள் பெருமாள் உறையும் வனமாகத் தானிருக்க வேண்டும் என்று தவமிருந்ததாகவும், அவ்வண்ணமே வனமாலி இங்குவந்து தனது பாற்கடல் சயனத் தோற்றத்தில் கிடந்த நிலையில் அருளியதாகவும் கூறுவதுமுண்டு.

 பல புராணக் கதைகளைப் போலவே, வரலாற்றிலும் இக்கோயில் முக்கியமான இடம் பெற்றுள்ளது. தில்லை நடராசர் கோயிலை விஸ்தரிக்க விரும்பிய இரண்டாம் குலோத்துங்கன், கோவிந்தராஜப் பெருமாளை கடல் கொள்ளச் செய்ததாகக் கூறுவர். ஆயினும், இந்நாளில் சைவ – வைணவ ஒற்றுமைக்கு ஒரு உரைகல்லாகவே இத்தலத்தைக் கொள்வர்.

 கிழக்கு நோக்கிய சயனத் திருக்கோலத்தில் கோவிந்தராஜனாக பெருமாள் காட்சியளிக்கிறார். இவருக்குப் பார்த்தசாரதி, சக்கரவர்த்தி திருமகன் என்ற பெயர்களும் வழங்குவதுண்டு. உற்சவர் தேவாதி தேவன். தாயாரின் திவ்ய நாமம் புண்டரிகவல்லி என்பதாகும்.

தலச் சிறப்பு:

 ஈசன் நடனத்தை எம்பெருமான் விரும்பிக் கண்ட இடம் ஆதலால், நடனம் முதலான கலைத்துறையில் சிறந்து விளங்க விரும்புவோர் இங்கு பிரார்த்தனை செய்து கொண்டால், தம் விருப்பம் ஈடேறக் காணலாம்.

Lord Vishnu, Thiruvempavai, Andal, Sri rangam, Tamil nadu, Tamil, Songs, Thiruppavai

 நாராயணனின் நாபிக்கமலத்தில் இருப்பவரான பிரம்மன் இங்கு நின்ற திருக்கோலத்தில் தாமும் சிவனின் தாண்டவத்தை ரசிக்கும் நிலையில் காட்சியளிக்கிறார்.
சிவ பார்வதி நடனத்தில் பெருமாள் தீர்ப்பு சொல்லவந்த தலம் ஆதலால், நீதி வழுவாமல் இருக்கவும் இத்தலம் சிறப்புடையது என்பர்.

  பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமான இங்கு மகாவிஷ்ணு ஆகாயத்தை பார்த்தபடி இருப்பதும் தனிச்சிறப்பு. வியாபாரத்தில் சீருடன் இருக்கவும், அலுவலகப் பணிகளில் முன்னுக்கு வரவும் இத்தல கோவிந்தராஜப் பெருமாளை வேண்டிக் கொண்டால் நிறைவேறும்.
உடல் ஆரோக்கியத்துடன் திகழவும் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்.  செயற்கரிய செயல் செய்து பெரும் புகழ் பெற விழைவாருக்குமானது இச் சேத்திரம்.

ஆடுகின்ற அம்பலனைக் காணவந்த அனந்தனவன்
நாடியிங்கு நின்றுவிட்ட நல்லபெரும் தலமிங்கு
கூடுகின்ற மாந்தரவர் குறைநீங்கிச் செல்வாரே
பாடுவோரின் வாய்மணக்கச் செய்கின்ற பெம்மானை
ஏடுபுகழ் தில்லைராசன் மைத்துனனை ஏத்துநெஞ்சே.

ஓம் நமோ நாராயணாய!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.