கோபுர தரிசனம் கோடி புண்ணியம் முருகனின் அறுபடை வீடு பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில்

0 209

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் முருகனின் அறுபடை வீடு பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 6-வது படை வீடாகத் திகழ்வது பழமுதிர்ச்சோலை ஸ்ரீ சோலைமலை முருகன் திருக்கோயில். மற்ற படைவீடுகளுக்கு இல்லாத ஒரு தனிச்சிறப்பு இக்கோயிலுக்கு உள்ளது. இங்கு திருமாலும், திருமுருகனும் குடிகொண்டு அருள்புரிகின்றனர். சைவ, வைணவ ஒற்றுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாய் இத்திருத்தலம் விளங்குகிறது.

ganapati01

அமைவிடம் :

 மதுரை மாவட்டத்திலிருந்து வடக்கே 20 கி.மீ. தூரத்தில் உள்ளது பழமுதிர்ச்சோலை. திருமாலின் திருக்கோயிலான, சுந்தராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் அழகராக அவர் நின்று அருள்புரியும் அழகர்கோயில் திருத்தலத்தில் அமைந்திருப்பது பழமுதிர்ச்சோலை.

பழமுதிர்ச்சோலை :

 மலைக்குரிய கடவுளாகிய முருகவேலுக்குரிய இம்மலை இயற்கை வளத்தால் பசுங்காடும், சோலையும் நிறைந்து காண்பவர் கண்களுக்குப் பசுந்தழைகளால் போர்த்தப்பட்டு இனிய தோற்றத்துடன் காணப்பட்டதால், சோலை மலையாயிற்று. பழமுதிர்ச்சோலை எனும் இத்தலப் பெயருக்கு பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை எனவும் பொருள் கொள்ளலாம். இவ்விடத்திற்கு மாலிருங்குன்றம், இருங்குன்றம், திருமாலிருஞ் சோலை, அழகர் மலை என்ற பெயர்களும் வழங்கப் படுகின்றன.

valli_vedar_murugan

மாலும்-முருகனும் :

 பெருமாளும் அழகியவர், முருகன் என்றாலும் அழகுடையவன் என்று பொருள்படும். சுந்தரராஜன் என்றாலும் அழகுடைய பெருமாளைக் குறிக்கிறது. மிகப்பழமையான திருத்தலங்களில் அழகர் கோயிலும் ஒன்று.

 திருமுருகாற்றுப் படையைத் தவிர, இதர சங்க இலக்கியங்களில், அழகர் கோயில் சிறந்த விஷ்ணுத் தலமாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் மலையடிவாரத்தில் புகழ்மிக்க விஷ்ணு ஆலயம் உள்ளது. திருமலையைப் போன்ற இனிய தோற்றமுடையதாக இருப்பதால் திருப்பதி திருமலைக்குச் செல்ல முடியாதவர்கள் இம்மலையை வணங்கி வழிபடலாம்.

முருகன் அடியார்கள் :

திருமுருகாற்றுப் படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை கூறியருள்கின்றார். புராண வரலாறுகளிலும், இலக்கியங்களிலும், பழமுதிர்ச்சோலை தலம், முருகஸ்தலம் என்பதற்கான ஆதாரம் ஏதும் இல்லை.

கந்தபுராணத் துதிப்பாடலில் கச்சியப்ப சிவாச்சாரியார், வள்ளியம்மையைத் திருமணம் புரிய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார்கள். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர். ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற “நூபுர கங்கை” என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

சைவ-வைணவ ஒற்றுமை :

 அழகர்கோயில் அடிவாரத்தில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் நின்றகோலத்தில் அருள்பாலிக்கிறார். அழகர் கோயிலில் உள்ள மூலவருக்கு கள்ளழகர் என்பது திருநாமம். மலையலங்காரன் என்றும் வழங்கப்பட்டு வருகிறது.

 இங்கே கோயில் கொண்டுள்ள பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விசேஷ நாளல்ல. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு உகந்த வெள்ளிக்கிழமையே விசேஷ நாளாகும். அன்று பூவங்கி சாத்தப்படுகிறது. அன்று தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. தவிர பெரும்பாலும் அர்ச்சனைக்கு அரளி புஷ்பமே சாற்றப்படுகிறது. மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல் பக்தர்களுக்குத் துளசி வினியோகிப்பது கிடையாது.

 இக்கோயிலில் உற்சவம் ரதோச்வ காலங்களில் வரும் பெரும்பாலான மக்களுக்கும் அர்ச்சனை செய்பவர்களுக்கும் விபூதி தான் கொடுத்து வருகிறார்கள். துளசி எப்போதும் கொடுப்பதில்லை. கோயில் மூலஸ்தானத்திலேயே சோலை மலைக்குமரன் எனும் வெள்ளி விக்ரகம் இருந்து வருவதுடன் பஞ்சலோகத்தில் சக்கரத்தாழ்வார் மூலவரைப் போன்று உற்சவ விக்ரகமும் இருந்து வருகிறது.

 இத்திருத்தலம் வைணவத் தலமாகவும், குமார தலமாகவும் விளங்கி சிவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.