கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வான்முட்டிப் பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை

0 361

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் வான்முட்டிப் பெருமாள் திருக்கோயில், கோழிகுத்தி, மயிலாடுதுறை

 மயிலாடுதுறை – கும்பகோணம் மார்க்கத்தில், மயிலாடுதுறையிலிருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவில் உள்ள இத்திருத்தலத்தில் எம்பெருமான் பதினாறு அடி உயரத்தில் வானை முட்டும் பெருமாளாகக் காட்சியளிக்கிறார். பிரதான சாலையிலிருந்து கிராமத்தில் சற்று உட்புறமாக அமைந்துள்ள இத்திருக்கோயில், வாழ்வில் ஒரு முறை தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலங்களுள் ஒன்று.

இருகோலங்களில் ஆண்டாளை தரிசித்தால் திருமணம்

தலபுராணம்:

 நிர்மலன் என்னும் குடகுமலை நாட்டரசன் பாவ வினைகளால் குட்ட நோயால் பீடிக்கப்பட்டு மிகவும் துன்புறுங்காலை, பக்தவஸ்லனான பத்மநாபன் அசரீரி வடிவில், காவிரிக்கரையில் இருக்கும் தலங்கள் அனைத்திலும் நீராடுமாறும், எங்கு மார்க்கசகாயேஸ்வரர் (சிவபெருமான்) வழி காட்டுகிறாரோ அங்கு நீராடுகையில் அவன் நோய் தீரும் என்றும் உரைக்க, அவ்வாறே செய்த மன்னன் இங்கு மூவலூர் என்னும் சிற்றூரில் எழுந்தருளியுள்ள மார்க்கசகாயேஸ்வரரின் வழிகாட்டுதலின்படி இங்கு வந்து நீராடவும், அவன் நோய் அகன்று, உடல் பொன்னிறமானது.

 மன்னனின் கோடி ஹத்திப் பாவமும் இங்கு தொலைந்த காரணத்தால், இவ்வூர் கோடி ஹத்தி என்று பெயர் பெற்று, நாளடைவில் கோழிகுத்தி என்று மருவியது.
தன் நோயும், வினையும் நீங்கிய மன்னன் மனமகிழ்ந்து அத்தி மரத்தால் செய்வித்த ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

 வானை முட்டுமளவு உயரமானதால் நெல்லை அளக்கும் மரக்காலை அவருக்குக் கிரீடமாக அணிவித்துக் கட்டுப்படுத்தியதாகக் கதை உண்டு. பெருமாளின் திருவடிகள் இன்னமும் அத்திமரத்தாலேயே இருக்கின்றன. அது இப்போதும் இயல்பான நிறத்திலேயே இருப்பதை சிறப்பாகக் கூறுகின்றனர்.

 தனது முற்பிறப்பில் நிர்மலன் என்ற மன்னனாக இருந்த பீப்பலர் என்னும் மகரிஷிக்கே இவ்வாறு நோய் கண்டதாகவும், இங்கு அவர் தன் பாவம் அகலப் பெற்றதாகவும் கூறுவதுமுண்டு.

 பீப்பலருக்கு அருளியதைப் போல, சரபோஜி மன்னருக்கும் பெருமாள் இங்கு சங்குசக்கிரத்துடன் காட்சி தந்ததாகவும், அம்மன்னர் எழுப்பிய சிலையே தற்போது மூலவராகவுள்ள வான்முட்டிப் பெருமாள் என்றும் கூறுகின்றனர்.

மூலவருக்கு வான் முட்டிப் பெருமாள் என்று பிரபலமாக வழங்குகிறார்கள். பக்த வத்சலன், வரதராஜன் என்ற பெயர்கள் கொண்டும் அழைக்கிறார்கள். உற்சவர் யோக நரசிம்மர் ஆவார்.
திருமாலின் மார்பில் வாழும் தாயாரின் திவ்ய நாமம் தயாலட்சுமி என்பதாகும்.

தலச்சிறப்பு:

 இக்கோயிலை ஒட்டியுள்ள காவிரியை பீப்பலர் மகரிஷி தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். இதில் நீராடினால் சரும நோய்கள் விலகும், வினைகள் தொலையும் என்பது நம்பிக்கை. இங்குள்ள அனுமன் சப்தஸ்வர ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். இச்சிலையில் தட்டினால் வெவ்வேறு இடங்களில் ஏழிசை கேட்கும் என்பர்.

 சனீஸ்வரனால் பீடிக்கப்பட்டவர்கள், ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள், அர்தாஷ்டம, ஏழரை, அஷ்டம சனியால் வருந்துபவர்கள் ஆகியோருக்கு சனி ப்ரீதித் தலமாக இது விளங்குகிறது. சனீஸ்வரனால் ஏற்படும் தொல்லைகள் அனைத்தும் இங்கு விலகும்.

 இங்குள்ள சப்தஸ்வர ஆஞ்சநேயரை வழிபட்டால், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்று கூறுகிறார்கள்.  இங்குள்ள பெருமாளை வணங்கி பீப்பல மஹரிஷியின் சனி காய்த்ரி மந்திரத்தை ஓதுவது சிறப்புத்தரும்:

ஓம் கோணஸ்த பிங்கலே பப்ரு கிருஷ்ணோ ரௌத்ராந்த கோயம்
சௌரீ – சனைச்ரே மந்த பிப்பலா தேன ஸமஸ்ஸதுத்
ஏதானி தச நாமானி பிராத ருத்தாய ய : படேத்
சனைச்சர கிருதா பீட நகதாசித் பவிஷ்யதி

 இது பிதுர் தோஷங்களை நீக்கும் இடமாகவும் கருதப்படுகிறது.

எப்பா வமும்போக்கும் எம்பெரு மானருளா
தப்பா மலிங்கே தயாளனாய் நின்றாயென்
அப்பாஎன் ஆரமுதா ஆரணங்கு வாழ்மார்பா
அப்பால் உனையன்றி ஆருண்டு அன்பாலே
எப்போதும் காத்தாய் எனை.

ஓம் நமோ நாராயணா!

For Details and news updates contact:

 Send Your Feedback at : [email protected]

Image result for mobile icon png+91-9941510000     Related image+91-8124516666  Image result for youtube subscribe pnghttps://www.facebook.com/swasthiktv/

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.