குருபூர்ணிமா புண்ணியப் பொழுதின் தொடக்கம்!

0 1,095

பிறக்கின்ற பொழுது விடிவெள்ளிப் பொழுதாம். பௌர்ணமி. அதுவும் குருபூர்ணிமா புண்ணியப் பொழுதின் தொடக்கம்.

நிறைவான தூய மனத்தோடே நம் குருநாத்ஜனைத் தொழ வேண்டிய அற்புதமான பொழுது.

சடசடத்தபடியாக புகைவண்டி சற்றேத் தள்ளாட்டத்தினோடு திண்டுகல்லிலிருந்து சென்னையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பொழுதிலே அன்பான் அன்னை Saraswathi Thyagarajan அவர்களிடமிருந்து அற்புதமான திருப்புகழ் சந்தம் கிட்டியதோடு, குருப்புகழ் எழுதிட கட்டளையும் கிட்டிய பாக்கியமான பொழுது.

அவர் கருணை யன்றி ஏதணுவும் இயங்கிடுமோ சிறியேனாம்.நாயினின் உள்ளத்துள்ளே! சங்கரா..!

பிரபஞ்சம் உண்டான பொழுதர்கு முன்னமாயும் தோன்றிய குருஸ்வரூபங்கள், தெய்வங்கள், தேவர்கள், தேவதைகள், ரிஷிகள், முனிவர்கள், ஆசார்யர்கள், சித்தர்கள், சத்புருஷர்கள் அனைவரையும் அடியேன் கலியுகத் தெய்வமான கண்கண்ட அம்மையப்பனான உம்மாச்சீயாம் ஸ்ரீசரணரின் உருவினிலேயே ஸ்மரித்துத் தொடங்குகிறேன்… இன்னுமொரு குருப்புகழினை அவருடைய அருள்கொண்டே!

சங்கரம்.போற்றி!

ஹர ஹர சங்கர… ஜய ஜய சங்கர…

#குருப்புகழ்

திருவருள் புரிய குருபரனு ருவிலு
மெமக்கென பரவிய ……. அவதாரம்

மனமதில் இருளை அகற்றிடு மொளியு
மருள்தரு சந்திர …….. சேகரனாய்

அறுவகை சமய அறமுறை யருளு
மதிகுரு சங்கர …….. அவதாரம்

அருவுரு மனதி னழுக்குகள் போக்கு
மதிசுக மான …….. குருநாதா

கருமுகத் திறைவி உறைதலக் காஞ்சீ
மதிமுக மான …….. சன்னதியில்

நதிமதி சுந்தர வனிதையு மேவிய
திருமட பதியுறை ……. சங்கரனே

கறுவுடை மனதுஞ் சுகமுற ஞான
வொளியுட னாக்கி ….. உனைநாடி

கழலிணை பணியு மடியவர் வாழ்வு
மணமிக வாக்கும் ……. பெருமானே!

என்ன நினைத்தேனோ யானறியேன்; எதை எழுதினமோ தானறியேன்; எல்லாம் வல்ல சற்குருவின் பாதாரவிந்தத்தினை ஸ்மரிக்க மட்டிலும் ஓர் பாக்கியம் அவர் அருள்வாரென்றால் அதுவே இக்கடமுள்ளே ப்ராணசக்தியைக் கூட்டித் தருகிறதாம். இதுவே சத்தியம்.

சத்யம்…சத்யம்…சங்கர சாந்நித்யம்!

சர்வம் ஸ்ரீசந்த்ரசேகரம்.

எத்தனைச் சொன்னாலும் தகும் எம் ஐயனின் கீர்த்திக்கும் கருணைக்கும் மஹிமைக்கும். இல்லையா பின்னே..? சத்தாரா யாத்திரையின் போது வழியிலே தங்குமிடத்தே பக்தன் ஒருவன் அனுதினமும் பால், தயிர் கொணர்ந்து கொடுத்ததற்காக, அங்கிருந்து கிளம்புகையில் அந்த பக்தன் வசித்த வீட்டைத் தேடிச் சென்று (ஓரிரு நாள் நடைபயணமாக இருப்பினும் கூட) அவர் வீட்டில் இல்லாத போதிலும் அந்தத் திண்ணையிலே அமர்ந்து தவம் செய்து அந்த பக்தனுக்கு கடாக்ஷம் வழங்கிய நிகழ்வை ப்ரும்மஸ்ரீ ஏகாம்பர சாஸ்திரிகள் கூற கேட்டறிந்தது இன்னமும் மனதுள்ளே ரீங்காரமாய்…! எவ்ளோ கருணை அவருக்கு..?!!!

இந்நொடியில் பிறப்புற்றிருக்கும் எல்லா ஜீவிதங்களும் நன்றாய் வாழவும், இக்கலியினில் பிறந்து கடம் நீத்து கதி தேடிடும் அத்துனை ஆன்மாக்களுக்கும் நற்கதி கிட்டிடவும், இனி பிறக்கவுள்ள ஒவ்வொரு பிறப்பிலும் குருகடச்க்ஷம் நிறைந்தமையாக எல்லோரும் பிறக்கவும் ப்ரார்த்தித்துக் கொண்டு ஹேமலம்ப வருஷத்திய குருபூர்ணிமா ஆரம்பப்ம்பொழுதினிலே ஸ்ரீசரண கமலபாதம்க்களிலே இந்த குருப்புகழ் மாலையைச் சமர்ப்பிக்கின்றேன்.

குருவுண்டு – பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்.

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.